தமிழகம் தைரியம் கொடுக்கிறது சபாநாயகர் மீரா குமார் பெருமிதம்


சென்னை: சமூகவிடுதலை மற்றும்பொருளாதாரசுதந்திரத்துக்கானதொடர் போராட்டத்திற்கு தேவையான தைரியத்தை தமிழகம் எனக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது,'' என்று லோக்சபா சபாநாயகர் மீரா குமார் கூறினார்.பாபு ஜெகஜீவன்ராம் அனைத்திந்திய சமத்துவ இயக்கத்தின் தமிழக கிளையின் சார்பில், லோக்சபா சபாநாயகர் மீரா குமாருக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.

விழாவுக்கு, ஒரிசா முன்னாள் கவர்னர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.விழாவில், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் பேசியதாவது:தமிழகத்துக்கும், எங்கள் குடும்பத்திற்கும் இரண்டு தலைமுறை பந்தம் உள்ளது. எனது தந்தை, தமிழக மக்களின் மீது மிகவும் அன்பு கொண்டிருந்தார்.நீண்ட பாரம்பரியம் தமிழகத்துக்கு உண்டு. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமன்றி, சமூக நீதிக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறீர்கள். 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றும் சமூக விடுதலை,பொருளாதார சுதந்திரம் நமக்கு கிடைப்பது சவாலாக உள்ளது. இவைகளுக்கு நாம் போராட வேண்டியுள்ளது.

சமூக விடுதலைக்கும், பொருளாதார விடுதலைக்கும் நான் நடத்தும் போராட்டத்திற்கு தமிழகம் உந்து சக்தியாக இருக்கிறது. தொடர் போராட்டத்திற்குதேவையான தைரியத்தை தமிழகம் எனக்கு கொடுத்துள்ளது.இந்தியாவில் எல்லா வளமும் இருக்கிறது. சாதிய வேறுபாட்டால் துண்டு துண்டாக பிரிந்து நிற்பதால், வளர்ச்சியடைந்த நாடாக உருவாக சிரமப்பட வேண்டியுள்ளது. பார்லிமென்டில் இடஒதுக்கீடு, தீண்டாமை ஒழிப்பு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, கல்வி முன்னேற்றத்திற்கு சட்டம் இயற்றப்படுகிறது.

இந்த சட்டத்தை அமல்படுத்துவோரது மனோபாவம் சரியாக இருந்தால், சரியான வகையில் முறைப்படுத்தப்படும். இல்லையேல் சட்டம் அர்த்தமற்றதாகிவிடும்.இவ்வாறு மீரா குமார் கூறினார்.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே பேசும் போது, ""லோக்சபாவை நடத்துவது எளிதான விஷயமில்லை. மீரா குமார் முதல் பெண் சபாநாயகர் என்பதால் கவனமாக அவையை நடத்த வேண்டியுள்ளது.

சட்டம் படித்தவர் என்பதால் அவையை எளிதாகவும், சிறப்பாகவும் நடத்த முடிகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்கு இவர் மூலம் நல்லது நடக்கும் என்று பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. பெண்களுக்கான மசோதாக்களை நிறைவேற்ற இவர் உறுதுணை புரிவார் என்று, பெண்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்,'' என்றார்.

விழாவில், அனைத்திந்திய பாபு ஜெகஜீவன்ராம் சமத்துவ இயக்க தமிழக தலைவர் துறைமுகம் குப்புசாமி, தமிழக சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பன், சென்னை துறைமுகத் தலைவர் சுபாஷ்குமார், முன்னாள் தலைவர்கள் செல்வராஜ், பால்ராஜ் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனையின் முன்னாள் தலைமை அதிகாரி விஸ்வம்மாள், சென்னை துறைமுக பொதுச் செயலர் பலராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments