இலங்கை குழு இன்று டில்லியில் ஆலோசனை : தமிழர் மறுகுடியமர்த்தம் பற்றி பேச்சு


கொழும்பு : முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை மறு குடியமர்த்தும் விவகாரம் குறித்து, கோத்தபயா ராஜபக்ஷே உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய இலங்கை உயர்மட்டக் குழு, இந்திய அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்ததை அடுத்து, அங்கு வசித்த தமிழர்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அவர்களது சொந்த ஊர்களில் மறு குடியமர்த்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதுவரை ஒரு லட்சம் பேர் மறு குடியமர்த்தப் பட்டுள்ளதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பல்வேறு முகாம்களில் இன்னும் இரண்டு லட்சம் பேர் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களும் விரைவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என, இலங்கை உறுதி அளித்துள்ளது. மறு குடியமர்த்துதல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக இந்தியா சார்பில் இலங்கைக்கு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

மறு குடியமர்த்தும் பணியை விரைவு படுத்தும்படியும், தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு வசதியாக, பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணும்படியும் இலங்கையை, இந்தியா வலியுறுத்தி வருகிறது. வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா சமீபத்தில், பார்லிமென்டில் பேசிய போது, இதுகுறித்து வலியுறுத்தினார். இந்நிலையில், மறு குடியமர்த்தும் பணி தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன், மூன்று பேர் அடங்கிய இலங்கை உயர்மட்டக் குழு இன்று டில்லியில் ஆலோசனை நடத்த உள்ளது. அதிபர் ராஜபக்ஷேவின் செயலர் லலித் வீரதுங்கா, பாதுகாப்புச் செயலர் கோத்தபயா ராஜபக்ஷே, அதிபரின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ஷே ஆகியோர் இதற்காக, இந்தியா வந்துள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவு செயலர் நிருபமா ராவ் ஆகியோரை, இலங்கை உயர்மட்டக் குழு சந்தித்து, இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்த உள்ளது. இந்த சந்திப்பின் போது, இலங்கை அதிபர் தேர்தல் விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை எதுவும் நடத்தப்படுமா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

புலிகளின் சொத்து பறிமுதல்? இதற்கிடையே, இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரம நாயகே, அந்நாட்டு பார்லிமென்டில் பேசியதாவது: விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் பல்வேறு நாடுகளில் உள்ளதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் செல்வராஜா பத்மநாதனிடம் நடத்திய விசாரணையிலும் இதைப் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளன. எந்தெந்த நாடுகளில், எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. உளவுப் பிரிவினர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இவை, இலங்கை மக்களுக்கு சொந்தமான சொத்துக்கள். அந்த சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து, அவற்றை இலங்கையின் மேம்பாட்டு திட்டங்களுக்காக பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள தங்கம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு ரத்னஸ்ரீ விக்கிரம நாயகே கூறினார்.

Post a Comment

0 Comments