காங்., தலைவராக பொறுப்பேற்றார் சோனியா : நேரு, இந்திரா சாதனையை முறியடித்து சாதனை


புதுடில்லி : காங்கிரஸ் தலைவராக நான்காவது முறையாக சோனியா தேர்வு செய்யப் பட்டார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நான்காவது முறையாக தலைவரானதன் மூலம், நீண்ட காலம் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருப்பவர் என்ற சாதனையுடன் பெருமையைப் பெறுகிறார்.



காங்கிரஸ் கட்சி 125 ஆண்டு பழமையானது. இந்தக் கட்சியின் தலைவராக 1998ம் ஆண்டு சோனியா முதன்முறையாக பதவியேற்றார். அதன்பின், இருமுறை அவரே தலைவரானார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தலுக்கான அறிவிப்புசமீபத்தில் வெளியிடப்பட்டது. மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என, அறிவிக்கப்பட்ட நாள் வரை, சோனியாவை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. சோனியாவை மீண்டும் தலைவராக தேர்வு செய்ய பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்., பொதுச் செயலர் ராகுல், கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் முன்மொழிந்தனர்.



சோனியாவுக்கு ஆதரவாக மொத்தம் 56 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், சண்டிகாரில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவைத் தவிர மற்ற அனைத்தையும், காங்., தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியும், காங்., மூத்த தலைவருமான ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஏற்றுக் கொண்டார். "வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால், தலைவராக சோனியா தேர்வு செய்யப்பட்டு விட்டார். இருந்தாலும், தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் அவரிடம் இன்று வழங்கப்படும்' என, ஆஸ்கார் பெர்னாண்டஸ் கூறினார்.காங்கிரஸ் தலைவராக நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்ட சோனியாவுக்கு,கட்சியின் தலைமையகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் ஓரா நேற்று முதலில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து கூறினார். அத்துடன் மேள தாளங்கள் முழங்கின. பட்டாசுகள் வெடித்து, தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



இதன்பின், கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் பேசிய சோனியா கூறுகையில், ""என்னைத் தலைவராக தேர்ந்தெடுக்க ஆதரவு அளித்த நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எல்லாத் தரப்பு மக்களுக்காகவும் பாடுபடுவது காங்கிரஸ். நாம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த அடிப்படையை மறக்கக்கூடாது. காங்., கொடி எப்போதும் உயரத்தில் பறக்க தொண்டர்களுடன் இணைந்து தொடர்ந்து கடுமையாக பணியாற்றுவேன்,'' என்றார். கட்சியின் தலைவராக சோனியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், செயற்குழு கலைக்கப்படும். அதற்கு பதிலாக உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறும் வரை அந்தக் குழு கட்சிப் பொறுப்புகளை கவனிக்கும். கட்சியின் மாநாடு நடைபெறும் தேதியை உயர்மட்டக் குழுவே கவனிக்கும். மாநாட்டின் போது கட்சியின் புதிய செயற்குழு தேர்வு செய்யப்படும். அடுத்ததாக மாநிலங்களிலும் கட்சித் தலைவர்கள் தேர்வு நடக்கும்.

Post a Comment

0 Comments