இலங்கையில் அதிபர் தேர்தல் : தமிழர் ஓட்டுகள் யாருக்கு?


இலங்கையில் அதிபர் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பது தமிழர் ஓட்டுகள் என்பதால், அந்த ஓட்டுகளை பெறுவதில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டுகின்றனர். தமிழர்கட்சித் தலைவர்களின் திடீர் அணிமாற்றத்தால் வெற்றி வியூகங்கள் மாறிவருகின்றன.

இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கிறது. இதில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான மகிந்த ராஜபக்ஷேவுக்கும், புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளரும் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்கும் தான் போட்டி. இலங்கையில் 6வது அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இது. தற்போதைய அதிபர் பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், உள்நாட்டுப்போர் முடிவை இலக்காக வைத்து அதிபர் தேர்தல், குறித்த காலத்துக்கு முன்பே நடத்தப்படுகிறது. இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இலங்கையில் வாக்காளர் எண்ணிக்கை ஒரு கோடியே 40 லட்சத்து 88 ஆயிரத்து 500. கடந்த தேர்தலை விட ஒரு லட்சம் பேர் அதிகம். இதுவரை நடந்த தேர்தல்களில் 1982ம் ஆண்டு ஆறு பேரும், '89ல் மூன்று பேரும், '94ல் ஆறு பேரும், '99ல் 13 பேரும் களத்தில் நின்றுள்ளனர். இந்த தேர்தலில் 22 பேர் களத்தில் உள்ளனர். முதலாவது தேர்தலில் இலங்கைத் தமிழர் காங்கிரஸ் வேட்பாளராக குமார் பொன்னம் பலம் என்ற தமிழர் போட்டியிட்டு ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 934 ஓட்டுகளைப் பெற்றார். இதைத் தொடர்ந்து வந்த தேர்தல்களில் தமிழர்கள் யாரும் போட்டியிடவில்லை. இந்த தேர்தலில் தற்போதைய எம்.பி., சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய கூட்டணியில் இருந்து பிரிந்து சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

இலங்கையில், சிங்களர் இனத்தைச் சேர்ந்தவர்கள் 77 சதவீதமும், தமிழர்கள் 17 சதவீதமும், முஸ்லிம்கள் 8 சதவீதமும், மற்றவர்கள் 3 சதவீதமும் வசிக்கின்றனர். சிங்களர் வசிக்கும் பகுதிகளில் முக்கிய வேட்பாளர்கள் இருவரும், கட்சி செல்வாக்கு மற்றும் கூட்டணி அடிப்படையில், சரிவிகித ஓட்டுகளைப் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வெற்றியை நிர்ண யிப் பது, தமிழர் மற்றும் முஸ்லிம் ஓட்டுகள் தான். தமிழர்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் தீவிர பிரசாரத்தை இரண்டு வேட்பாளர்களும் முடுக்கிவிட்டுள்ளனர். தமிழர் கட்சிகளான ஈ.பி.டி.பி.,- இ.பி. ஆர்.எல்.எப்., பிளாட், தமிழ் மக் கள் விடுதலைப்புலிகள், டெலொ அமைப்பின் ஒரு பிரிவு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ராஜபக்ஷேவின் இலங்கை சுதந்திர கட்சி கூட்டணி வைத்துள்ளது. வடக்கு கிழக்குப் பகுதிகளில் இந்த கட்சிகளுடன் இணைந்து பிரசாரம் நடக்கிறது. தமிழர்கள் வசிக்கும் சிறிய கிராமங்களில் கூட தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்டக் குழுக்கள் மூலம், வீடுவீடாக பிரசாரம் நடக்கிறது. ராஜபக்ஷே படத்துடன், வெற்றிலை சின்னம் அடங்கிய தமிழ் போஸ்டர்கள், தமிழர் வீட்டு முகப்புகளில் ஒட்டப்பட்டுள்ளன. சுதந்திர கட்சியின் வண்ணம் நீலம் என்பதால், பிரசார அலுவலகங்கள் நீல வண்ணத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் செல்வாக்குப் பெற்றுள்ள தமிழர் தலைவர்களுடன் ராஜபக்ஷே இருப்பது போன்ற கட்-அவுட்களும் வைக்கப்பட்டுள்ளன. சிறு நகரங்களில் இவற்றை அதிகம் காணமுடிந்தது.

மீன் வியாபாரம் செய்துவரும் கிழக்கு மாகாண தமிழர் கைலாசம், "இந்த கொடிகளையும் தோரணங்களையும் நாங்கள் ஏற்றுத் தான் ஆக வேண்டும். அரசின் விருப்பத்துக்கு மாறாக வாழவோ, எதையும் செய்ய வோ முடியாது. எனவே வீடுகளில் போஸ்டர் களை வைத்துள்ளோம். நாங்கள் மாற்றத்தையும் அமைதியையும் விரும்புகிறோம்' என்றார். கிழக்கு மாகாணப் பகுதியில் உள்நாட்டுப் போர் தீவிரத்தை நேரடியாக சந்தித்த இவர், போர் அகதியாக ஒருமுறை கூட இடம்பெயர்ந்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இடம்பெயராத தமிழர்களின் எண்ணம் பெரும்பாலும் இதையே பிரதிபலிக்கிறது. போரில் பாதிக்கப்பட்டு முகாம்களில் இருந்த குடும்பங்கள் இப்போது தங்கள் சொந்த கிராமங்களில் மறுபடியும் குடியேறியுள்ளனர். அந்த குடியிருப்புப் பகுதிகளிலும், நீலக்கொடியின் பிரசாரம் நிறைந்திருந்தது. மக்களின் எண்ணம் அதற்கு மாறாக இருந்தது.

வடக்கில் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக ஈ.பி.டி.பி., தீவிர பிரசாரம் செய்துவருகிறது. இந்த கட்சி வெளியிட்டுள்ள போஸ்டரில், "எமது மொழியில் எம்முடன் பேசும் அதிபர் ராஜபக்ஷேவை ஆதரியுங்கள்' என்று கேட்டுள்ளது. யாழ்ப்பாணம் பகுதியில் இதுபோன்ற போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளன. உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம், பிள்ளைகளின் பிள்ளைகள் எதிர்காலத்தை மனதில் கொண்டு ஓட்டுப்போடுங்கள், மீண்டும் வருகிறது நீலப்படைப் புரட்சி போன்ற வாசகங்களுடன் பிரசார போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் நாளிதழ்களில், மகிந்தாவுக்கு ஆதரவு கேட்டு விளம்பரங்கள் பக்கம் பக்கமாக வெளியிடப்படுகிறது. சிங்களர் வசிக்கும் கிராமங்களில், தற்போதைய அதிபர் ராஜபக்ஷே, புலிகளை ஒடுக்கியவுடன், இலங்கை மண்ணை முத்தமிட்டக் காட்சி அச்சிட்ட போஸ்டர்கள் அதிகமாக ஒட்டப்பட்டுள்ளன. தமிழர் பகுதியில் இந்த போஸ்டர்களைக் காணமுடியவில்லை. சரத் பொன்சேகா, ராணுவ சீருடையில் சல்யூட் அடிப்பது போலவும், அருகில் அவரது சின்னமான அன்னத்துடன் போஸ்டர்கள் ஒட்டப் பட்டுள்ளன. இவற்றை அரிதாகத்தான் பார்க்க முடிந்தது.

தமிழ் தேசியக் கூட்டணி, பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித் துள்ளது. சம்பந்தன் தலைமையிலான இந்த கட்சிக்கு 22 எம்.பி.,க்கள் ஆதரவு இருந்தது. கருத்து வேறுபாடுகளால் இந்த கூட்டணியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம், பிரிந்து சுயேச்சையாக போட்டியிடுகிறார். தமிழர்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூட்டணியைச் சேர்ந்த சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழ் தேசியக் கூட்டணியில், 18 எம்.பி.,க்கள் பொன்சேகாவை ஆதரிக்கின்றனர். கொழும்பில் தமிழர்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள மனோ கணேசனும் பொன்சேகாவை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இரண்டு கட்சியையும் ஆதரிக்கும் பல தமிழர் அமைப்புகள் அடிக்கடி அணி மாறிவருகின்றன. இதனால் ஆதரவில் தள்ளாட்டம் காணப்படுகிறது. ஆதரவு முடிவுகள் அடிக்கடி மாறி வருகின்றன. இதனால் தமிழர் ஓட்டுகள் அதிகளவில் எந்தப்பக்கம் சாயும் என்பதை கணிக்க முடியவில்லை.

உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்கள் இடம் பெயர்ந்து, வீடற்றவர்களாக அலைந்து திரிகின்றனர். அவர்களுக்கு ஓட்டுரிமை உள்ளதா என்பது பற்றி இரண்டு கட்சியினரும் விவாதங்களை நடத்தி வருகின்றனர். வவுனியா முகாம்களில் இன்னும் 72 ஆயிரம் பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு ஓட்டுரிமை வழங்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத் துள்ளதாக அறிவித்துள்ளது. அது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. "ஊழலற்ற ஆட்சி அமைப்போம், நமது மண்ணைக் காப்போம்' போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள், ஒட்டப்பட்டுள்ளன. சொல்லப் பட்டதை விட தமிழர்களுக்கு அதிக அதிகாரம், உள்நாட்டுப்போரில் பயங்கரவாதத்தை அடக்கி நாட்டு வளர்ச்சியில் அக்கறை, குழந்தைகளின் தரமான எதிர்காலம் என்று பல வாக்குறுதிகளை இரண்டு கட்சிகளும் அள்ளி வீசி வருகின்றன. பிரசாரங்களை கூர்மையாக சாதாரண தமிழ்மக்கள் கவனித்து வருவதாக கூறுகின்றனர். பிரசாரத்தில் உள்ள வாசகங்கள் பற்றி எந்த விதமான விமர்சனமும் அவர்களிடம் இருந்து வரவில்லை. தேர்தலைப் பார்த்து மவுனம் காக்கும் தமிழர்கள், இழந்து போன, தங்கள் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்களின் மவுனம் தான் இலங்கையின் அடுத்த அதிபரை நிர்ணயிக்கப்போகிறது.

வேட்பாளர் மனைவிகள் போட்டா போட்டி: பெண்கள் ஓட்டுகளைப் பெற வேட்பாளர் களின் மனைவிகள் களம் இறங்கியுள்ளனர். தற்போதைய அதிபர் ராஜபக்ஷே, அம்பலாங் கொட மாவட்டம் வீரகேட்டிய கிராமத்தைச் சேர்ந்தவர். அரசியல் பின்னணியுள்ள குடும்பத்தில் இவருடன் பிறந்தவர்கள் எட்டு பேர். இதில் இரண்டு பேர் தற்போதைய அரசில் எம்.பி.,யாக உள்ளனர். ஒருவர் ராணுவ அமைச்சக செயலராக உள்ளார். ராஜபக்ஷேவின் மனைவி சிரந்தி, இலங்கை கடற்படை முன்னாள் தளபதியின் மகள். 1978ம் ஆண்டு இலங்கை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர்களுக்கு மூன்று மகன்கள். மகன் யோகித ராஜபக்ஷே, கடற்படையில் உயர் அதிகாரியாக உள்ளார். கணவருக்கு ஆதரவாக சிரந்தி பிரசாரம் செய்து வருகிறார். போரின் போது இடம் பெயர்ந்து மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ள குடும்பகளை குறிவைத்து இவரது பிரசாரம் அமைந்துள்ளது.

முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத்பொன் சேகா, இலங்கை, அம்பலாங்கொட மாவட்டத்தில் கடலோர கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். ராணுவத்தில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்தவர். நினைத்ததை முடிக்கும் செயல்பாடு அதிகம் உள்ளவர் என்று இவரைப் பற்றி விமர்சனம் உள்ளது. இவரது மனைவி அனோமா; ராணுவ சேவைகள் வளர்ச்சி வாரிய தலைவியாக பணியாற்றினார். கணவர் தேர்தலில் போட்டியிடுவதால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிரசாரத்தில் குதித்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இலங்கையின் தெற்கு பகுதியில் சிங்களர்களிடம் பிரசாரம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார் அனோமா.

தேர்தல் எப்படி நடக்கிறது? இலங்கை அதிபர் தேர்தல் ஓட்டுச்சீட்டு மூலம் தான் நடக்கிறது. தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் உள்ளது. தேர்தல் நடத்த வசதியாக 22 தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இலங்கை தேசிய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், ஓட்டளிக்க உரிமை கோரலாம். ஆவணங்களை சரிபார்த்து, பெயரை பதிவு செய்து ஓட்டுப்போடும் உரிமையை, கமிஷன் வழங்கும். தற்போதைய தேர்தல் கமிஷனர் தயானந்த திசநாயகா, வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அவற்றை எந்த கட்சியும் பின்பற்றுவதாக தெரியவில்லை. வேட்பாளர்கள் தங்கள் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் என்ற கமிஷனின் அறிவிப்பை ஏற்று, சரத்பொன்சேகா, சுருக்கமாக சொத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வங்கிக் கணக்கு, வீடு, வீடுகட்ட நிலம், பென்ஸ் கார் ஆகியவை உள்ளதாகவும், அவரது மனைவி பெயரிலான நான்கு வங்கிக் கணக்குகளில் 16 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ராஜபக்ஷே சொத்துக்கணக்கு எதையும் வெளியிடவில்லை. அரசு ஊழியர்களுக்கான தபால் ஓட்டுகள் 12ம் தேதியே பதிவு செய்யப்பட்டுவிட்டன. தேர்தல் செலவு பற்றிய விதிகள் எதையும் கமிஷன் வகுத்ததாக தெரியவில்லை. பதிவாவதில் 50 சதவீத ஓட்டுகளைப் பெறுபவரையே அதிபராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியும் இலங்கை அரசியல் சட்டத்தில் உள்ளது.

Post a Comment

0 Comments