சீனாவின் எலக்ட்ரிக் சைக்கிளுக்கு வரவேற்பு

ஷாங்காய்: சுற்றுச்சூழலுக்கு உகந்த சீனத் தயாரிப்பான, "எலக்ட்ரிக் சைக்கிள்' மற்றும் "பைக்', ஐரோப்பாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவிலும் இதன் சந்தை இப்போது அதிகரித்து வருகிறது.சீனாவில், மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் சைக்கிள் மற்றும் பைக்குகள் கடந்த 20 ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சீனாவில் சில ஆயிரங்களே இருந்த இந்த வாகனங்கள் இப்போது, 12 கோடியாக அதிகரித்துள்ளன.சீனாவைப் பின்பற்றி, ஐரோப்பா, அமெரிக்காவிலுள்ள நிறுவனங்கள், எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கத் தொடங்கி விட்டன. குறிப்பாக, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் இவற்றுக்குப் பெரும் வரவேற்பு உள்ளது. நெதர்லாந்தில் மூன்று பேரில் ஒருவர் எலக்ட்ரிக் வாகனத்தைத் தான் வாங்குகிறார்.

ஐரோப்பாவைப் போல இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளதாக பிரபல "ஹீரோ எலக்ட்ரிக்' நிறுவன நிர்வாக இயக்குனர் நவீன் முஞ்சால் கூறியுள்ளார். இந்த விற்பனை, 2012ல் இரண்டு லட்சத்து 50 ஆயிரத்தைத் தொட்டுவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பொதுவாக, இரண்டு வகை எலக்ட்ரிக் பைக்குகள் தயாராகின்றன. ஒரு வகை பைக்கில் சைக்கிளில் இருப்பதுபோல, பெடல்கள் இருக்கும். அவற்றை இயக்குவதால், பைக்கில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் இயங்கும். மற்றொரு வகை பைக்கில், பெடல்கள் இருக்கும்; ஆனால், அவற்றை எப்போதும் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. சாதாரணமாக முழு சார்ஜ் ஏற்றப்பட்ட ஒரு பைக் ஒரு மணிநேரத்துக்கு 50 மைல்கள் செல்லும்.

Post a Comment

0 Comments