பாலித்தீன் பைக்கு "குட்பை;' கிடைக்கும் இலவச முட்டை


மதுரை : சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு மூல காரணமாக இருப்பது பாலித்தீன் பைகள். மக்காத தன்மையுடைய இந்த பாலித்தீன், மண்ணில் கலக்கும்போது நிலத்தடி நீர் பாதிக்கிறது. வேர்கள் மூலம் மரங்களுக்கு தண்ணீர் செல்வது தடைபடுகிறது. சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, கொசு உற்பத்தியாகி சுகாதார கேடும் ஏற்படுகிறது.



ஒரு பாலித்தீன் பை மக்க, 400 ஆண்டுகளாகும் என்கிறது ஒரு புள்ளி விவரம். பல ஊர்களில் பாலித்தீன் பைகளுக்கு தடை விதித்த நிலையில், மதுரையிலும் தன்னாலான முயற்சியை செய்து வருகிறார் சின்மயானந்தம்.இவர், அண்ணாநகர் பெரியார் தெருவில், "லட்சுமி பிராய்லர்' என்ற பெயரில் சிக்கன் கடை நடத்துகிறார். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு பாலித்தீன் பையில் சிக்கன் விற்க விரும்பவில்லை.
பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஊட்ட என்ன செய்யலாம் என்று யோசித்தார். அப்போது உதித்ததுதான், "பாத்திரம் கொண்டு வந்து சிக்கன் வாங்கினால் முட்டைகள் இலவசம்!' தவிர, கிலோவிற்கு நான்கு ரூபாய் தள்ளுபடியும் தந்து அசத்துகிறார்.



அவர் கூறியதாவது:பாலித்தீன் பைகளை தவிர்க்க வேண்டும் என்று, எட்டு ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். சிக்கன் வாங்க பாத்திரத்தோடு வந்தால், ஆரம்பத்தில் கிலோவிற்கு 2 ரூபாய் தள்ளுபடி தந்தேன். மக்களிடம் வரவேற்பு இல்லை.ஆறு மாதங்களாக, பாத்திரத்தில் கறி வாங்கினால், நான்கு முட்டைகள் இலவசம் என்று அறிவித்தேன். வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போதெல்லாம் பாத்திரம் கொண்டுவரும் அளவிற்கு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதற்காக, "சென்ஸ்' மையத்தின் சுற்றுச்சூழல் விருதும் கிடைத்தது.மற்ற கடைக்காரர்களும் பின்பற்றினால், பாலித்தீன் இல்லாத நகரமாக மதுரை மாறும்.இவ்வாறு சின்மயானந்தம் கூறினார்.

Post a Comment

0 Comments