ஜாதிவாரி கணக்கெடுப்பு : தொழில் கூட்டமைப்பு எதிர்ப்பு


புதுடில்லி : ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது முடிந்து போன விஷயம். அதற்கு மீண்டும் ஏன் உயிர் கொடுக்கிறீர்கள் என, இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹரிஸ் பரதியா கூறுகையில்,'ஜாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் திட்டத்தை இந்திய தொழில் கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கிறது. தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள், ஜாதி, மதத்தை எல்லாம் தாண்டி சென்று விட்டன. இந்த சூழ்நிலையில், ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு அவசியம் இல்லாதது' என்றார். தொழில் கூட்டமைப்பின் பொது இயக்குனர் சந்திரஜித் பானர்ஜி கூறுகையில்,'ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது முடிந்து போன விஷயம். அதற்கு மீண்டும் உயிர் கொடுப்பது கவலை அளிக்கிறது. இது அவசியமற்ற ஒரு நடவடிக்கை என, நினைக்கிறோம். தொழில் நிறுவனங்கள், இந்த தடைகளை எல்லாம் கடந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன'என்றார்.


இந்நிலையில், ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 'எனது ஜாதி இந்தியன்'என்ற பெயரில் பிரசார இயக்கம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய முன்னாள் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆரீப் முகமது கான், முன்னாள் வெளியுற துறை செயலர் சர்மா உள்ளிட்ட பிரபலங்கள், இதில் இடம் பெற்றுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, ஜாதி என கேட்கப்பட்டுள்ள இடத்தில், இந்தியன் என எழுதும்படி மக்களை வற்புத்துவதே இந்த பிரசார இயக்கத்தின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments