இன்று தி.மு.க., பிரமாண்ட பொது கூட்டம்: முதல்வர் கருணாநிதி திருச்சியில் பங்கேற்பு


திருச்சி: புதிய கலெக்டர் அலுவலக கட்டடத் திறப்பு விழா மற்றும் மாலை நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் இன்று திருச்சி வருகிறார்.



முதல்வர் கருணாநிதி, இன்று அதிகாலை 5.15 மணிக்கு ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், திருச்சி ஜங்ஷன் வருகிறார். அங்கு மாவட்ட செயலரும், அமைச்சருமான நேரு தலைமையில், தி.மு.க.,வினர் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பு முடிந்து, சிறிது நேர ஓய்வுக்கு பிறகு, காலை 10 மணிக்கு, புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். விழாவில், கலெக்டர் அலுவலகம் உட்பட 116.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 697 பணிகளை திறந்து வைத்தும், 192.18 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிக்கு அடிக்கல் நாட்டியும், 8.36 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கியும், கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 63.35 லட்ச ரூபாய் மதிப்பிலான 8,447 பேருக்கு வீடு வழங்கியும் முதல்வர் கருணாநிதி பேசுகிறார்.



திருச்சியில் பொன்மலை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், 169 கோடி ரூபாயில் நடக்கும் குடிநீர் திட்ட பணிகளில் 90 எம்.எல்.டி., திறனில் முதன் முதலாக 9 எம்.எல்.டி., தண்ணீர் விடும் பணியையும் துவக்கி வைக்கிறார். வெள்ளத் தடுப்பு திட்டத்தின் கீழ், 74 கோடி ரூபாயில் முடிக்கப்பட்ட 4 பேக்கேஜ் பணியை, முதல்வர் துவக்கி வைக்கிறார். மதியம் 12.30 மணி வரை நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மதியம் ஓய்வுக்கு பிறகு, மீண்டும் மாலை 5 மணிக்கு, கரூர் பை-பாஸ் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயம் அருகில் நிறுவப்பட்டுள்ள, கருணாநிதியின் நண்பரும், மறைந்த தி.மு.க., முன்னாள் அமைச்சருமான அன்பில் தர்மலிங்கம் உருவசிலையை திறந்து வைக்கிறார்.



மாலை 6 மணிக்கு, மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடக்கும் தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இன்று இரவு முதல்வர் திருச்சியில் தங்கி, கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்திக்கிறார். நாளை காலை, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தலாம் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் கூட்டணி விவகாரம், உட்கட்சி பூசல் குறித்து விவாதிப்பார் என கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments