இலங்கை முகாமில் கொடுமை ! தமிழ் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் !

லண்டன்: இலங்கையில் முகாமில் அடைத்து வைக்கப்பட்ட பெண்கள் பலர் செக்ஸ் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் இருந்த இலங்கை படை வீரர்கள் இந்தச்செயலில் ஈடுபட்டுள்ளனர். முகாம்களில் இருந்த தமிழர்கள் சிலரை சுடும் வெயிலில் முட்டி போட வைத்து துன்புறுத்தியதாகவும் முகாமில் இருந்து வெளியே வந்துள்ள ஒரு இலங்கை தமிழ்பெண் கூறியுள்ளார். லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல கார்டியன் பத்திரிகை இணையதளம் முதல்பக்கத்தில் இந்தப்பெண்ணின் பேட்டியை பிரசுரித்துள்ளது.

இலங்கையில் 3 லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் பல்வேறு முகாம்களில் அடைக்கப்பட்டனர். இங்கு அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது. கம்பி வலை பூட்டப்டட முகாம்களில் தமிழர்கள் கடும் சிரமத்திற்குள்ளாயினர். இவர்களுக்கு கொடுமை இழைக்கப்படுவதாக புகார் எழுந்தன. ஐ.நா., சபை வரை கண்டனத்திற்கு எட்டியது. இருப்பினும் இலங்கை எவ்வித கொடுமையும் நடக்கவில்லை என சப்பைக்ககட்டு கட்டியது. இந்நிலையில் ஒரு இளம்பெண் முகாமில் நடந்த விஷயங்களை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

பிரிட்டனில் உயிரியல்மருத்துவம் பட்டப்படிப்பு படித்தவர் வாணிகுமார் (25 ) . இவர் இலங்கை தமிழர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த முகாமில் அடைப்பட்டு கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியே வந்துள்ளார்.

இவர் முகாமில் நடந்த கொடுமைகள் மற்றும் அவலங்களை பட்டியலிட்டு கூறியிருப்பதாவது: மனிதர்கள் வாழும் நிலை இல்லை : திடீரென பிடித்து முகாமுக்கு கொண்டு சென்றனர். சுற்றிலும் ராணுவ படை குவிக்கப்பட்டிருந்தது. அங்கு 3 நாள் கண்ணீர் விட்டுகொண்டே இருந்தேன். என்ன நடக்கப்போகிறதோ என்ற அதிர்ச்சியில் அனைவரும் இருந்தனர். ஒவ்வொருவராக முழுமையாக பரிசோதிக்கப்பட்டனர். முகாம்களில் தமிழர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாயினர். யாரும், யாருடனும் பேச அனுமதிக்க மாட்டார்கள்.முகாம்களின் வேலி அருகே கூட சொல்ல முடியாது. உலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலைக்குள்ளாயினர். ஆண்களும், பெண்களும் குளிப்பதற்கு வசதியான இடங்கள் கிடையாது. ஒருவரையொருவர் பார்க்கும் நிலையில் தான் குளிக்க முடியும். நான் போலீஸ் அறை அருகே தங்கி இருந்தேன். எனவே நான் அதிகாலை 3 மணிக்கே குளித்து விடுவேன் ஏனெனில் அப்போதுதான் இருட்டாக இருக்கும். தண்ணீர் சப்ளை கிடையாது.குடி தண்ணீருக்கு மக்கள் அனைவரும் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டும். முகாம்களில் மனிதர்கள் வாழும் நிலையே அங்கு கிடையாது. பெரும் இன்னல்களை சந்தித்தோம் . மழை பெய்தால் முகாம்களுக்குள் தண்ணீர் புகுந்து விடும். அங்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியக்கூடாது என இலங்கை அரசு நினைக்கிறது.

செக்ஸ் தொந்தரவு : முகாம்களில் செக்ஸ் தொந்தரவு ஒரு சாதாரண, வழக்கமான விஷயமாக இருந்தது. முகாம்களில் பார்வையாளர்கள் அறை என இருக்கிறது. உறவினர்களோ மற்றும் அருகில் உள்ள முகாம்களில் வசிப்பவர்களையோ சந்திக்க வந்தால் அந்த நபர்கள் அழைக்கப்படுவர். பார்வையாளர் அறையில் காத்திருக்கும் பெண்களை பாதுகாப்பு படையினர் தொட்டு சில்மிஷம் செயவர். இதனை நான் கண்ணால் பார்த்தேன். சில பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட பாதுகாப்பு படை அதிகாரிகள் வெளியே சொல்லக்கூடாது என மிரட்டுவர் . இதற்காக தமிழ் பெண்களுக்கு பணமும், உணவும் கொடுப்பர். வீரர்களால் பல பெண்கள் செக்ஸ் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டனர். அருகில் உள்ள ஒரு முகாமில் முதியவர் ஒருவரை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் முதுகு புறத்தில் ஓங்கி மிதித்தார். என்ன பிரச்னை என்று தெரியவில்லை.

வெள்ளை நிற வேன்களில் வருவர் : புலிகளுடன் தொடர்பு இருந்ததாக சந்தேகிக்கப்பட்டவர்கள் கடும் வெயிலில் முட்டி போடச்சொல்லி கொடுமைப்படுத்தினர். திடீரென வெள்ளை நிற வேன் ஒன்று வரும் . இதில் சில குறிப்பிட்ட ஆண், பெண்கள் வேனில் அழைத்து செல்லப்படுவர். வேனில் சென்றவர்கள் யாரும் இதுவரை முகாம்களுக்கு திரும்பி வந்தது கிடையாது. இன்னும் அவர்கள் வரமாட்டார்களா என்று ஏங்கி கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அழைத்து செல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

அகதிகள் முகாமில் நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து ஐ.நா., கண்காணிப்பு அமைப்புகள், அரசிடம் புகார் தெரிவித்து வருகின்றன. இது குறித்து இலங்கை மனித உரிமைத் துறை செயலர் ரஜிவா விஜேசின்கா குறிப்பிடுகையில், " அகதிகள் முகாமில் பாலியியல் கொடுமைகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. நான் முகாமில் இருந்து கொண்டு இதையெல்லாம் கண்காணிக்க முடியாது. ஒரு சில நேர்மையற்ற அதிகாரிகள் இந்த செயலை செய்கின்றனர். பெரும்பாலும் அகதிகள் முகாமில் உள்ள ஆண்களே, பெண்களை பாலியியல் ரீதியாக கொடுமைப் படுத்துகின்றனர்' என்றார்.

இலங்கை அரசு என்ன சொல்ல போகிறது : ஐ.நா., புகாருக்கு ஆதாரம் : இலங்கையில் போர் மற்றும் தாக்குதல்கள் நடந்த நேரத்தில் போர்க்குற்றங்கள் நடந்ததாகவும், முகாம்களில் சித்ரவதை செய்யப்படுவதாகவும் ஐ.நா., குறை கூறியிருந்தது. ஆனால் இலங்கை அரசு இதனை மறுத்து வந்தது. தற்போது வாணிகுமார் வெளியிட்டுள்ள விஷயம் இலங்கை அரசுக்கு எதிரான ஆதாரமாக கிடைத்திருப்பதாக சர்வதேச பார்வையாளர்கள் மற்றும் மனித உரிமை கமிஷன் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் .

Post a Comment

0 Comments