ஆந்திர இடைத்தேர்தல்: டிஆர்எஸ் கட்சி அமோக வெற்றி

ஹைதராபாத், ஜூலை 30: ஆந்திர மாநிலத்தில் 12 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டிஆர்எஸ்) கட்சி வெற்றி பெற்றுள்ளது. டிஆர்எஸ் ஆதரவுடன் ஒரு தொகுதியில் போட்டியிட்டு பாஜக வெற்றி பெற்றுள்ளது.

÷மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் படுதோல்வியைச் சந்தித்துள்ளன.

÷நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் டி. ஸ்ரீநிவாஸ், பாஜக வேட்பாளர் லட்சுமி நாராயணனிடம் 12 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

÷சித்திபேட்டை தொகுதியில் டிஆர்எஸ் வேட்பாளரும், அக்கட்சித் தலைவர் சந்திரசேகர ராவின் உறவினருமான டி. ஹரிஸ் ராவ் 95 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

÷12 தொகுதிகளில் 5 இடங்களில் வாக்குச் சீட்டு முறை பயன்படுத்தப்பட்டது. இதனால் அந்தத் தொகுதிகளில் முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

÷தெலங்கானா தனி மாநிலத்தை வலியுறுத்தி தெலங்கானா பகுதி எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்ததால் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

தெலங்கானாவுக்கு கிடைத்த வெற்றி- டிஆர்எஸ்: தனித் தெலங்கானா வேண்டுமென்பதை இடைத் தேர்தல் மூலம் தெலங்கானா பகுதி மக்கள் உறுதிபடுத்தி விட்டனர்.

இது மத்திய அரசுக்கும், தனித் தெலங்கானா அமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீகிருஷ்ணா கமிட்டிக்கும் மக்கள் கூறியுள்ள செய்தி. தெலங்கானா மாநிலம் அமையும் வரை ஓயமாட்டோம் என்று டிஆர்எஸ் தலைவரின் மகனும், சிர்சில்லா தொகுதியில் வெற்றிபெற்றவருமான ராம ராவ் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கருத்து: இடைத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதே சிறந்தது என்று கட்சித் தலைமையிடம் கூறினோம். ஆனால் தேசியக் கட்சி என்பதால் போட்டியிடுவது அவசியமாயிற்று. தெலங்கானா பகுதி மக்களின் எண்ணம் தேர்தல் முடிவு மூலம் தெளிவாகத் தெரிந்துவிட்டது. இதனை கட்சித் தலைமைக்குத் தெரிவிப்போம் என்று ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.பி. கே. ராஜகோபால் ரெட்டி கூறியுள்ளார். இந்தத் தேர்தல் முடிவு, கட்சிகளின் வலுவை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றார்.

Post a Comment

0 Comments