கைவிட்டு போகிறதா பெரியாறு அணை? தமிழக அரசு திணறல்

கூடலூர் : பெரியாறு அணையில் கேரள அரசின் கட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தமிழக அதிகாரிகள் அணை பகுதிக்கு செல்ல முடியவில்லை. இதனால் பெரியாறு அணை தமிழக அரசின் கையை விட்டு செல்லும் அபாய நிலை உள்ளது.

பெரியாறு அணையில் தேங்கியிருக்கும் நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள ஒவ்வொரு ஆண்டும் வாடகையாக இரண்டு லட்சத்து 57 ஆயிரம் ரூபாயை கேரள அரசுக்கு செலுத்தி வருகிறது. அணை பராமரிப்பு பணியையும் தமிழக அரசு செய்து வருகிறது. இதற்காக அணைப் பகுதியில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், நான்கு உதவி பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர் என, 20க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன் தமிழக செயற்பொறியாளர் ராஜேஷ், சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைக்காக அணைப்பகுதியில் போட்டோ எடுக்க சென்றார். அப்போது, படகு நிறுத்தப்பகுதியில் இருந்த கேரள வனத் துறையினர் போட்டோ எடுக்க அனுமதி தரவில்லை. இதனால் போட்டோ எடுக்காமலேயே திரும்பினார். இது குறித்து கேரள உயர் அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பப்பட்டது.

இச்சம்பவம் நடந்து இரண்டு தினங்கள் கூட ஆகாத நிலையில், நேற்று காலை பத்து மணிக்கு கேரள நீர்ப்பாசனத்துறை தொழில்நுட்ப உதவியாளர் பிரான்சிஸ், இரண்டு போட்டோகிராபர்களை அழைத்துக் கொண்டு அணைப்பகுதி, பேபி அணை, ஷட்டர் உள்ளிட்ட பகுதிகளை பல்வேறு கோணங்களில் போட்டோ எடுத்தனர். வல்லக்கடவு வனத்துறை செக்போஸ்டை கடந்து வந்த இவர்களுக்கு கேரள வனத்துறையினர் எவ்வித தடையும் ஏற்படுத்தவில்லை. பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் பெயரளவில் மட்டும் தான் உள்ளது. தமிழக அதிகாரி அணைப்பகுதிக்கு செல்ல கேரள அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. இவற்றை பின்பற்றி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணை பகுதிக்கு சென்றுவந்தனர். தற்பாது இந்நிலை மாறி முற்றிலுமாக அணை பகுதிக்கு தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கின்றனர். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக அணைப்பகுதியில் எவ்வித பராமரிப்பு பணியும் நடைபெறவில்லை. அண்மையில் அணைப்பகுதிக்கு பராமரிப்பு பணிக்காக தமிழக பொதுப்பணித்துறையினர் கொண்டு சென்ற பெயின்ட், சிமென்ட், ஜல்லிகற்கள் ஆகியவற்றை படகு நிறுத்தப்பகுதியிலேயே அனுமதிக்காமல் திருப்பி விட்டனர். அடுத்தடுத்து கேரள அரசு விதிக்கும் கட்டுப்பாட்டால் தமிழக அரசு திணறி வருகிறது.


இச்சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது, பெரியாறு அணையின் கட்டுப்பாடு தமிழக அரசிடம் உள்ளதா என்று கேள்வி எழுகிறது. இந்த நிலை நீடித்தால் விரைவில் அணையின் முழுக்கட்டுப்பாடும் கேரள அரசிடம் செல்லும் அபாயம் உருவாகியுள்ளது.

Post a Comment

0 Comments