நாடு தழுவிய பந்த் : தொழிற்சாலைகள் மூடல்; 100 விமானங்கள் ரத்து: பல கோடி நஷ்டம்


புதுடில்லி: விலைவாசி உயர்வு , தொழிலார்களுக்கான சட்ட கிடுக்குப்பிடி அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு, கட்டாய ஓய்வு , தனியார் மயம் மற்றும் வேலை பறிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து இன்று ( செவ்வாய்க்கிழமை ) நாடு தழுவிய பந்த்க்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. பந்த் காரணமாக பல கோடிக்கு நஷ்டம் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



எந்த எந்த அமைப்புகள் : இடது சாரிகள் ஆளும் மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்துடன் பல தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்ளுக்கு எதிரான நிலை உள்பட முக்கிய பிரச்னைகளை முன்வைத்து இந்த பந்த் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் ( ஐ.என்.டியு.சி.,) ( ஏ.ஐ.டி.யு.சி., ) ( சி.ஐ.டி.யு., ) (எச்.எம்.எஸ்., ) ( ஏ.ஐ.யு.டி.யு.சி., ) ( ஏ.ஐ.சி., சி.டி.யு.,) ( டி.யு.சி.சி., ) ( யு.டி.யு.சி.,) உள்ளிட்ட சங்கத்தினர் பங்கேற்கின்றனர். இதனால் வங்கிகள், போக்குவரத்து, விசைத்தறி ஆலைகள், மற்றும் தொழிற்கூடங்கள் மூடப்படும்.



தமிழகத்தில் பாதிப்பு எப்படி : பந்த் காரணமாக கேரளா, மேற்குவங்கம், திரிபுரா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மொத்தம் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டில்லியில் இருந்து ஏனைய மாநிலங்களுக்கு செல்லும் முக்கிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து கிளம்பும் பல விமானங்கள் புறப்படவில்லை. இதனால் வெளிநாடு செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டனர். கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வாகனங்கள் எதுவும் வரவில்லை . இதனால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்கெட்டில் கோடிக்கணக்கில் மதிப்பிலான காய்கறிகள் தேங்கியுள்ளன. கோவை, திருப்பூரில் பின்னலாடைகள் மூடப்பட்டுள்ளன. கோவையில் ஆட்டோக்கள் ஓடவில்லை.



6 கோடி தொழிலாளர்கள் : தமிழகத்தில் 45 ஆயிரம் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் மொத்தம் 6 கோடி தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்பதாக சி.பி.ஐ.எம்., கட்சியை சேர்ந்த குருதாஸ்குப்தா கூறினார்.



தமிழக தலைமை செயலர் எச்சரிக்கை : நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, அசம்பாவிதங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தலைமைச் செயலர் எச்சரித்துள்ளார்.

இதுபற்றி தலைமைச் செயலர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் மற்றும் இதர போக்குவரத்து வாகனங்கள் தங்குதடையின்றி இயங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லாமல் தக்க ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். பஸ்களையும், பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்த முயலுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முக்கிய இடங்களை உள்ளடக்கி விரிவான போலீஸ் ரோந்துப் பணிகள் செய்ய வேண்டுமென்றும், குடிநீர், பால் உள்ளிட்ட இதர அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்போர், பணிக்குச் செல்பவர்களை தடுப்பவர்கள், சட்ட விரோத நடவடிக்கைகள் மற்றும் வன்முறை, நாசவேலை ஆகியவற்றின் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது தக்க நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர்களும், சென்னையில் போலீஸ் கமிஷனர்களும் இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.

பால் வினியோகம் பாதிக்காது: வேலை நிறுத்தப் போராட்டத்தால், ஆவின் பால் தங்குதடையின்றி வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பால்வளத் துறை அமைச்சர் மதிவாணன் தலைமையில், பால்வளத்துறை மற்றும் ஆவின் உயரதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பால் உற்பத்தியை பெருக்கவும், மத்திய மாநில அரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை விரைவாக செயல்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. மேலும், இன்று நடக்கவுள்ள தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தால், பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தடையின்றி பால் கொள்முதல் செய்யவும், ஆவின் பால் நுகர்வோருக்கு பால் மற்றும் பால் பொருட்கள் வினியோகம் தடையின்றி மேற்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தினார்.

Post a Comment

0 Comments