34 ஆண்டுகளுக்குப்பிறகு பஸ் வசதி பெற்ற கிராமம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள வடகாடு கிராமத்திற்கு, 34 ஆண்டுகளுக்குப்பின் பஸ் விடப்பட்டுள்ளதால், இங்குள்ளோர் மகிழ்ச்சியில் உள்ளனர். ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து மட்டுமே இருந்து வந்த நிலையில், ராமநாதசுவாமி கோயிலில் 1975 ல் நடந்த கும்பாபிஷேகத்தையொட்டி, ராமேஸ்வரம் தீவுப்பகுதிக்குள் மட்டும் இயங்கும் வகையில், தமிழக அரசால் டவுன் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது.



அன்றைய நாளில் தனுஷ்கோடி துறைமுகப்பகுதி வரை ரோடு வசதியும் இருந்ததால், ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், தங்கச்சிமடம் மற்றும் பாம்பனுக்குமாக 10 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. 1988ல் பாம்பன் கடலில் ரோடு பாலம் திறக்கப்பட்டு, வெளியூர் பஸ்போக்குவரத்தும் துவங்கியது. நாளடைவில் தீவு பகுதியில் டவுன் பஸ்களும் இயக்கப்பட்டன. ஆனால், ராமேஸ்வரத்திலிருந்து ஏழு கி.மீ., தூரத்தில் உள்ள வடகாடு கிராமத்திற்கு மட்டும் பஸ் இயக்கவில்லை. இந்த கிராமத்தினர் பல இன்னல்களுக்கு ஆளாகினர் . இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் இங்கு ரோடு வசதியே ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், 34 ஆண்டுகளுக்குப்பின் தற்போதுதான், இக்கிராமத்திற்கு(மார்ச் 1 முதல் ) டவுன் பஸ் விடப்பட்டுள்ளது. "தினம் மூன்று முறை பஸ் சென்று
வருவதால் , மகிழ்ச்சி தருவதாக,' கிராமத்தினர் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments