மகாத்மா காந்தியை பின்பற்றுங்கள்: ஒபாமா அறிவுரை


வாஷிங்டன், ஆக.4: ஆப்பிரிக்காவின் இளம் தலைவர்கள் இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியின் போதனைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவுரை வழங்கினார்.

அதிபர் ஒபாமா, ஆப்பிரிக்காவின் இளம் தலைவர்களை வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது மகாத்மா காந்தியின் போதனைகளை பின்பற்றி நடக்குமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அந்தக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: நாம் எதுவாக விரும்புகிறோமோ அதுவாகவே மாறிட வேண்டும். இதைத்தான் மகாத்மா அன்றே சொன்னார். நாம் உலகில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால் மகாத்மா சொல்லியதை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

ஆப்பிரிக்கக் கண்டத்தை உலகின் இணைப்புப் பாலமாகவே நான் கருதுகிறேன். ஆப்பிரிக்காவின் எதிர்காலம் இளம் தலைவர்களாகிய உங்கள் கையில்தான் உள்ளது. ஆப்பிரிக்க இளைஞர்களின் அறிவும், திறமையும் இந்த உலகத்தின் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது . இதை நீங்கள் அளிக்க வேண்டும்.

ஆப்பிரிக்க இளைஞர்கள் தற்போது எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். எனினும் ஆப்பிரிக்க இளைய சமுதாயத்தின் திறமையை வெளிக்கொணர கல்வி உதவி உள்பட பல்வேறு உதவிகளை அமெரிக்கா அளித்து வருகிறது. இதை முறையாகப் பயன்படுத்திக் கொண்டு இளைஞர்கள் முன்னேற வேண்டும்.

காலனி ஆதிக்கத்தை தூக்கியெறிந்து கென்யா விடுதலை பெற்ற காலக்கட்டத்தில்தான் எனது தந்தை அங்கிருந்து அமெரிக்காவுக்கு வந்தார். அவரை அமெரிக்காவுக்கு கொண்டுவந்து சேர்த்தது கல்விதான். இதனால் ஆப்பிரிக்க இளைஞர்கள் தங்களுக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களை உயர்த்திக் கொள்ள முயல வேண்டும்.

தன்னிறைவு பெற்ற, வளமான ஆப்பிரிக்காவை காண வேண்டும் என்றே நான் விரும்புகிறேன் என்றார் அதிபர் ஒபாமா.

Post a Comment

0 Comments