தி.மு.க.,வை மெஜாரிட்டி அரசாக்கி காட்டுவோம் : கருணாநிதி சூளுரை

கோவை : ""தி.மு.க., அரசு மைனாரிட்டி அரசு அல்ல; மைனாரிட்டிகளின் அதாரிட்டி அரசு. விரைவில் மெஜாரிட்டி ஆகி காட்டுகிறோம்,'' என, முதல்வர் கருணாநிதி பேசினார்.

கோவையில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:செம்மொழி மாநாடு நடந்த போது 2, 3 முறை கோவைக்கு வந்தேன்; ஸ்டாலின், அமைச்சர்களும் வந்தனர். மாநாட்டுக்கு 10 நாட்களுக்கு முன் வந்தேன். எல்லா கம்பங்களிலும் கழகத்தின் இரு வண்ண கொடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதை பார்த்ததும், எனக்கு ஒரு உணர்வு.உலகத் தமிழர்களை அழைத்து நடத்தும் மாநாட்டில் கட்சிக் கொடிகள், படங்கள் இடம் பெறக் கூடாது என உத்தரவிட்டேன். இது கட்சி சார்பற்ற மாநாடு என்ற அடையாளத்தை தெரிவிக்க, கட்சி சார்பற்ற, தமிழ்த் தாய் போற்றும், மாநாடு ஆக நடத்த வேண்டும் என உத்தரவிட்டேன்.எனது வேண்டுகோளை ஏற்று, அவ்வாறே செய்தனர். என் படத்தையும் எடுத்து விட்டனர்.

ஆய்வாளர்கள், ஆற்றல் மிகு மொழியாளர்கள் வரும் மாநாட்டில், கட்சியை வளர்ப்பதற்கு தான் மாநாடு என எண்ணினால், அந்த சிறு மனத்தாங்கல் கூட மாநாட்டின் நோக்கத்தை கெடுத்து விடும் என வேண்டுகோள் விடுத்தேன். நான்கு நாட்களுக்குப் பின் தேடிப் பார்க்கக் கூட ஒரு கொடி இல்லை.கட்சியை வளர்த்த கருணாநிதி, கட்சி தோரணங்களை தொங்க விடக் கூடாது என சொன்னதற்காக கோவை கண்மணிகள் மன்னித்துக் கொள்ளுங்கள். மனம் புண் அடைந்திருப்பீர்கள்; மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.இனி தாராளமாக கொடிகளை கட்டுங்கள். தோரணங்களை தொங்க விடுங்கள். நம்மை யாரோ வீழ்த்த இடம் கொடுக்கப் போவதில்லை; யாராலும் வீழ்த்த முடியாது. வீழ்த்தப்பட்டாலும் எழும் ஆற்றல் பெற்றவர்கள். தி.மு.க., என்பது அரசியல் இயக்கம் மட்டுமல்ல, சமுதாய இயக்கம். அரசியல் நிகழ்ச்சிகள் அல்ல. சரித்திர சுவடுகள்; வரலாற்று ஏடுகள். கடந்த மாதம் அந்த ஏடு செம்மொழி ஆக திரும்பியது.

மலேசியா உள்ளிட்ட கடல் கடந்த நாடுகளில் ஏராளமான தமிழர்கள் உண்டு. பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு விருது வழங்கப்பட்டது. அதன் பெயர் கருணாநிதி விருது. காரணம் என் சொத்துக்கள், ஸ்தாபனங்களில் பங்கு பிரிக்கப்பட்ட போது, மனைவிமார்கள், மகன்களுக்கு கொடுத்தது போக, மிச்சம் இருந்தது கோபாலபுரம் வீடு. அதை மருத்துவமனைக்கு கொடுத்து விடுங்கள் என எழுதி வைத்தேன். அதுதான் வரலாற்றின் முக்கியமான இடம். வீடு, வாசல் பற்றி கவலைப்பட்டது இல்லை. என் சொத்து தி.மு.க., கொடி தான்.என்னை பார்த்து, மைனாரிட்டி கருணாநிதி அரசு என ஒருவர் கூறியுள்ளார். இது மைனாரிட்டி அரசு என ஜெயலலிதா சொல்கிறார். இது மைனாரிட்டிகளின் அதாரிட்டி அரசு.நான் அவர்களை அம்மையார் என்றுதான் அழைப்பேன். அவர்கள் வேண்டுமானால் என்னை கருணாநிதி என சொல்லட்டும்.

அண்ணாவிடம், பெரியாரிடம் அரசியல் நாகரிகம் கற்றவன் நான். கலைஞர் என சொன்னால் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்பதற்காக அவ்வாறு சொன்னார் என கருதிக் கொள்கிறேன். கருணை மிகுந்த நிதி என எடுத்துக் கொள்கிறேன்.அந்த பொறுமையிடம் பயின்றவர்கள். ஆகவே, மைனாரிட்டி அரசு என்றால் மகிழ்ச்சி அடைவேன். தமிழகத்தில் மைனாரிட்டி உண்டா, இல்லையா? தமிழகத்தில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மைனாரிட்டிகள். தி.மு.க., மைனாரிட்டிகளுக்காக பாடுபடும் இயக்கம் தான். ஆகவே, எங்களுக்கு கூச்சமில்லை; மறுப்பும் இல்லை.மைனாரிட்டியோ, மெஜாரிட்டியோ... திராவிடர் கொள்கைக்கு மைனாரிட்டி, மெஜாரிட்டி இல்லை. எனக்கு 87 வயது. உனக்கு 57 வயது கூட இல்லை. மரியாதை குறைவாக பேசுவதாக எண்ணிக் கொள்ளாதே. சிறுவயது முதலே தெரியும் என்பதால் நீ, நான் என பேசுவதாக எடுத்துக் கொள்.

உன்னைப்போல் பெரிய அறிவாளியாக இல்லாமல் இருக்கலாம். நான் மரியாதை தேடி அலைகிறேன் என்றல்ல. நான் பிறந்து வளர்ந்தது சுயமரியாதை இயக்கத்தில். என் குலத்தொழிலை செய்தால் துண்டை இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும். முடியாது என தோளில் போட்ட சுயமரியாதைக்காரன்.சுயமரியாதையை இழந்து விட்டால் நீங்கள் யாரோ, நான் யாரோ. இன்று தலைவராக நான் இருக்க சுயமரியாதைதான் காரணம். பெரியாரின் பிள்ளை, அண்ணாதுரையின் தம்பி. கோவையில் வ.உ.சி., மைதானத்தில் பேச பிற கட்சிகள் பயந்தபோது, 5,000 ரூபாய் வாடகை என்றபோது முதன் முதலில் பேசியவன் கருணாநிதிதான். பல முறை பேசியுள்ளேன். இன்னும் பேசுகிறேன்.ஏன் வ.உ.சி., எனக்கு பிடிக்காதா? அவரது செக்கு எங்கு என தேடாமல் கூட விட்டு விட்டனர். அதை தேடி, கிண்டி கண்காட்சியில் வைத்தவன் நான். என்னை பார்த்து மைனாரிட்டி என்றால், கவலை இல்லை. நாங்கள் மெஜாரிட்டி ஆகி காட்டுகிறோம். உண்மை தமிழர்கள் சூளுரை மேற்கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.

Post a Comment

0 Comments