கிருஷ்ணா நதி நீர் 400 டி.எம்.சி., கடலில் வீணாக கலப்பு : நதிகளை இணைப்பது தான் ஒரே தீர்வு


தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன், ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்தது. இதனால், கிருஷ்ணா, கோதாவரி உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக, கிருஷ்ணா நதியில் மட்டும் 400 டி.எம்.சி., மழை நீர் வீணாக ஓடி, வங்க கடலில் கலந்துவிட்டது என்ற அதிர்ச்சி தரும் புள்ளி விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

தென்னிந்திய நதிகளை இணைப்பதன் மூலம் ஒவ்வொரு மழைக் காலத்திலும் வீணாகும் பல டி.எம்.சி., மழை நீரை சேமிக்க முடியும் என்று நீர் வள நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.நாட்டின் ஒரு பகுதியில் கடுமையான வறட்சியும், ஒரு பகுதியில் வெள்ளத்தால் பாதிப்பும் ஏற்பட்டு வருவதை தடுக்க, தேசிய நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு நிபுணர்கள், பல காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், சில மாநிலங்கள் அதை ஏற்கவில்லை. குறிப்பாக, ஒவ்வொரு மழைக் காலத்திலும் வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்திக்கும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள், நதி நீர் இணைப்பிற்கு இதுவரை ஒத்துவராமல் உள்ளன.தென்னிந்திய தீபகற்பத்தில் உள்ள நான்கு மாநிலங்களில், தமிழகம் மட்டுமே தண்ணீர் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறது. ஆந்திரா, கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் ஓடும் ஜீவ நதிகளால் அந்த மாநிலங்களில் தண்ணீர் பிரச்னை இல்லை. இந்த அண்டை மாநிலங்கள் மனது வைத்தால் தான், தமிழகத்திற்கு நீர் கிடைக்கும் என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தென்னக நதிகளை இணைத்தால் மட்டுமே தமிழகம் முழுமையான அளவில் தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்க முடியும். அதே வேளையில், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை வெள்ளத்தின் அழிவில் இருந்தும் காப்பாற்ற முடியும். தமிழகத்தின் பாசன மற்றும் குடிநீர் தேவையை சமாளிக்க காவிரி நதி நீர் உதவுகிறது. நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சை, நாகை மாவட்டங்களின் விவசாயிகள், காவிரியை மட்டுமே நம்பி உள்ளனர். ஆனால், காவிரி நீரை தருவதில் கர்நாடகா தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது.

காவிரி நதி நீர் பங்கீடு : காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் நீண்ட நாள் சிக்கல் இருந்து வருகிறது. நடுவர் மன்றத்தை ஏற்படுத்தி இருமாநிலங் களுக்கும் இடையிலான நதிநீர் பிரச்னையை தீர்த்துக் கொள்ள சுப்ரீம் கோர்ட் ஆலோசனை கூறியது. கடந்த 1990ம் ஆண்டில் அமைக்கப் பட்ட நடுவர் மன்றம், வழக்கின் தன்மை யை ஆராய்ந்து, கிடைக்கும் 740 டி.எம்.சி., காவிரி நீரை தேவைகளுக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட கர்நாடகா, கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் பிரித்து கொள்ள வேண்டும் என கூறியது.இதன்படி, தமிழகத்திற்கு 419 டி.எம்.சி., நீர் ஒதுக்கப்பட்டது.

இதுதவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கசிவு ஏற்படுதல், கடலுக்கு செல்லுதல் ஆகிய காரணங்களுக் காக, 14 டி.எம்.சி., நீர் ஒதுக்கப்பட்டது. கர்நாடகா-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டலு பகுதியில் அமைக்கப் பட்டுள்ள நீர் வெளியேற்றும் நிலையத்தில் இருந்து வெளியேறும் நீரில் 192 டி.எம்.சி., நீரை ஒரு ஆண்டில் மாதந்தோறும் கர்நாடகா மாநிலம் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என நடுவர் மன்றம் இடைக் கால தீர்ப்பு ஒன்றையும் அளித்திருந்தது. இப்படி எத்தனையோ உத்தரவுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், கர்நாடகா அவற்றை மதிப்பதாக இல்லை.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை : ஆந்திர மாநிலமும் பாலாறு நதி நீர் விஷயத்தில், முரண்பட்டே நடந்து கொள்கிறது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை ஒன்று கட்டி வருகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று 2006ம் ஆண்டு தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. தமிழக அரசின் மனுவை ஆந்திர பிரதேச அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்; மத்திய அரசு கவனிக்க வேண்டும்; இரு மாநிலங்களுக்கு இடையேயான இந்த பிரச்னையை மத்திய அரசின் பிரதிநிதிகள் சமரசமாக தீர்த்து வைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இதை தொடர்ந்து, மத்திய நீர் வாரிய தலைவர், டில்லியில் அதிகாரிகள் மட்டத்திலான ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இக்கூட்டத்தில், பிரச்னை தீரும் வரை மேற்கொண்டு ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் பணிகளில் ஈடுபடக்கூடாது என தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதில் தீவிரமாக உள்ளது.

முல்லை பெரியாறு அணை பிரச்னை : கேரள மாநிலமும், தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் சிக்கல் ஏற்படுத்தி வருகிறது. தென்மாவட்டங்களின் பாசனத்திற்கு உதவும் முல்லை பெரியாறு அணைப் பிரச்னையில் அம்மாநிலம் பல்வேறு நிலைகளை எடுத்து, விஷயத்தை குழப்பி வருகிறது. தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் உதவும் வகையில் கட்டப்பட்டது முல்லைப் பெரியார் அணை. இதன் மொத்த நீர் சேமிப்பு உயரம் 152 அடியாகும். ஆனால், அணையின் பாதுகாப்பு கருதி 136 அடி உயரத்திற்கு மட்டுமே நீர் சேமிக்கப்படுகிறது.புதிய அணை போல் நல்ல நிலையில் செயல்படுவதற்கு தேவையான சில ஆலோசனைகளை தமிழக அரசுக்கு மத்திய நீர் கமிஷன் தெரிவித்திருந்தது. அணையின் பாதுகாப்பிற்கு 136 அடி நீர் தான் சேமிக்க வேண்டும் என்ற கருத்தை மட்டும் பிடித்துக் கொண்டு அதன்பின், அதற்கு மேல் நீரை சேமிக்க கேரள அரசு மறுத்து வருகிறது. கூடவே, புதிய அணை கட்ட வேண்டும் என்றும் பிடிவாதம் பிடிக்கிறது.

பரம்பிக்குளம் - ஆளியாறு திட்டம் : மின் உற்பத்தி, பாசனம், குடிநீர் தேவை, தொழிற்சாலைகளின் பயன்பாடு ஆகியவற்றுக்காக ஆளியாறு, பாலாறு, பரம்பிக்குளம், சோலையாறு, நீராறு, ஆனைமலையாறு ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் நீரை பகிர்ந்து கொள்ள கடந்த 1958ம் ஆண்டு, நவம்பர் 9ம் தேதி தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் இடையே ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது.பரம்பிக்குளம் ஆளியாறு திட்டம் குறித்து, 1988ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி மறுஆய்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாநில அளவிலான விவாதங்கள் நடந்து, மறு ஆய்வுகள் செய்யப்பட்ட ஆவணங்களை 1989ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி இரு மாநில அரசுகளும் பரிமாறிக் கொண்டன. தொழில்நுட்ப குழு ஆய்வு நடத்தி இடங்களை அடையாளம் கண்டு ஒப்பந்தத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு இரண்டு மாநில அரசுகளிடமும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், எந்த முடிவிற்கும் ஒத்துவராமல் கேரள அரசு இன்று வரை பிரச்னை ஏற்படுத்தி வருகிறது.


பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் : தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உயர்ந்த மலைகளில் பிறக்கும் பாண்டியாறு, புன்னம்புழா ஆறுகள் மேற்கு புறமாக ஓடி கேரளாவில் பாய்ந்து சாலியாறுடன் இணைந்து, இறுதியில் அரபிக்கடலில் கலக்கிறது. பாண்டியாறு, புன்னம்புழா ஆறுகள் தமிழகத்தில் 171.38 கி.மீ., நீளத்திற்கு ஓடுகிறது. இவற்றில் ஆண்டிற்கு 14 டி.எம்.சி., நீர் கிடைக்கிறது. இந்த ஆறுகளை பயனுள்ள முறையில் பயன்படுத்தி முதல் கட்டமாக, 100 மெகாவாட், இரண்டாவது கட்டமாக, 150 மெகாவாட் நீர் மின்சாரம் எடுப்பது என்று 1965ம் ஆண்டு தமிழக அரசுக்கும், கேரள அரசுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.பாண்டியாறு, புன்னம்புழா ஆறுகளின் நீரை கேரளாவுடன் பகிர்ந்து கொள்ள கோவை மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாண்டியாறு, புன்னம்புழா ஆறுகளை மேயாறு, பவானி ஆறுகளுடன் இணைத்தால் தமிழக விவசாயிகளுக்கு சாதகமாக இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது.


பாண்டியாறு, புன்னம்புழா ஆறுகளில் கிடைக்கும் நீரில் குறைந்தபட்சம் 7 டி.எம்.சி., நீரையாவது கிழக்கு புறமாக திருப்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும், கேரள அரசு இத்திட்டத்திற்கு இதுவரை முட்டுக்கட்டை போட்டு வருகிறது.இவ்வாறு, தமிழகத்திற்கு சேர வேண்டிய நதி நீரை அண்டை மாநிலங்கள் தர மறுத்து வருவது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணமே இல்லாமல் தமிழகத்திற்கு உரிய நீரை தர மறுக்கும் இந்த அண்டை மாநிலங்கள், அங்குள்ள நதி நீரை முறையாக பயன்படுத்துகின்றனவா என்றால் அதுவும் இல்லை. ஒவ்வொரு மழைக் காலத்திலும், கேரள, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள நதிகளில் இருந்து பல நூறு டி.எம்.சி., நீர் வீணாக கடலில் போய் கலக்கிறது.


ஆந்திராவில் உள்ள கோதாவரி, கிருஷ்ணா ஆகிய நதிகள் வற்றாத ஜீவ நதிகள். ஆண்டு முழுவதும் நீரோட்டம் கொண்ட இந்த நதிகளில், மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். கிருஷ்ணா நதியில் வரும் நீரை சேமிக்க, ஸ்ரீசைலம் மற்றும் நாகார்ஜுனாசாகர் அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில், நாகார்ஜுனசாகர் அணையின் மொத்த நீர் தேக்கத்திறன் 408 டி.எம்.சி.,இந்த ஆண்டும் ஆந்திராவில் கடந்த இரண்டு மாதங்களாக கனமழை பெய்தது. இதனால், நெல்லூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது. கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் இதுவரை 400 டி.எம்.சி., நீர் வீணாக கடலில் சென்று சேர்ந்துள்ளது. வெள்ளத்தின் போது புதிய ரெகுலேட்டர் மூலம் 30 நாட்களில் 112 டி.எம்.சி நீர் ஸ்ரீசைலம் அணைக்கு வந்துள்ளது. ஆனால், அணையில் இருந்து 400 டி.எம்.சி., நீர் ஆறே நாட்களில் வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஆந்திராவின் பல அணைகளில் நீர் நிரம்பாத நிலையில், கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, 607 டி.எம்.சி., அளவு நீர் வீணாக கடலில் கலந்து விட்டது.


தென்னக நதி நீர் இணைப்பு அவசியம் : தேசிய அளவில் நதிகளை இணைப்பதில், சர்வதேச பிரச்னை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தென்னக நதிகளை இணைக்கும் வகையில் ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில், மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகிய முக்கிய நதிகள் பாய்கின்றன.நதி நீர் இணைப்பு திட்டத்தின்படி, இந்த நான்கு முக்கிய நதிகளையும் கால்வாய்கள் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்க வேண்டும்; நான்கு நதிகளிலும் கூடுதல் நீர் கிடைக்கும் போது அதை சேமித்து வைக்க அணை கட்ட வேண்டும்; மகாநதி, கோதாவரி நதிகளில் இருந்து கிடைக்கும் கூடுதல் தண்ணீரை, பற்றாக்குறையாக உள்ள தென்னிந்திய பகுதிக்கு திருப்பி விட வேண்டும்; மேற்கு நோக்கி பாயும் தபதி நதியை இந்த நதிகளுடன் இணைக்க வேண்டும்; இதனால் மழை குறைவான பகுதிகளில் நீர் கிடைப்பதுடன் அப்பகுதிகளின் நிலத்தடிநீர் மட்டமும் வெகுவாக உயரும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், நீர் தேவை அதிகமுள்ள மும்பை நகருக்கும், மகாராஷ்டிராவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கும் இந்த நீர் உதவும். கென் மற்றும் சாம்பல் ஆறுகளை இணைப்பதன் மூலம் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் பகுதிகள் பலனடையும். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பல ஆறுகளின் நீர் பயன்படுத்தப்படாமல் வீணாக அரபிக்கடலில் சென்று கலக்கிறது.இந்த ஆறுகளை திருப்பி தென்னிந்திய விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள கூடுதல் நிலங்கள் பயனடைவதுடன் நீர்மின் திட்டங்கள் மூலம் கூடுதலாக 4 கிகா வாட் மின்சாரமும் கிடைக்கும்.இவ்வாறு, பல மாநிலங்கள் பயன்பெறும் வகையிலான தென்னக நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பதே நீர் வள நிபுணர்களின் கோரிக்கையாக உள்ளது.


தமிழகத்தின் ஒரு ஆண்டு தேவை :ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அனைத்து நதிகளிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. தொடர் மழை காரணமாக, ஸ்ரீசைலம் அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 22 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணை நிரம்பும் நாட்களில், வினாடிக்கு ஆறு லட்சம் கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் ஓடும் கிருஷ்ணா நதியில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரை கணக்கிட்டு பார்க்கையில், ஒட்டு மொத்த தமிழகத்தின் ஓராண்டு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு கிருஷ்ணா நீர் கடலில் கலந்து வீணாகியுள்ளது.

Post a Comment

0 Comments