மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவன் ; கல்வி அறிவு என்னை உயர்த்தியது; மன்மோகன்


புதுடில்லி : 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வி திட்டம் இன்று முதல் அமல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கல்வி அறிவு பெறும் இளைஞர்கள் கையில் தான் இந்தியா உள்ளது என்றும், நாட்டில் அனைவரும் கல்வி கற்பது அடிப்படை உரிமை என்றும் பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். தான் கற்ற கல்வியே தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியதாகவும் அவர் கூறினார்.



நாடு முழுவதும் 6 வயதில் இருந்து 14 வயதுக்குட்டப்டட குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வி திட்டம் இன்று முதல் அமல் செய்யப்படுகிறது. பொருளாதார ரீதியாக வறுமை காரணமாக யாரும் கல்வி கற்க இயலவில்லை என்ற நிலை இருக்கக்கூடாது என்பதற்காக வடிவமைக்கப்பட்டது இந்த சட்டம். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சட்டத்தின்படி இளம் சிறார்கள் படிக்க முடியவில்லை என்ற ஏக்கம் இனி இருக்காது.



பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை : இந்த சட்டம் இன்று முதல் அமல் செய்யப்படுவதையொட்டி பிரதமர் நாட்டு மக்களுக்கு விளக்கவுரையாற்றினார். இவர் பேசுகையில் இந்தியாவின் எதிகாலம் கல்வி அறிவு பெற்ற இளைஞர்கள் கையில் உள்ளது. கல்வி அறிவு அனைவரும் பெற வேண்டிய அடிப்படை உரிமையாகிறது. இந்த சட்டத்தின் படி நாட்டில் உள்ள 6 வயது முதல் 14 வயதுக்குட்டப்பட குழந்தைகள் அடிப்படை கல்வி கற்கும் நிலை வருகிறது. இதற்கென மத்திய அரசு பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டம் நன்கு செயல்பட மத்திய , மாநில அரசுகள் இணைந்து செயலாற்ற வேண்டும். கிராமப்புறங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.



நாட்டில் பொருளாதாரம், வறுமை காரணமாக யாரும் கல்வி கற்க முடியவில்லை என்ற நிலை இனி இருக்கக்கூடாது. நான் கற்கும் போது மண்ணெண்ணெய் விளக்கில் படித்தேன் , நீண்ட தூரம் நடந்து சென்று கல்வி கற்றேன். கல்வி அறிவே என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது. வரும் காலங்களில் தூர தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது என்ற காரணத்தினாலும் யாரும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை இருக்கக்கூடாது.



குழந்தைகளின் படிப்பில் பெற்றோர்களின் அக்கறை அதிகரிக்கும் பொருட்டு பொறுப்புடன் நடந்து கொள்ள ‌வேண்டும். இத்துடன் மாநில அரசுகள் ஆரம்ப பள்ளியை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு பள்ளி என்ற நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனையாக இந்த திட்டம் கருதப்படுகிறது. தகவல் உரிமை பெறும் சட்டம், தேசிய ஊரக வேலை வாயப்பு திட்டம் போல இதுவும் ஒரு முக்கிய சட்டம் ஆகும்.

Post a Comment

0 Comments