ஊழலை ஒழிக்கும் போராட்டம் தொடருமென கொட்டு முரசே!

உணவு, உடை, இருப்பிடம்... ஏழைகளின் வாழ்க்கையில் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் மூன்று விஷயங்கள் இவை. உறங்கும் போதும், எழும் போதும் மனதோடு நிழலாடும் ஏக்கமான கனவுகள் இவை. அடுத்த வேளை சோற்றுக்கு அவதிப்படுபவன் கூட, அடுத்தவன் பணத்தை தொட பயப்படுவான். நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி... நாட்டையே வஞ்சனை செய்யும் இந்த ஊழல் அரசியல்வாதிகளுக்கு, தன்செயல் அவமானமாக தெரியாதா? நியாயமே வாழ்க்கையாய், நேர்மையே நெறிமுறையாய் வாழ்பவர்களின் நெஞ்சங்களை தினம் தினம் பொசுக்கி கொல்வது ஊழல் தான். ஊழலை ஒழிக்க புதிய யுத்தம் துவங்கி விட்டது. காந்தியவாதி அன்னா ஹசாரே துவங்கியிருப்பது, மகாத்மாகாந்தி வழியில் இன்னொரு அகிம்சை போராட்டம் தான். ஊழலை ஒழிக்க இன்னொரு 200 ஆண்டுகள் வேண்டாம். ஒவ்வொரு இந்தியனும் ஓங்கி குரல் கொடுத்தால், அரசியல்வாதிகளின் மனசாட்சிக்கு வலியெடுக்கும். சுதந்திர இந்தியா நேர்மையான காற்றை சுவாசிக்கும். இதோ... ஊழலுக்கு எதிரான கல்லூரி மாணவர்களின் ஆதரவுக் குரல்... சி. அர்ச்சனா (செந்தமிழ்க் கல்லூரி, மதுரை): அடித்தட்டு மக்கள் முன்னேறவிடாமல் தடுப்பது ஊழல் தான். வசதி படைத்தவர்கள் பதவி, விளையாட்டு, வேலை என அனைத்திலும் பணம் கொடுத்து சாதிக்கின்றனர். ஏழைகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. ஊழலில் சிக்கியவர்கள் அனைவருமே, ஒருகாலத்தில் வசதியில்லாதவர்கள் தான். இவர்களுக்கு பணம் எப்படி சேர்ந்தது? இவர்களுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் போராட்டம் சரிதான். பி.தர்மலிங்கம் (பொறியாளர், திண்டுக்கல்): ஊழல்வாதிகள் பாகுபடின்றி தண்டிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தான் இக்கருத்தில் வேறுபடுகின்றனர். லோக்பாக் வரம்பில் பிரதமரையும், அவசியம் கொண்டு வரவேண்டும். தவறு செய்பவர்கள் உயர்பதவியில் இருந்தால் விதிவிலக்கு என்பது, சுயலாபத்திற்காக கொண்டு வரப்படும் மசோதா ஆகிவிடும். இதில் எந்தவித பலனும் இருக்காது. பி.நந்தினி(வீரபாண்டி கலை அறிவியல் கல்லூரி, தேனி): ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரேயை சிறையில் அடைத்தது கண்டிக்கத்தக்கது. மாணவர்கள் ஊழலுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். அதற்காக இணையதளம் மூலம் நான் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். காந்திய போராட்டத்தை ஆதரிப்பது அவசியம். எஸ்.ரோஸ்லின் நிர்மலா (செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி, ராமநாதபுரம்): ஊழல் மலிந்த இந்தியா, முன்னேற வேண்டுமெனில் லோக்பால் மசோதா கண்டிப்பாக நிறைவேற வேண்டும். கடவுள், சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்து, பதவிக்கு வந்த பின் பிரதமர் மட்டுமில்லை... யாரும் விதிவிலக்கு கோரக்கூடாது. மடியில் கனமில்லை எனில் வழியில் ஏன் பயம்? இந்த புரட்சி விடிவின் ஆரம்பம். எக்ஸ்.பிரபா(அரசு மகளிர் கல்லூரி, சிவகங்கை) : அரசியலில் சேவை மறைந்து குடும்ப அரசியலாகி போனதால், லஞ்சம், ஊழல் புரையோடிவிட்டது. இதற்காகவே இந்த சட்டம் அவசியம். தனி ஒரு மனிதனுக்கு சமுதாய நலனில் அக்கறை உள்ளது. ஆனால், இந்த நாட்டை ஆளும் அரசியல் தலைவர்களுக்கு, இந்த உணர்வு வர தயங்குவது ஏன்? வி.கார்த்திகை செல்வி (செந்திக்குமார நாடார் கல்லூரி, விருதுநகர்): இந்தியாவில் ஊழலை ஒழிப்பதற்கு இது நல்ல வாய்ப்பு. ஊழல் ஒழிக்கப்பட்டால் வலிமையான பாரதம் உருவாகும். பிரதமரும் இந்திய குடிமகன் தானே? சுயநலத்திற்காக ஊழல் செய்பவர்களுக்கு எதிராக, பொது நலத்துடன் போராடும் ஹசாரேயின் வழியை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். மாணவ சமுதாயமும் போராட முன்வர வேண்டும். சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் சென்னை: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, சென்னையின் பல இடங்களில் நேற்று, போராட்டம் நடத்தப்பட்டது. திருவான்மியூரில் இன்று ஐந்தாவது நாளாக தொடர்கிறது. சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, கடந்த நான்கு நாட்களாக சென்னையின் பல்வேறு இடங்களில், போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திருவான்மியூர்: இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக, சென்னை திருவான்மியூரில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. மகாத்மா காந்தியின் செயலர் கல்யாணம் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி லட்சுமிகாந்த பாரதி ஆகியோர் துவக்கி வைத்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது நலச் சங்கங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்ததால், பலர் உடல் சோர்வு ஏற்பட்டு, மயக்க நிலையில் உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர். மருத்துவர்கள் குழு வரவழைக்கப்பட்டு தொடர்ந்து சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. உண்ணாவிரதத்திற்கு பொதுமக்களின் ஆதரவு பெருகி வருவதால், போராட்டம் வலுவடைந்து வருகிறது. இன்றும் தொடர்கிறது. திருவொற்றியூர்: வாய்ஸ் ஆப் இந்தியன், வெளிப்படை மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்கம் மற்றும் வடசென்னை மக்கள் உரிமை கூட்டமைப்பு இணைந்து, திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிறுத்தத்திலிருந்து சூரியமூர்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர், தேசியக்கொடி ஏந்தி, பெரியார் நகர், திருவொற்றியூர் மார்க்கெட் வழியாக தேரடி சென்றனர். அவர்களுடன் பொதுமக்களும் ஊழலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி சென்றனர். சைதாப்பேட்டை: அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதவாக, சைதாப்பேட்டையில் உள்ள பனகல்மாளிகை முன்பாக எக்ஸ்னோரா, ஆனந்தம், சோழநாடு ஆகிய அமைப்புகளின் சார்பாக கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில், எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல், சோழநாடு அமைப்பின் தலைவர் வைரசேகர், ஆனந்தம் அமைப்பின் தலைவர் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே, அன்னா ஹசாரேவின் போராட்டம் பற்றி விழிப்புணர்வு செய்தனர். பின்னர், ஊழலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பயணிகள், கடைக்காரர்கள், பாதசாரிகள் அனைவரிடமும் சென்று, ஊழலுக்கு எதிராக கையெழுத்து வாங்கினர். நூற்றுக்கணக்கான மக்கள் கையெழுத்திட்டு, அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தனர். அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, "ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த அமைப்புக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள ஊழல் எதிர்ப்பு கூட்டமைப்பு, பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளது. மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த, கிராமங்களில் இருந்து பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை நடத்த இருப்பதாக, இவ்வமைப்பின் பொதுச்செயலர் ரத்தினபாண்டியன் தெரிவித்தார். இதேபோன்று நகரின் பல இடங்களிலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=297612

Post a Comment

0 Comments