தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தலா?

புது தில்லி, ஜூலை 30: மேற்கு வங்கம், தமிழகத்தில் முன்கூட்டியே பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்றார் மத்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி.

எஸ்.ஒய். குரேஷி, 17-வது மத்திய தலைமை தேர்தல் ஆணையராக வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார்.

பதவியேற்றதும் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் முன்கூட்டியே பேரவைத் தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதைத் திட்டவட்டமாக மறுத்த குரேஷி, இரு மாநிலங்களுக்கும் முன்கூட்டியே தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்றார்.

முறைப்படி தமிழகத்தில் மே, 2011-லும், மேற்கு வங்கத்தில் ஜூன், 2011-லும் பேரவைத் தேர்தல் நடைபெற வேண்டும். இதில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் குரேஷி கூறினார்.

பொதுவாக தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்னதாக தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். அதன்படி, இவ்விரு மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்னதாக தேர்தல் பணி மேற்கொள்ளப்படும் என்று மேலும் அவர் கூறினார்.

தேர்தலுக்கான சாதக அம்சங்கள்... மாநிலத்தில் நடைபெற்ற அனைத்து இடைத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது, செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது, மக்கள் மத்தியில் ஒரு ரூபாய் அரிசி திட்டத்துக்கு ஏற்பட்டிருக்கும் வரவேற்பு போன்றவை தங்களுக்கு சாதகமான அம்சங்களாக இருப்பதால் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க திமுக முடிவெடுத்து, அதற்கு மும்முரமாக தயாராகி வருவதாக தகவல் வெளியானது.

அதேபோல, மேற்கு வங்கத்தில் நக்ஸல்களை ஒடுக்குவதில் மாநில இடதுசாரி அரசு தவறிவிட்டதாகவும், அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. மாநிலத்தில் முன்கூட்டியே பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி வருகிறார். இதனால் மேற்கு வங்கத்திலும் முன்கூட்டியே பேரவைத் தேர்தல் நடக்கலாம் என்று தகவல் வெளியானது.

இரு மாநிலங்களிலும் விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது உறுதி என்பதுபோல இரு மாநில பிரதான எதிர்க்கட்சிகளின் செயல்பாடும் அமைந்திருக்கிறது.

இதனால் மேற்கு வங்கம், தமிழகத்தில் முன்கூட்டியே பேரவைத் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதா என்று புதிய தலைமை தேர்தல் ஆணையர் குரேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பண பலம் கட்டுப்படுத்தப்படும்: தேர்தலில் பண பலத்தை பயன்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. வாக்காளர்களை பணம் கொடுத்து வாங்குகிறார்கள் என்பது எல்லா தேர்தல்களிலும் கட்சிகள் பரஸ்பரம் சுமத்திக்கொள்ளும் குற்றச்சாட்டு.

இந்நிலையில் இதைத் தடுத்து நிறுத்துவதற்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தலில் பண பலத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான வழிகாட்டுதலையும் தேர்தல் ஆணையம் வகுத்து வருகிறது. இது ஆகஸ்ட் மாதத்துக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று குரேஷி தெரிவித்துள்ளார்.

தேர்தலில் கோடி கோடியாய் பணத்தைக் கொட்டுபவர்களுக்கு நிச்சயம் வெற்றி என்ற சூழல் உருவாகியுள்ளதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில் குரேஷி இதைத் தெரிவித்தார்.

மீண்டும் வாக்குச் சீட்டு முறை வராது: ஆந்திரத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் சில தொகுதிகளில் வாக்குச் சீட்டு முறை கையாளப்பட்டது.

இது மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாறுவதற்கான அடையாளமா என்று கேட்டதற்கு, இல்லை என்று மறுத்தார் குரேஷி.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமே நூறு சதவீதம் நம்பகத்தன்மையானது என்றும், இதுவே தேர்தலில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Post a Comment

0 Comments