நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு ; இந்தியாவிலேயே முன்னேற்ற மாநிலம் தமிழகம் ; முதல்வர் கருணாநிதி


புதுடில்லி: நாடு முழுவதும் இன்று 64 வது சுதந்திரதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டில்லி கோட்டையில் பிரதமர் மன்மோகன்சிங்கும், தமிழகத்தில் முதல்வர் கருணாநிதியும், ஏனைய மாநிலங்களில் முதல்வர்கள் மற்றும் கவர்னர்கள் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள் கொடியேற்றி வைத்தனர். டில்லியில் நடந்த கோலாகல விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் குண்டுகள் முழங்கிட கொடியேற்றி வைத்தார்.



பிரதமர் மன்மோகன்சிங் : அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் பேசுகையில்; நாட்டில் அமைதியை நிலைநாட்டிட பெரும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. மதச்சார்பின்மை இந்தியாவின் தூணாக விளங்குகிறது. இதனை பேணிக்காப்பதில் அரசு முனைப்புடன் இருந்து வருகிறது. நக்சலிசம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கிறது. நக்சல்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு பேச்சு நடத்த முன்வர வேண்டும்.



காங்., தலைவர் சோனியா : காஷ்மீர் விவகாரத்தில் அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்த அரசு தயார். காமன்வெல்த் போட்டி நடப்பது இந்தியாவுக்கு பெருமை அளிக்கிறது. இந்த போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும். விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்திட அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. விவசாய முன்னேற்ற பணிகள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். விழாவில் லோக்சபா சபாநாயகர் மீராகுமார், பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி மற்றும் மத்திய அமைச்சர்கள் , காங்., தலைவர் சோனியா உள்பட பலர் பங்கேற்றனர்.



முதல்வர் கருணாநிதி கொடியேற்றினார்: சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கொடியேற்றி வைத்தார்.விழாவில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கினார். குடிசை வீடுகள் , கான்கிரீட் வீடாக மாற்றும் திட்டப்பணிகள் துவங்கும் பணி ஆணையை வழங்கினார். இதன் மூலம் 3 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும். இதற்கென பல கோடிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக முதல்வர் சுதந்திரதின உரையாற்றும் போது குறிப்பிட்டார். அவரது பேச்சில கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு செய்த பல திட்டங்களை பட்டியலிட்டார். இந்தியாவின் முன்னேற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றார்.







தியாகிகளுக்கு வீரவணக்கம் : தொடர்ந்து விழாவில் முதல்வர் பேசியதாவது: சுதந்திரதின விழாவில் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். 200 ஆண்டுகாலம் பெரும் போராட்டம் நடத்தி தியாக சீலர்கள் சித்ரவதை செய்து சீரழித்தது. பலரை இழந்தோம். அண்ணல் காந்தியடிகள் அறப்போர் மூலம் அகிம்சை, சத்தியாகிரகம் , ஒத்துழையாமை இயக்கம் என பல வழிகளில் போராடி அந்நிய ஆதிக்கம் அகற்றப்பட்டன. சுதந்திரம் நிலைநாட்டிட போராடிய தியாகிகளுக்கு வீரவணக்கம் தெரிவித்து கொள்கிறேன். சுதந்திர தின விழாவில் முதல்வர் கொடியேற்றும் உரிமை கேட்டதற்கு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அனுமதி வழங்கினார். இவருக்கும் இப்போது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நலவாழ்வு, வளவாழ்வு கிடைத்திட அரிய பல திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். அரசியல், கல்வி, சமூக பொருளாதாரம் உயர்ந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட மாநில அரசுகள் செயல்பட வேண்டியது சுதந்திர கடமை ஆகும். அதுபோல எனது தலைமையிலான அரசு 2006 ல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. அதனை நான் இப்போது நினைவுபடுத்துகிறேன்.







திட்டங்கள் என்ன ? என்ன ? : ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கும் உன்னத திட்டம், குறைந்த விலையில் பாமாயில், துவரம் பருப்பு, மானிய விலையில் 10 மளிகைசாமான்கள், வழங்கி உணவு பாதுகாப்பு மூலம் உன்னத விலையில் வழங்கப்பட்டது. பட்டதாரி இல்லாத குடும்பங்களில் 20 ஆயிரம் இளைஞர்களுக்கு கல்விக்கட்டணம் வழங்குதல், பள்ளிக்கல்விக்கு 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, எனது ஆட்சிகாலத்தில் 5 தொழிற்கல்வி நிலையங்கள், 8 மருத்துவக்கல்லூரிகள், 11 பொறியியல் கல்லூரிகள் 14 கலை கல்லூரிகள், உருவாக்கப்பட்டுள்ளன. கோவையில் உகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டு தமிழ் மேம்பாட்டிற்கு வழிகாணப்பட்டுள்ளது. எல்லா கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம், ரூ. ஆயிரத்து 929 கோடி செலவில் ஒக்கனேக்கல் திட்டம், ஆயிரத்து 712 கோடி செலவில் மதுரை, கோவை, நாகை, விருதுநகர், திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுக்குடி நீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது, 14 ஆயிரத்து 600 கோடி செலவில் புதிய திட்டங்கள், பாலங்கள், சாலைகள், மேம்பாலங்கள், என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.



பல லட்சம் ஏழைகள் பயன் : குடிசை வீடுகள் கான்கிரீட் வீடாக மாற்றும் திட்டம் மூலம் 3 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணையை இன்று வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். 4 லட்சத்து 65 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு , வரும்முன்காப்போம்திட்டம், பள்ளிச்சிறார்களுக்கு இருதயம் காக்கும் திட்டம், கண்ணொளி திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம், கலைஞர்காப்பீட்டு திட்டம், என்ற திட்டங்களால் பல லட்சம் ஏழைகள் பயன்பெற்று வருகின்றனர். தொண்டு உள்ளம் கொண்ட அன்னை தெரசா நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நல்ல பல திட்டங்களை செய்து வரும் தமிழகம் இந்தியாவின் முன்னேற்ற மாநிலமாக , முதல் மாநிலமாக திகழ்கிறது. சுப்ரீம் கோர்ட் பலமுறை பாராட்டியிருக்கிறது.



இவ்வாறு ஏழைகள் பலர் நன்மை பெரும் திட்டம் செயல்படுத்தி வரும் நாம் மெய்வருத்தம் பாராமல், பசி மறந்து அவதூறுகளை அள்ளி வீசும் நபர்கள் குறித்து கவலைப்படாமல் காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது என செயல்படுவோம். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

Post a Comment

0 Comments