தர , தரவென இழுத்து ‌செல்லப்பட்ட பொன்சேகா ; இலங்கை எதிர்கட்சிகள் கண்டனம்


கொழும்பு : இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டபோது ‌இலங்கை ராணுவ போலீசார் மோசமாக, அருவருப்பாக நடந்து கொண்டதாகவும். அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் அங்குள்ள எதிர்கட்சிகள் கோரியுள்ளன. இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், ராஜபக்ஷேயை எதிர்த்துப் போட்டியிட்டவர் அந்நாட்டு ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. இவர் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

கடந்த மாதம் 27ம் தேதி, அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த போது, கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பொன்சேகா, தனது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்ஷேவையும், அவரது குடும்பத்தினரையும் தீர்த்துக் கட்டுவதற்கு, சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து, அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவரை ரகசிய இடம் ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அங்கு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, பொன்சேகாவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கூறியதாவது: பொன்சேகாவும், அவரின் மீடியா செயலர் செனகா டி சில்வாவும் ராணுவ போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தலைநகரில் அவர்களின் அலுவலகத்தில் இருந்த போது கைதாகினர். அப்போது, "உங்கள் மீது கிரிமினல் சதி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ராணுவ போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்' என, அதிகாரி ஒருவர் பொன்சேகாவிடம் தெரிவித்தார்.இவ்வாறு உதவியாளர் கூறினார்.

பாதுகாவலர்கள் ஆயுதங்களை பறித்த போலீசார்: பொன்சேகாவை கைது செய்ய வந்த போலீசார் அவருக்கு பாதுகாப்பு பணயில் இருந்த மெய்காப்பாளர்கள் கையில் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவருடன் இருந்த எம்.பி.,க்களின் பாதுகாவலர் ஆயுதங்களையும் பறித்து கொண்டனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்படும் போது ஐக்கிய மக்கள் முன்னனணிகட்சியை சேர்ந்த எம்.பி., மனோ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்., தலைவர் ரவுப்ஹக்கீம் மற்றும் எம். பி.,க்கள் சுனில் , யோகராஜன் ஆகியோர் இருந்தனர்.

ரணில் விக்கிரமசிங்கே கண்டனம்: பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கு இலங்கை எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பொன்சேகா கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இவரது கைது ராணுவ சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல பொது சட்டத்திற்கும் எதிரானது. கைதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் ‌கண்டனம்: பொன்சேகா கைது மிக அருவருப்பாக நடந்தது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்த அமைப்பு தலைவர் ரவுப்ஹக்கீம் கூறுகையில்: பொன்சேகா அரசியல் தலைவர்களுடன் ஆலோசித்து கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். இந்நேரத்தில் போலீசார் அருவருப்பாக, மிக மோசமான முறையில் இழுத்து சென்றனர். இது கண்டிக்கத்தக்கது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கைதுக்கு முன்பு பொன்சேகா அளித்த பேட்டியில் கூறியது என்ன ? : நேற்று இரவு கைது செய்யப்படும் முன்பு பகல் நேரத்தில் பொன்சேகா பத்திரிகையாளர்களிடம் பேசியிருந்தார். இவரது பேட்டியில் அவர் கூறிய விவரம் வருமாறு: இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச கோர்‌ட்டில் விசாரணை நடந்தால் அங்கு நான் சாட்சியம் அளிக்க தயாராக இருக்கிறேன். எனக்கு தெரிந்தது, நான் கேள்விபட்டது, ‌எனக்கு கூறப்பட்டது ஆகியன அவசியம் கோர்‌டில் தெரிவிப்பேன். போர்க்குற்றம் செய்தவர்கள் யாரும் தப்பிக்க கூடாது. கோர்ட் முன்பு நிறுத்தப்பட வேண்டும். நான் யாரையும் காப்பாற்ற போவதில்லை. உண்மை சொல்லாதவர்கள் துரோகிகள் என கூறியிருந்தார்.

சர்‌வதேச கோர்ட்டில் ஆஜராகி விஷயங்களை தெரிவிப்பேன் என்று கூறிய சில மணி நேரத்தில் அவர் கைது‌ செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பேட்டி அதிபர் ராஜபக்ஷேவை சினமூட்டியிருக்கலாம் என அங்குள்ள பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

அதிபர் ரஷ்யாவில் - ரணில் இந்தியாவில் : பொன்சேகா கைது செய்யப்பட்டபோது இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே ரஷ்யாவில் இருந்தார். எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கு பயணம் ‌மேற்கொண்டிருந்தார். பொன்சேகா கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் போலீசாரால் பறிக்கப்பட்டு விட்டது என பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments