ரஜினி சொன்னதை அன்றே கேட்டிருந்தால் காங். ஆட்சியைப் பிடித்திருக்கும்-குமரி அனந்தன்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னதைக் கேட்டிருந்தால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 1996-லேயே ஆட்சியைப் பிடித்திருக்கும். இன்றைக்கு வந்திருக்கும் அவப்பெயர் நீங்கியிருக்கும், என்றார் தமிழக காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான குமரி அனந்தன்.

வண்ணாரப்பேட்டையில் சுதந்திர தினவிழா, காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் பாப்பாரப்பட்டியில் சிவாவிற்கு மணி மண்டபம் அமைய உழைத்த குமரி அனந்தனுக்கு பாராட்டு விழா போன்றவை நடந்தன.

விழாவில் குமரி அனந்தன் பேசுகையில், "நான் சாதித்தவை சில, சாதிக்க எண்ணியவையோ பல! விதைத்தது பல; முளைத்தது சில. கண்ட கனவுகள் பலப்பல; நனவுகளானவைச் சில. நீங்கள் தந்த பாராட்டுகளுக்கு நன்றி தெரிவிக்கும்போது நிறைவேறாத ஆசைகளையும் எண்ணிப் பார்க்கிறேன்.

கதர் சிட்டங்களை தலையில் சுமந்து, தந்தையாரின் கதர் தொழிலுக்கு காந்திய வழியில் தொண்டு செய்த நான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவனாக இருந்தபோது நினைத்தது நடக்கவில்லையே!

1996-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காங்கிரஸ் தலைமையில் அமைந்த கூட்டணியை ஆதரிக்க முன் வந்தார். பல சந்திப்புகளை பல கட்சி தலைவர்களோடு நடத்தி தமிழ்நாடு காங்கிரசிற்கு 14 கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருந்தோம்.

ரஜினியின் செல்வாக்கைப் பற்றி மக்கள் கருத்தைக் கேட்டறிந்த ஓர் அமைப்பு அவருக்கு மக்களிடையே 56 சதவீதம் ஆதரவு இருப்பதாக அறிவித்தது.

தமிழ்நாடு காங்கிரசின் நிர்வாகக்குழு என் தலைமையில் கூடி ஒருமனதாக வரவேற்றது. பல பணிகளுக்கிடையேயும் 3 முறை டெல்லி சென்று அன்றைய அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் பிரதமராகவும் இருந்த நரசிம்மராவைச் சந்தித்தார் ரஜினி. அரசியல் ரீதியான சில வேண்டுகோள்களை வைத்து, தனது முழுமனதான ஆதரவையும் உழைப்பையும் தர முன் வந்தார். நரசிம்மராவ் ஏற்கவில்லை.

நான் காலைப் பிடிக்காத குறையாகக் கண்ணீர் மல்க மன்றாடினேன். எனக்குப் பதவி வேண்டாம், ஆனால் காமராஜ் தொண்டன் குமரி அனந்தன் தலைவராக இருந்தபோது காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வந்தது என்று வரலாறு பதிக்கும் ஒரு வரி எனக்குப் போதும் என்று கெஞ்சினேன்.

ரஜினி சொன்னதைக் கேட்டிருந்தால் அன்றே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்கும். இன்றைக்கு வந்திருக்கும் அவப்பெயர் நீங்கியிருக்கும். ஆனால் நடக்கவே இல்லை. என் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய ஏமாற்றம் அது. என்னிடம் இருக்கும் சில நிறைகளை மட்டும் கருத்தில் கொண்டு என் 80-வது பிறந்த நாள் பரிசாக என்பேரில் படிப்பகம் அமைக்க அனுமதி கேட்கிறீர்கள்.

படி, படி என்று படிக்கச் சொன்ன பெருந்தலைவரின் தொண்டனாகிய எனக்கு இதைவிட பெரிய பாக்கியம் வேறென்ன இருக்க முடியும்? எனவே அனுமதி தருகிறேன் என்பதை விட உங்கள் திட்டத்தை ஆசீர்வாதமாக ஏற்கிறேன்," என்றார்.

Post a Comment

0 Comments