தமிழக ஐ.டி., துறை ரூ.4,000 கோடிக்கு ஏற்றுமதி: ஸ்டாலின் பெருமிதம்

கோவை : ""தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வாயிலாக, 2009 - 2010ம் ஆண்டில் 4,000 கோடி ரூபாய்க்கு தொழில் வர்த்தகம் செய்துள்ளோம். இந்திய தகவல் தொழில் நுட்ப துறையில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் பங்கு 25 சதவீதமாக உயரும்,'' என துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
கோவையில் நேற்று தகவல் தொழில் நுட்பப் பூங்கா திறப்பு விழாவில்,

துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கோவையில் துவக்கப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்பப் பூங்கா, நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய புரட்சிக்கும் வித்திடும். இன்று இந்தியாவில் சிறந்த தொழில் நகரமாக கோவை வேகமாக வளர்ந்து வருகிறது. தென் மாநிலத்தின் மான்செஸ்டர் கோவை. இந்நகருக்கு பெருமை சேர்க்க, சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் தகவல் தொழில் நுட்ப பூங்கா துவக்கப்பட்டுள்ளது. 380 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த பூங்காவுக்கு, 2007ல் அடிக்கல் நாட்டிய முதல்வரே இன்று, திறந்து வைத்துள்ளார். ஏற்கனவே, தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் 2000ம் ஆண்டில் முதல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா சென்னை தரமணியில் துவக்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. அப்பூங்கா தொடர்ந்து 10 ஆண்டுகளாக லாபம் ஈட்டும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய முக்கிய நகரங்களில் ஐ.டி., பூங்காக்கள் துவக்கப்படவுள்ளன. கோவை மாநகரம் டெக்ஸ்டைல், நூல் உற்பத்தி, மோட்டார் பம்பு, உதிரி பாகங்கள், வேளாண் தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. சமீபகாலமாக மின் ஆளுமையிலும் பெரியளவில் வளர்ச்சி பெற்று வருகிறது. கோவையில் இன்று ஐந்து மின்னணு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 2008 - 2009ல் 260 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கோவையில் இன்று எல்காட், டிட்கோ, சிப்காட், சிட்கோ, டைடல் பூங்கா மற்றும் எஸ்.டி.பி.ஐ., இணைந்து 380 கோடி மதிப்பில் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 12 ஆயிரம் பேருக்கும், 2,000 தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் வேலை கிடைக்கும். தகவல் தொழில் நுட்பத் துறையில் பிற மாநிலங்களை விட தமிழகம் சிறந்து விளங்குகிறது.

கடந்த 2001-2002ல் மென்பொருள் ஏற்றுமதியால் 10.2 மில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளது. 2008-2009ல் அது 58.7 மில்லியன் டாலர் ஆக உயர்ந்துள்ளது. 2010ல் அது 73.1 மில்லியன் டாலர் ஆக உயரும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை பொறுத்தவரை, 2009-2010ம் ஆண்டில் 4,000 கோடி ரூபாய்க்கு தொழில் வர்த்தகத்தை செய்து ஒரு உன்னத இடத்தை பிடித்துள்ளோம். இந்திய தகவல் தொழில் நுட்ப துறையை பொறுத்தவரையில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் பங்கு 25 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. அதற்கான முயற்சிகளில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நம் மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதி, கல்வி வசதி, தரமான மனித வளம்தான் இதற்கு காரணம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Post a Comment

0 Comments