பொன்சேகா கைதை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்


கொழும்பு : இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை சந்திப்பதற்கு, அவரது மனைவிக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக, ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, பொன் சேகா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பின் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதியும், அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தவருமான சரத் பொன்சேகாவை, இலங்கை ராணுவம் கைது செய்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்சேகாவின் மனைவி,"என் கணவரை இலங்கை அரசு கடத்திச் சென்று விட்டது. அவர் எங்கு உள்ளார் என தெரியவில்லை' என்றார். பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறியதாவது: பொன்சேகாவை சிறையில் அடைக்கவில்லை. அவருக்கு உரிய தங்கும் வசதி அளிக்கப் பட்டுள்ளது. அவரது மனைவிக்கும், வக்கீலுக்கும் அவரை சந்திப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று (நேற்று முன்தினம்) இரவு, சரத் பொன்சேகாவை, அவரது மனைவி அனோமா சந்தித்தார். மூன்று மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் பேசினர். வீட்டில் இருந்து எடுத்து வந்த உணவையும் பொன்சேகாவுக்கு, அனோமா வழங்கினார். ராணுவ விதிமுறைகளை மீறிய காரணத்துக் காக, ராணுவ சட்டப்படி தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் காரணங்களுக் காக கைது செய்யப்படவில்லை. இவ்வாறு சமரசிங்கே கூறினார்.

ஆர்ப்பாட்டம்: இதற்கிடையே, சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு நகரின் பல இடங்களில் நேற்று வன்முறை வெடித்தது. கொழும்பில் உள்ள சுப்ரீம் கோர்ட் வாசலில் பொன்சேகா ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கில் கூடியிருந்தவர்களில் அரசு ஊழியர்களும் அடங்குவர். அவர்களைக் கலைத்து விரட்ட போலீசார் தடியடியும், கண்ணீர் புகையும் பயன்படுத்தினர். இதில் காயமடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசாரின் வெறித்தாக்குதல் குறித்து பொன் சேகா ஆதரவாளரான இந்திராணி கூறுகையில், "நாங்கள் பொன்சேகா கைதை எதிர்த்து அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய வந்தோம். ஆனால், அரசைச் சேர்ந்த குண்டர்கள் எங்களைத் தாக்கி காயம் அடையச் செய்தனர்' என்றார். பொன்சேகா கைது, உடனடியாக பார்லிமென்டை கலைத்து வரும் ஏப்., 8ம் தேதி பார்லிமென்ட் தேர்தல் அறிவிப்பு ஆகியவை மக்களிடம் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிபர் தேர்தலில் முக்கிய வேட்பாளராக போட்டியிட்ட பொன்சேகா கைது விவகாரம் எதிர்க்கட்சிகளிடையே அரசு மீது வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்விஷயத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக ரணில் விக்ரமசிங்கேயும் தெரிவித்திருக்கிறார்.




சுஷ்மா கோரிக்கை: பொன்சேகா கைது செய்யப் பட்டது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொன்சேகா கைது செய்யப் பட்டதாக வெளியான தகவல் கவலை அளிக்கிறது. மிகப் பெரிய ஜனநாயக நாடும், அண்டை நாடான இந்தியா இதுபோன்ற செயல்களை எப்போதும் ஆதரிக்காது. பொன்சேகாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏப்ரல் 8ல் தேர்தல்: இலங்கை அதிபர் தேர்தலில் கிடைத்த வெற்றியை அடுத்து, பார்லிமென்ட் தேர்தலையும் உடனடியாக நடத்த அதிபர் ராஜபக்ஷே திட்டமிட்டிருந்தார். இதற்கு வசதியாக, நேற்று முன்தினம் இரவு பார்லிமென்ட் கலைக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் தேதி குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வரும் ஏப்ரல் 8ம் தேதி பார்லிமென்ட் தேர்தல் நடத்தப்படும். இதற்கான மனு தாக்கல், வரும் 19ம் தேதி துவங்கும். புதிய பார்லிமென்டின் நடவடிக்கைகள், வரும் ஏப்ரல் 22ம் தேதி துவங்கும். இந்த தேர்தல் அறிவிப்பை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி வரவேற்றுள்ளது.

Post a Comment

0 Comments