நான் இல்லை என்றாலும் விடாதீங்க : இளைஞர்களுக்கு அன்னா ஹசாரே அழைப்பு

புதுடில்லி: திகார் சிறையைவிட்டு வெளியில் வந்த அன்னா ஹசாரேவுக்கு, கொட்டும் மழையில் நின்று ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்பு அளித்தனர். ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தி, ராம்லீலா மைதானத்தில் அவர் துவக்கியுள்ள உண்ணாவிரதத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். ""நான் உயிரோடு இல்லாமல் போனாலும் கூட, போராட்டத்தை இளைஞர்கள் தொடர வேண்டும்,'' என, அன்னா பேசியதைக் கேட்டு கூட்டத்தினர் ஆர்ப்பரித்தனர்.

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்னா ஹசாரே நேற்று காலை 11.30 மணியளவில் வெளியில் வந்தார். போலீசார் புடைசூழ அவரை வெளியில் அழைத்து வந்தாலும், ஏற்கனவே போடப்பட்டிருந்த நிபந்தனைகளின்படி, ஹசாரேயை போலீசார் வழிநடத்தி கூட்டிச் சென்றனர். சிறையை விட்டு ஹசாரே வெளியில் வந்தவுடன், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரும் ஆரவாரத்துடன் கோஷங்களை எழுப்பினர். டில்லியில் நேற்று காலை 6 மணி முதலே, மழை பெய்தபடி இருந்தது. இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் சாலைகள் முழுவதுமாக மக்கள், அலைகடலென திரண்டு நின்றிருந்தனர். ஹசாரேவுக்கு வரவேற்பு கொடுப்பதை, தங்களது முக்கிய கடமையாக கருதினர்.

இளைஞர்களுக்கு அழைப்பு: சிறையைவிட்டு வெளியில் வந்தவுடன், அங்கு இரண்டு நிமிடங்கள் மக்கள் வெள்ளத்தின் முன்பாக ஹசாரே பேசினார். அப்போது அவர், ""வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது, 1942ல் அவர்களை எதிர்த்து மகாத்மா காந்தி குரல் எழுப்பினார். அதனால், 1947ல் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், இப்போது நாம் எதிர்க்கும் ஆட்சியாளர்கள் வேறு. இவர்கள் நாட்டு மக்களை கொள்ளையடிக்கின்றனர். மக்கள்தான் இந்த போராட்டத்தின் சக்தி. மக்கள் சக்தியை, அரசாங்கம் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிறது. ""ஆட்சியாளர்களை எதிர்த்து, கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி போராட்டம் துவங்கி விட்டது. இந்த போராட்டத்தை நான் துவக்கியிருந்தாலும், நான் கூற விரும்பும் செய்தி இதுதான். அதாவது, இந்த போராட்டத்தின் முடிவில் நான் உயிரோடு இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். ஒருவேளை நான் இல்லாமல் போனாலும்கூட, ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். இளைஞர்கள் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திட வேண்டும்,'' என்றார். இதைக் கேட்டவுடன் கூடியிருந்த ஒட்டுமொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. அவரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின், போலீசார் புடைசூழ பொதுமக்கள் வெள்ளத்தில், டிரக் ஒன்றில் நின்றபடி, அன்னா ஹசாரே ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். திகார் சிறையின் வாசலில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் உள்ள மாயாபுரி சவுக் வரை, அவர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த தூரத்தை கடப்பதற்கு 2 மணி நேரமானது. மாயாபுரி சவுக் அருகே உள்ள பாலத்தில் இருந்து மக்கள், அன்னா ஹசாரே மீது மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர். தங்களது மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். பின், ஏற்கனவே திட்டமிட்டபடி, அங்கிருந்து போலீசார் அளித்த காரில் ஏறி, ராம்லீலா மைதானத்திற்கு சென்றார். அதற்கு முன்பாக, ராஜ்காட் சென்று காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். ராம்லீலா மைதானத்திற்குள் நுழைந்தவுடன் அன்னா ஹசாரே பேசும்போது, "" ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றும்வரை நான் இந்த ராம்லீலா மைதானத்தை விட்டு வெளியேற மாட்டேன்,'' என்றார். ஆனால், 15 நாட்கள் வரை மட்டுமே உண்ணாவிரதம் இருப்பதற்கு, ஹசாரேவுக்கு டில்லி போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தி சமாதியில் மழைக்காக ஓடிய ஹசாரே : காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்த வந்த ஹசாரே, தான் அணிந்து இருந்த காந்தி குல்லா மற்றும் சால்வையை அகற்றிவிட்டு, ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்தினார். பின், ராஜ்காட் வாசலை நோக்கி அவர் செல்ல முயன்ற போது, மழை சற்றே வலுத்தது. உடனே சற்று தூரம் ஓடினார். சிறையில் மூன்று நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்தாலும், அவர் எவ்வித சோர்வும் அடையாமல் இருக்கிறார் என்பதை பார்த்து ஆதரவாளர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.

* திகார் சிறையிலிருந்து ராம்லீலா மைதானத்திற்கு அன்னா ஹசாரே, டிரக் வண்டியில் ஊர்வலமாக வந்தார்.
*"ஜன் லோக்பால் மசோதா நிறைவேறும்வரை, உண்ணாவிரதம் தொடரும்' என, அறிவித்தார்
* கொட்டிய மழையிலும், சாலையின் இரு புறமும் மக்கள் திரண்டு நின்று, ஹசாரேக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
*ஹசாரேயின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க, டில்லியில் குவிந்துள்ள ஆதரவாளர்கள், ராஜ்காட், இந்தியா கேட், ராம்லீலா மைதானம் ஆகிய இடங்களில் பெருமளவில் காணப்பட்டனர்.
* "வலுவான லோக்பால் மசோதா விரைவாக நிறைவேற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை யென்றால், உண்ணாவிரத போராட்டத்தின் காலம் மாற்றி அமைக்கப்படும்' என, ஹசாரே குழுவினர் தெரிவித்தனர்.
* நீண்ட உண்ணாவிரத போராட்டம் நடத்த ஹசாரே திட்டமிட்டிருந்தார். இருப்பினும் அதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக குழுவில் இடம் பெற்றுள்ள அரவிந்த கெஜ்ரிவால் கூறினார்.
* கடந்த மூன்று நாட்களாக திகார் சிறையில் உணவும் ஏதும் உட்கொள்ளாமல் ஹசாரே இருந்ததால், அவரது எடை 3 கிலோ குறைந்துள்ளதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
* உண்ணாவிரத போராட்டத்திற்கு முதலில், டில்லி போலீசார் 21 நாட்கள் அனுமதிக்க முன்வந்தனர். பின்னர் பேச்சுவார்த்தையில் இருதரப்பிலும் 15 நாட்கள் என, முடிவானது.
* ராம்லீலா மைதானத்திற்கு செல்லும் வழியில், "இந்தியா கேட்' வழியாக ஹசாரே வருவார் என, அறிவிக்கப்பட்டு இருந்ததால் ஆயிரக்கணக்கானோர் அங்கு குழுமியிருந்தனர். ஆனால், மழையின் காரணமாக, இந்தியா கேட் பகுதிக்கு வராமல் ஹசாரே, காரில் நேரடியாக ராம்லீலா மைதானத்திற்கு சென்றார். இதனால், அவரை பார்ப்பதற்காக குழுமியிருந்த இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Post a Comment

0 Comments