பாக்., சூதாட்டம்: புதிய "வீடியோ' அதிர்ச்சி :எல்லா போட்டியிலும் "பணம்'


லண்டன் : "தி நியூஸ் ஆப் தி வேர்ல்டு' என்ற இங்கிலாந்து பத்திரிகை பாகிஸ்தான் வீரர்களுக்கும் சூதாட்டத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து மீண்டும் புதிய "வீடியோவை' நேற்று வெளியிட்டது.லார்ட்ஸ் டெஸ்டில் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரராக இருந்த யாசிர் ஹமீத், பத்திரிகை நிருபரிடம் உரையாடும் காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன. ""பாகிஸ்தான் வீரர்கள் பெரும்பாலும் அனைத்து போட்டியிலும் சூதாட்டத்தில் ஈடுபடுவார்கள்,'' என, யாசிர் ஹமீத் நிருபரிடம் தெரிவித்துள்ளார்.



இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் பட் உள்ளிட்ட 3 வீரர்கள் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வீரர்கள் சூதாட்ட ஏஜன்ட் மசார் மஜீத்திடம், பணம் பெற்றதை ஒப்புக்கொண்டனர்.ஆனால் தங்கள் ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்ளும் ஏஜன்ட் தான் மஜீத் என்றும், சில ஒப்பந்தங்களுக்காகத் தான் அவரிடம் பணம் வாங்கினோம் எனவும் தெரிவித்தனர். இதனால் வீரர்கள் வழக்குப்பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இந்த மூன்று வீரர்கள் சர்வதேச போட்டிகள் உட்பட எவ்வித கிரிக்கெட்டிலும் பங்கேற்க கூடாது என ஐ.சி.சி., தடைவிதித்தது. தவிர, விருது பட்டியலில் இருந்தும் நீக்கப்
பட்டனர்.



புதிய ஆதாரங்கள்: நேற்று வெளியான புதிய வீடியோவில் யாசிர் ஹமீத் நிருபரிடம் தெரிவித்தது: பொதுவாக பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் சூதாட்டத்தில் ஈடுபடுவார்கள். கடந்த 2004ல் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீசிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதில் சூதாட்டம் நடந்தது. ஆஸ்திரேலியாவின் சிட்னி டெஸ்டில் நடந்த சூதாட்டத்தில் மட்டும் இவர்களுக்கு 13 கோடி கிடைத்தது. இதை எப்படி பகிர்ந்து கொண்டார்கள் எனத் தெரியாது.



முன்பணம் தான்: லார்ட்ஸ் டெஸ்டில் "நோ பால்' வீசுவதற்கு கொடுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் என்பது முன்பணமே. இதுவே இவ்வளவு என்றால் எதிர்காலத்தில் எந்தளவுக்கு இவர்கள் சம்பாதிப்பார்கள் என கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்படி இவர்கள் எந்தளவுக்கு சென்றார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஆனால் ஸ்காட்லாந்து போலீசார் நீண்ட நாட் களாக விசாரித்து வருகின்றனர். எங்கிருந்து வந்தது: நான் இதுவரை 80 போட்டியில் விளையாடியுள்ளேன். ஆனால் முகமது ஆசிப் 50 போட்டிகளில் தான் பங்கேற்று இருப்பார். ஆனால் இவருக்கு சொந்தமாக 4 வீடுகள் உள்ளன. லாகூரில் இத்தாலி முறையில் வீடு கட்டி வருகிறார். இதற்கான பணம் எங்கிருந்து வந்தது. சல்மான் பட் பொதுவாக நல்ல வீரர். ஆனால் பணத்துக்காக இப்படி செய்கிறார். இவரை பி.சி.பி., ஏற்கனவே ஐந்துமுறை எச்சரித்துள்ளது.



"மிடில் கிளாஸ்' யாசிர்: சாதாரண "மிடில் கிளாஸ்' குடும்பத்தில் இருந்து, நான் சிரமப்பட்டு வந்தவன். எப்போதும் நேர்மையான முறையில் தான் சம்பாதிக்க விரும்புவேன். பல முறை சூதாட்ட ஏஜன்ட்கள் என்னை அணுகிய போதும், அவர்களை புறக்கணித்து வந்தேன். இதனால் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அணியில் இருந்து நீக்கப்பட்டேன்.



இறைவனால் சிக்கினர்: சமீபத்தில் மீண்டும் என்னை தேர்வு செய்தனர். இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் சூதாட்டத்தில் ஈடுபட என்னை அணுகினர். இதற்காக எனக்கு ஒரு கோடி ரூபாய் வரை பணம் தர முன்வந்தனர். ஆனால் நான் சம்மதிக்கவில்லை. போட்டியில் வெல்லவேண்டும் என நான் விளையாடுவேன். ஆனால் அவர்கள் தோற்க வேண்டும் என்றே விளையாடுவார்கள். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தும். இந்த டெஸ்டில் நான் சரியாக விளையாடவில்லை எனினும், இறைவன் அருளால் சூதாட்ட வீரர்கள் பிடிபட்டு, அவுட்டாகியுள்ளனர்.இவ்வாறு ஹமீத் தெரிவித்தார்.



23 பிரிவுகளில் குற்றச்சாட்டு : இங்கிலாந்து தொடரில் சூதாட்டத் தில் ஈடுபட்ட மூன்று வீரர்கள் மீது ஐ.சி.சி., ஊழல் தடுப்பு கண்காணிப்பு விதியின் படி 23 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தலா ஆறு பக்கங்கள் அடங்கிய இந்த அறிக்கை ஒவ்வொரு வீரருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் படி சல்மான், ஆசிப்
இருவருக்கும் வாழ்நாள் தடை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. ஆமிரின் வயது (18) காரணமாக, இவருக்கு லேசான தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில் பெயர் குறிப்பிடப்படாத, நான்காவது வீரருக்கு உள்ள தொடர்பு குறித்து ஐ.சி.சி., விசாரித்து வருகிறது. தவிர, விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மலிடம் "மேட்ச் பிக்சிங்' குறித்து விளக்கம் கேட்டுள்ளது.



தொடர் தொடரும் :பாகிஸ்தான் வீரர்கள் மீது அடுத்தடுத்து சூதாட்ட புகார் கிளம்புவதால், இங்கிலாந்துக்கு எதிராக மீதமுள்ள "டுவென்டி-20' மற்றும் ஒருநாள் தொடரை ரத்துசெய்துவிட்டு நாடு திரும்ப வேண்டும் என, பாகிஸ்தான் அரசு விரும்புகிறது. ஆனால் தொடர் திட்டமிட்டபடி தொடரும் என பாகிஸ்தான் தூதரக அதிகாரி வனீத் சம்சுல் ஹசன் தெரிவித்துள்ளார்.



ஹமீத் திடீர் "பல்டி':இதனிடையே தான் எந்த பத்திரிகைக்கும் பேட்டி தரவில்லை என யாசிர் ஹமீத் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" பிடிபட்ட சக வீரர்கள் மற்றும் சூதாட்டம் குறித்து, இங்கிலாந்து பத்திரிகை உட்பட யாரிடமும் நான் பேசவில்லை. நான் தற்போது பாகிஸ்தானுக்காக விளையாடி வருகிறேன். எதிர்காலத்திலும் விளையாட வேண்டும். இந்நிலையில் "தி நியூஸ் ஆப் தி வேர்ல்டு' பத்திரிகை, எனக்கு எதிராக முற்றிலும் தவறான செய்தியை வெளியிட்டுள்ளது,'' என, திடீரென பல்டி அடித்துள்ளார்.



இலங்கை அணியின் "கறுப்பு ஆடுகள்' : இலங்கை வீரர்களுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் சூதாட்ட ஏஜன்ட்டுடன் உள்ள தொடர்பு குறித்து "தி கார்டியன்' என்ற இங்கிலாந்து பத்திரிகை வெளியிட்ட செய்தியில்,"" இலங்கையின் முன்னணி வீரர் ஒருவர் உட்பட நான்கு வீரர்கள் இரவு நேரங்களில் சந்தேகத்து இடமான வகையில் பல நபர்களை சந்தித்துள்ளனர். இதை மற்ற வீரர்கள், கேப்டன் சங்ககராவிடம் தெரிவித்தனர். பின் சங்ககரா இதை ஐ.சி.சி., யிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இலங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர். தவிர, இந்த வீரர்களை கடந்த 2009ல் இங்கிலாந்தில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் முதல், இன்று வரை ஐ.சி.சி.,யின் கண்காணித்து வருகிறது,'' என தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments