செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள மலேசிய பிரதமருக்கு அழைப்பு


சென்னை : உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, மலேசிய பிரதமருக்கு, முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்தார்.

சென்னை வந்துள்ள மலேசிய பிரதமர் முகமது நஜீப் துன் ரஜாக் மற்றும் அந்நாட்டு அமைச்சர்களை, முதல்வர் கருணாநிதி நேற்று மாலை சந்தித்தார். துணை முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலர், நிதித் துறைச் செயலர், தொழில்துறைச் செயலர், பொதுத் துறை செயலர் ஆகியோரும் உடன் சென்றனர். இந்த சந்திப்பின் போது, மலேசிய பிரதமரிடம் முதல்வர் கருணாநிதி கூறியதாவது: மலேசியாவில் உள்ள அனைத்து இனத்தைச் சார்ந்தவர்களையும் குறிப்பாக இந்திய வம்சாவளியினரையும் சமமாக பாவித்து, அவர்களுக்கு நல்வாய்ப்புகள் வழங்க, பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். 1998ம் ஆண்டு மலேசிய பிரதமராக மகாதீர் முகமது இருந்த போது, மலேசியாவுக்கு வந்துள்ளேன். இரண்டு நாடுகளுக்கும் பயனுள்ள பல்வேறு கருத்துக்களை அவருடன் பகிர்ந்து கொண்டோம். வரும் ஜூன் மாதம், கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். முதல் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடந்தது. தமிழ் மொழி தொன்மையான பேச்சு வழக்கில் உள்ள மொழி. மத்திய அரசு தற்போது இதற்கு செம்மொழி தகுதியை வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சான்றோர் பலர், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பதோடு, ஆய்வுக் கட்டுரைகளை வழங்கவும் முன்வந்துள்ளனர். முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய மலேசியாவில் இருந்து, தங்கள் தலைமையில் ஒரு குழு இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். தெற்காசிய பகுதியில் மருத்துவத் துறையில் அனைத்து வசதிகளையும் கொண்டதாக, தமிழகம் விளங்குகிறது. உலகத் தரத்தில் சிகிச்சை அளிக்கும் சிறந்த மருத்துவமனைகள் இங்கே உள்ளன. மேலும், சுற்றுலா பயணிகளைக் கவரக் கூடிய முக்கியமான இடமாகவும் தமிழகம் இருப்பதால், உலகம் முழுவதும் இருந்து சிகிச்சைக்கும், ஓய்வுக்கும் வெளிநாட்டினர் அடிக்கடி வந்து செல்கின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள மருத்துவ வசதிகளை மலேசிய நாட்டினரும் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறந்த உயர்கல்வியை வழங்கக் கூடிய கட்டமைப்பைக் கொண்டதாக தமிழகம் விளங்குகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அண்ணா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் போன்வற்றுடன் மலேசிய பல்கலைகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்ய முன்வர வேண்டும்.

உலகளவில் பொருளாதார மந்தநிலை இருந்த போதும், தமிழகம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும், 37 நிதிநிறுவனங்கள் தமிழகத்தில் 46 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழிலகங்களை நிறுவ முன்வந்துள்ளன. மலேசியாவில் உள்ள முதலீட்டாளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். மேலும், தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு கட்டமைப்புப் பணிகளில், மலேசிய நிறுவனங்களும் பங்கேற்கலாம். இவ்வாறு முதல்வர் கூறினார்.

மலேசிய பிரதமர் தன்னுடன் வந்திருந்த அமைச்சர்களையும், முதல்வர்களையும், தமிழக முதல்வருக்கு அறிமுகப்படுத்தினார். தமிழகத்துக்கு வெளியே மிக அதிகமாக தமிழ்ப் பள்ளிகள், மலேசியாவில் தான் இருப்பதாகவும், அந்தப் பள்ளிகளுக்கு அதிக நிதியை அரசு ஒதுக்குவதாகவும், உலகத் தமிழ் மாநாட்டுக்கு மலேசிய அரசின் சார்பில் அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அனுப்பி வைப்பதாகவும், மலேசிய பிரதமர் அப்போது தெரிவித்தார்.

Post a Comment

0 Comments