கேரளா, தமிழகம் உட்பட 4 மாநிலங்களில்புதிய தலைவர்: காங்.,மேலிடம் கவனம்


புதுடில்லி : தமிழகம், கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் புதிய தலைவர் தேர்தல் மீது, காங்கிரஸ் மேலிடத்தின் கவனம் திரும்பியுள்ளது. தேர்தல் நேரத்திலும், அதற்கு பின்னும் கட்சியின் வளர்ச்சி அடிப்படையில் அதிக அக்கறை காட்ட முடிவாகியிருக்கிறது.



காங்., தலைவராக சோனியா நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நிலையில், மாநிலத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் மீது காங்கிரஸ் நிர்வாகிகளின் கவனம் திரும்பியுள்ளது.கேரளா, தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து 2012ல், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில், மாநிலக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில், இரண்டாம் இடத்தில் உள்ள இடங்களில் மாநில காங்கிரஸ் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டி உள்ளது. காரணம், இதுபோன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி பெற மேலிடம் அக்கறைப்படுகிறது.



மேற்கு வங்கத்தை பொறுத்தவரையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார். இந்த மாநிலத்தில், மனஸ் பூனியா, மாநில காங்., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., வெற்றி பெறும் பட்சத்தில், மனஸ் பூனியாவுக்கு முக்கிய பதவி தரப்படலாம். அசாமை பொறுத்தவரை, தருண் கோகய் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபின், அக்கட்சி பெற்ற மகத்தான வெற்றியைத் தொடர்ந்து அவரை காங்., தலைவர் சோனியா, மாநில முதல்வராக்கினார்.அதுபோலவே, இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் காங்கிரஸ் கட்சியில் ரமேஷ் சென்னிதாலாவுக்கு மாநில தலைவராக வாய்ப்புகள் அதிகம்.



டில்லியில் ஷீலா தீட்சித், ராஜஸ்தானில் அசோக் கெலாட், ஆந்திராவில் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி, கர்நாடகாவில் எஸ்.எம். கிருஷ்ணா, அரியானாவில், பூபேந்திர் சிங் ஹூடா, பஞ்சாப் மாநிலத்தில் அம்ரீந்தர் சிங், காஷ்மீரில் குலாம் நபி ஆசாத் ஆகியோர் மாநிலத் தலைவராக இருந்து முதல்வரானதால், தற்போது மாநிலத் தலைமை பதவிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.பொதுவாக, மாநில காங்கிரஸ் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தலைவர் கையில் இருக்கிறது. விசுவாசிகளுக்கே முக்கியப் பதவிகள் கிடைக்கும் என, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.



தமிழகத்தைப் பொறுத்தரை, நிலைமையே தலைகீழ். தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை. இனி தேர்தலுக்குப் பின், இந்த சூழ்நிலை இருக்காது என்று கூறப்படுகிறது.தமிழக காங்கிரசில் உள்ள கோஷ்டித் தலைவர்கள் தங்களது ஆதரவாளர்களின் பட்டியலை மேலிட தலைவர்களிடம் வழங்கிவிட்டனர். மத்திய அமைச்சர் வாசன் மட்டும் தனது ஆதரவாளர்கள் பட்டியலை வழங்கவில்லை.ஆனால், இந்த மாநிலங்களில் புதிய தலைவர் தேர்தல் முறைப்படி நடக்காத பட்சத்தில் முடிவை கட்சித் தலைவர் சோனியாவிடம் விட்டுவிடுவது என்றும், அதன்படி அடுத்த சில நாட்களில் புதிய தலைவர் முறைப்படி அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் ஆட்சி, அதிகாரம் என்ற அடிப்படையில் இம்மாநிலங்களில் தலைவர் தேர்தல் அமைய மேலிடம் விரும்புகிறது என்று கூறப்பட்டது.

Post a Comment

0 Comments