அரசியல் களமாகும் கோவை; அச்சத்தில் மக்கள்


கோவை : அடுத்தடுத்து நடந்து வரும் அரசியல் மற்றும் அரசு நிகழ்ச்சிகளால், கோவை மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு சோதனை ஏற்பட்டு வருகிறது.



கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்று அரசு அறிவித்ததும், கோவை நகர மக்கள் ஆனந்தக் கூத்தாடினர். இதனால், நகருக்கு பல வகையிலும் கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும் என்பதே அவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம்; அவர்கள் நினைத்தது பொய்த்துப் போகவுமில்லை. நிரந்தரக் கட்டமைப்பு வசதிகள் இல்லாவிடினும், கோவை நகரின் ஒரு பகுதி புதுப்பொலிவு பெற்றது.



செம்மொழி மாநாட்டைத் தொடர்ந்து, அரசியல் மையமாக கோவை மாறி வருவது, அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் பலத்தைக் காண்பிப்பதற்கான புதிய களமாக கோவையை திராவிடக் கட்சிகள் தேர்வு செய்துள்ளன. வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வெற்றிக்கோலம் போடுவதற்காக, பல அரசியல்புள்ளிகள் இங்கே மையம் கொண்டுள்ளன. பொதுவாக, கோவை மக்கள் அமைதியான வாழ்க்கையையும், வளர்ச்சிக்குரிய பாதையையும் நேசிப்பவர்கள். ஆனால், செம்மொழி மாநாடு இங்கு நடத்துவதாக அறிவிக்கப்பட்ட பின், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலக அளவில் கோவை நகரின் மீது எல்லோரது கவனமும் திரும்பியது. மாநாட்டையொட்டி நடந்த பணிகளை ஆய்வு செய்யவும், ஆலோசனை செய்யவும் அமைச்சர்களும், அதிகாரிகளும் வந்தபோது, தினமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புதுவிதமான அவதியை கோவை மக்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர். செம்மொழி மாநாடு நடந்த நாட்களில் இந்த அவதி பல மடங்காக அதிகரித்தது.



செம்மொழி மாநாட்டுக்குப் போட்டியாக, ஜூலை 13ல் வ.உ.சி., மைதானத்தில் பொதுக்கூட்டத்தை நடத்தினார் ஜெயலலிதா. அன்று கூடிய கூட்டமும், அதனால் ஏற்பட்ட நெரிசலும் எக்கச்சக்கம். அதிலும் பாதிக்கப்பட்டது கோவை மக்கள்தான். ஜெயலலிதா கூட்டத்துக்குப் போட்டியாக, தி.மு.க.,வும் ஆக.,2ல் அதே மைதானத்தில் பொதுக்கூட்டத்தை நடத்தியது. முதல்வர் கருணாநிதி பேசிய அந்தக் கூட்டத்துக்கும் பல மாவட்டங்களில் இருந்து ஆட்கள் திரட்டி வரப்பட்டனர். இரு கூட்டத்திலும், கோவை மக்களில் 10 சதவீதம் பேர் கலந்து கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால், சாலையை மறித்து நின்ற வாகனங்கள், மணிக்கணக்கில் தேங்கிய போக்குவரத்து நெரிசல் என, இதுவரை காணாத பல புதிய காட்சிகளை அவர்கள் கண்டனர். அடுத்தடுத்து நடத்தப்படும் இந்த அரசியல் பொதுக்கூட்டங்களால், எல்லா அரசியல் கட்சிகளின் கவனமும் இங்கே திரும்புவது, கோவை மக்களின் அமைதியான வாழ்க்கை முறைக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். ஏனெனில், அதிரடி அரசியலை கோவை மக்கள் எப்போதுமே விரும்பியது இல்லை.



நகர வளர்ச்சி, ஊழலற்ற நடைமுறை, வெளிப்படையான நிர்வாகம் இவற்றின் மீது அதிக ஈர்ப்புடன் உள்ள கோவை மக்களைக் கவர வேண்டுமெனில், தற்போது செயல்படுத்தும் திட்டங்களை ஆளும்கட்சி துரிதப்படுத்த வேண்டும். அதில் நடக்கும் தவறுகளை எதிர்க்கட்சியினர் தைரியமாக சுட்டிக் காட்ட வேண்டும். கோவை மக்களின் இதயங்களை வெல்லுவதற்கு இதைத்தவிர வேறெதுவும் தேவையில்லை.



நாங்களும் நடத்துவோம்ல! அ.தி.மு.க.,வுக்குப் போட்டியாக வ.உ.சி., மைதானத்தில் தி.மு.க.,பொதுக்கூட்டம் நடத்த, இரண்டுக்கும் போட்டியாக அதே மைதானத்தில் வரும் 28ம் தேதி பொதுக்கூட்டத்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி, கோவை மக்கள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. ஒரு கோஷ்டி இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வர, அதை முறியடிப்பதற்கான வேலைகளில் எதிர்கோஷ்டியினர் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர். சரக்கு, சம்பளம் கொடுத்து திராவிடக் கட்சிகள் கூட்டம் சேர்த்தன; தேசியக் கட்சி எப்படி கூட்டம் சேர்க்கப்போகிறதென்று தெரியவில்லை. கோஷ்டி மோதலால் வேஷ்டி கிழிப்பு இல்லாமல் இருந்தாலே, அது அந்த பொதுக்கூட்டத்துக்கு வெற்றிதான்.

Post a Comment

0 Comments