இன்று விநாயகர் சதுர்த்தி


மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் போற்றும் தனிப்பெருந் தெய்வம் விநாயகப் பெருமான். ஓங்கார வடிவமுடையவர். போற்றுபவர் துயர்களைப் போக்கும் அருட்கடல். அடியாருக்கு ஓடி வந்து அருள்புரியும் மூலாதார மூர்த்தி. வாழ்வில் உண்டாகும் இடர்களைப் போக்கி வழிகாட்டுபவர் என்பதால் விக்னேஸ்வரன் என்று பெயர் பெற்றார். "வி' என்றால் சிறப்பு. "நாயகன்' என்றால் தலைவர். சிறப்பு மிக்க தலைவர் என்பது பொருள். கடவுளுக்கெல்லாம் மேலான தலைமைக் கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குகிறார்.



விநாயகர் ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று திருக்கண்கள், நான்கு திருத்தோள்கள், ஐந்து திருக்கரங்கள், ஆறுஎழுத்து மந்திரங்கள் கொண்டவர். அவரை வழிபட்டால் ஏழு பிறவிகளும் நீங்கும். எண்திசைகளும் புகழும். நவமணிகளும் பெற்ற சம்பத்துடன் வாழச் செய்வார். விநாயகரின் திருமேனி இடையில் கீழே பூத உடம்பும், இடையிலிருந்து கழுத்துவரை தேவவுடம்பும், மிருகத்தலையும், ஒரு கொம்பு ஆண்மையையும், கொம்பில்லாத பகுதி பெண்மையையும் என்று எல்லாவற்றையும் தன்னுள்ளே கொண்டிருக்கும் திருவுருவம் ஆகும்.



யானையை அடக்கும் கருவிகள் பாசமும், அங்குசமும் கையில் வைத்திருப்பவர். தன்னையடக்குவார் ஒருவரும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் கைகளில் இக்கருவிகளை ஏந்தி நிற்கிறார். விநாயகருக்கு ஐந்து கரங்கள். கும்பம் ஏந்திய திருக்கரம் படைத்தலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் வைத்திருப்பது மறைத்தலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தன்மையையும் விளக்குகிறது. உலகவுயிர்களுக்கு வேண்டிய ஐம்பெரும் தொழில்களையும் விநாயகப்பெருமானே செய்து இப்பெரிய உலகத்தை இயக்குகிறார்.



கரும்பு, பழங்கள், சர்க்கரை, பருப்பு,நெய், எள், பொரி, அவல், இளநீர், தேன்,பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை,கொழுக்கட்டை முதலிய பொருட்களை விநாயகருக்கு நிவேதனம் செய்ய வேண்டும். விநாயகப்பெருமானுக்குரிய இந்நிவேதனப் பொருட்களை அருணகிரிநாதர் திருப்புகழில் அழகாக குறிப்பிடுகிறார். விநாயகருக்கு உகந்தது அருகு. இது ஓரிடத்தில் முளைத்து, கொடிபோல நீண்டு ஆறு இடங்களில் வேரூன்றிக் கிளைக்கும் தன்மையுடையது. ""அருகு போல் வேரூன்றி'' என்பது பழமொழி. இந்த அருகம்புல்லை அர்ச்சிப்பது விநாயக வழிபாட்டில் மிகவும் குறிப்பிடத்தக்கது. முமு முதற்கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த இந்த சதுர்த்தி நன்னாளிலே அவருடைய பாத கமலங்களை வணங்கி அருள் பெறுவோம்.

"பிள்ளையாரின் மகிமை''



ஆனை முகத்தோனே
ஆறுமுகத்துக்கு மூத்தவனே
உலகமென பெற்றோரை, நீ சுற்றியதால்
உலக மக்களே உன்னைச் சுற்றுகிறார்கள்



அலைபோல் கூட்டம் குமியும்
மலைபோல் தேங்காய்ச்சிதறல் குவியும்
உன் கோயில் இல்லாத ஊர் உண்டோ ?
உன்னைத் துதிக்காதவர் எவரும் உண்டோ ?



வைபவங்களில் முதல் மரியாதை உனக்குத்தான்
வையகத்தில் புண்ணியம் கிடைப்பதும், உன்னால்தான்
பிள்ளை இல்லாதவர்கூட பிள்ளை பிறந்திட,
உன்னைத்தானே தினமும் சுற்றுகிறார்கள்



விவசாயமோ, வியாபாரமோ, அனைத்திலும்
""பிள்ளையார் சுழியே உனக்குத்தானே''
கடலில் கடைசியில் உன்னைக் கரைப்பதே,
சுனாமியைத் தடுப்பதற்காகத்தானோ ?



காலமெல்லாம் கவலைகளை மறந்திடுவோம்
இருளை நீக்கி, அருளை அடைந்திடுவோம்
""பிள்ளையாரின் கருணையே வரப்பிரசாதம்''
""அனைவரும் வணங்குவோம் அவன்பாதம்''

Post a Comment

0 Comments