பா.ஜ.,வில் இணைந்தார் ஜஸ்வந்த் சிங் : அத்வானி, கட்காரி உற்சாக வரவேற்பு

புதுடில்லி : முகமது அலி ஜின்னாவை பாராட்டியதற்காக பா.ஜ., விலிருந்து கடந்தாண்டு நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங், நேற்று மீண்டும் அந்த கட்சியில் இணைந்தார். இதை பா.ஜ., தலைவர்கள் நிதின் கட்காரி, அத்வானி ஆகியோர் வரவேற்றுள்ளனர். முன்னர் இருந்த கட்சிப் பொறுப்புகள் இல்லை எனினும், அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜஸ்வந்த் சிங்(72). வெளியுறவுத் துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் பதவி வகித்தவர். இந்தியா - பாக்., பிரிவினையை மையமாக வைத்து, கடந்தாண்டு இவர் ஒரு புத்தகம் எழுதினார்.இதில், பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னாவை பாராட்டியதோடு, அவர் மதச்சார்பற்றவர் என்றும் எழுதியிருந்தார். இதனால், பா.ஜ.,வின் ஒரு தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஜஸ்வந்த் சிங்கிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் எழுதிய புத்தகத்தை குஜராத்தில் விற்பதற்கும் தடை விதித்தார் மோடி.பிரச்னை உச்சக்கட்டத்தை அடைந்ததை அடுத்து, கடந்தாண்டு ஆகஸ்டில் சிம்லாவில் பா.ஜ.,வின் மாநாடு நடந்து கொண்டிருந்த போது, ஜஸ்வந்த் சிங் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு தலைவர் பதவியில் இருந்தும் விலகும்படி கட்சியின் மூத்த தலைவர்கள் அவரை வற்புறுத்தினர்.முதலில் இதை ஏற்க மறுத்த ஜஸ்வந்த் சிங், பின்னர் ஒரு வழியாக கடந்த டிசம்பரில் அந்த பதவியில் இருந்து விலகினார். கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்டார். தன்னை வெளியேற்றிய விதத்தை மூத்த தலைவர் அத்வானி கருத்து கூறாமல் மவுனம் சாதித்தார் என்றும் ஜஸ்வந்த் குறை கூறினார். ஆனால், அவர் வெளியேற்றத்தில் அனந்தகுமார் உள்ளிட்ட சில தலைவர்கள் காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு நிதின் கட்காரி, அத்வானி போன்றோர் தொடர்ந்து கடந்த சில நாட்களாக முயற்சி மேற்கொண்டனர். இந்த முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. அத்வானி முன்னிலையில் டில்லியில் நேற்று நடந்த விழாவில், ஜஸ்வந்த் சிங் மீண்டும் பா.ஜ., வில் இணைந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கட்சியில் மீண்டும் சேர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் என் குடும்பத்தில் இணைந்துள்ளேன். இதற்காக தொடர்ந்து முயற்சி மேற்கொண்ட அத்வானிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போது, மிகவும் வருத்தப்பட்டேன்' என்றார். தன் வீட்டில் கட்சித் தலைவர் கட்காரி வந்து ஆசி கேட்டபோது, "பாவியான என்னிடமா ஆசி பெற வந்தீர்கள்' என்று கேட்டதாகக் குறிப்பிட்டார்.

பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பேசுகையில், "ஜஸ்வந்த் சிங் மீண்டும் கட்சியில் சேர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ்., பிரசாரகராக நான் இருந்த போது, அவருடன் பழக ஆரம்பித்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். அவரை முழு மனதுடன் வரவேற்கிறேன். தற்போது எனக்கு மனம் நிம்மதியாக உள்ளது' என்றார்.

பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி பேசுகையில், "இதுவரை நடந்தவை, நடந்தவையாகவே இருக்கட்டும்; கட்சியின் வளர்ச்சிக்காக ஜஸ்வந்த் சிங் முழு மூச்சுடன் பாடுபடுவார் என நம்புகிறேன்' என்றார்.இந்த விழாவில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஸ்மிருதிக்கு பதவி: இதற்கிடையே, பா.ஜ., மகளிர் அணி தலைவராக பிரபல நடிகை ஸ்மிருதி ஈரானி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், "கட்சியின் கொள்கைகளை பிரபலப்படுத்துவதற்காக 2,000 பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமென நிதின் கட்காரி கூறியுள்ளார். அவரது விருப்பம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்' என்றார்.

இதுகுறித்து கட்காரி கூறுகையில், "கடந்த லோக்சபா தேர்தலின் போது, மகாராஷ்டிராவில் கட்சியின் வெற்றிக்காக ஸ்மிருதி கடுமையாக உழைத்தார். அவர் மிகவும் திறமையானவர். அதனால் தான், இந்த பதவி அவருக்கு தரப்பட்டுள்ளது' என்றார்.

Post a Comment

0 Comments