ராமர் சேது பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாமல், சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவதற்கான நடைமுறை சாத்தியங்கள் குறித்து, நிபுணர்கள் குழு அளித்த அறிக்கை தொடர்பான நிலையை, நான்கு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.




"சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து, தேசிய கடலாய்வு நிறுவனத்தின் நிபுணர்கள் குழு சந்தேகம் தெரிவித்துள்ளது. அதனால், சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி மனு தாக்கல் செய்தார். அந்த மனு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் பாஞ்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.




அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ராமர் பாலத்தை இடிக்காமல், சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய, பச்சோரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு 15 மாதங்கள் ஆகியும், அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையோ அல்லது அதன் மீதான தன் நிலையையோ அரசு தெரிவிக்கவில்லை. இந்த விஷயத்தில் அரசு சில முடிவுகளை எடுக்க வேண்டும். சேது சமுத்திர திட்டம் குறித்து, பச்சோரி தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக, தங்களின் நிலை என்ன என்பதை மத்திய அரசு, இன்னும் நான்கு வாரங்களில், தெரிவிக்க வேண்டும். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆலோசனை மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 11ம் தேதி நடக்கும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Post a Comment

0 Comments