விரைவில் டில்லி வருகிறார் பசில் தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் தீர்வு

பசில் ராஜபக்ஷே தலைமையிலான மூன்று நபர் குழு, விரைவில் டில்லி வரவுள்ளது. அப்போது, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது மற்றும் மறு குடியேற்றம் செய்தவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அரசு ஆலோசனை நடத்தவுள்ளது.

இலங்கையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை தி.மு.க., மற்றும் காங்கிரஸ் எம்.பி.,க்கள் கொண்ட குழு அண்மையில் சென்று சந்தித்துவிட்டு வந்தது. அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே மற்றும் உயர் அதிகாரிகள் பலரையும் சந்தித்துவிட்டு திரும்பிய பிறகு, நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை இந்த குழு சந்தித்து தங்களது இலங்கை பயணம் குறித்து விரிவாக விளக்கியது.

டி.ஆர்.பாலு தலைமையில் கனிமொழி, சுதர்சன நாச்சயப்பன், தங்கபாலு, விஜயன், ஹெலன், அழகிரி, சித்தன், ஆரூண் ஆகியோர் சென்று சந்தித்தனர். பிரதமரின் ரேஸ்கோர்ஸ் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது பிரதமர் மன்மோகன் சிங்குடன், உள்துறை அமைச்சர் சிதம்பரம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, மத்திய அரசு வழங்கவுள்ள 500 கோடி ரூபாயை வெறும் நிதியாக அளிப்பதற்கு பதிலாக, வடக்கு பகுதியில் தமிழர்கள் வசித்து வந்த இடங்களில் அவர்கள் மீண்டும் உரிய வசதிகளுடன் வாழும் வகையில் ஒரு லட்சம் வீடுகளை கட்டித் தரும்படி கேட்டுக் கொண்டனர். இதற்கு பிரதமர் மன்மோகன் சிங், விரைவில் பசில் ராஜபக்ஷே தலைமையிலான மூன்று நபர் குழு டில்லிக்கு வரவிருப்பதாகவும், அவர்களிடம் இதுகுறித்து பேசி, உரிய முறையில் ஏற்பாடு செய்வதாகவும் கூறியதாக தெரிகிறது.


எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஒவ்வொரு எம்.பி.,யும், 10 லட்சம் ரூபாய் வரை இலங்கைத் தமிழர்களின் புனர் வாழ்வுக்காக அளித்திட அனுமதியளிக்கும் படியும், பிரதமரிடம் கேட்டனர். அதற்கு "இது குறித்து தான் மட்டும் எதுவும் கூற முடியாது, லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர் ஆகியோரிடம் பேசிவிட்டு முடிவு சொல்கிறேன்' என பிரதமர் பதிலளித்தார்.


இலங்கையில் போர் முடிவு பெற்றுவிட்ட நிலையில் ராஜிவ் - ஜெயவர்த்தனே உடன் பாட்டின்படி, தமிழர்களின் பாரம்பரிய பகுதிகளான வடக்கையும் கிழக்கையும் இணைப்பது, அதற்காக இலங்கை அரசமைப்பு சட்டத்தின் 13வது சட்டத்திருத்தத்தை இந்தியா வலியுறுத்துவது மற்றும் நிரந்தர அரசியல் தீர்வு காண்பது ஆகியவற்றுக்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்படியும், எம்.பி.,க்கள் குழு பிரதமரை கேட்டுக்கொண்டது.

Post a Comment

0 Comments