உப்பு நீர் நல்ல குடிநீரானது : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு : வாழ்ந்து காட்டும் கிராம மக்கள்


திண்டுக்கல் : கிராம மக்களின் கூட்டு முயற்சியால் கடின உப்பு நீர் சுத்திகரிக்கப்பட்டு நல்ல குடிநீராக மாறியுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதால் ஊராட்சி நிர்வாகத்திற்கும் வருமானம் கிடைக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் ஊராட்சிக்குட்பட்டது கோ.ராமநாதபுரம். இந்த ஊருக்கு நம்பிநாயக்கன்குளம், சுடுகாடு அருகில் இரண்டு இடங்களில் போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த தண்ணீர் மிகவும் உவர்ப்பு தன்மையுடன் காணப்பட்டதால் குடிக்க முடியாமல் மக்கள் மூன்று கி.மீ., சென்று குடிநீர் எடுத்து வந்தனர்.

இந்த அவல நிலையை போக்க ஊராட்சி தலைவர் கண்ணன்(எ) விஜயபானு, நாட்டாமை ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி முடிவெடுத்தனர். சுவஜல்தாரா திட்டத்தின் கீழ் உப்பு நீரை நல்ல தண்ணீராக மாற்றி குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறுவது என முடிவு செய்யப்பட்டது. கிராம மக்கள் தங்கள் பங்களிப்பாக 50 ஆயிரம் ரூபாய் அளித்தனர். மத்திய, மாநில அரசு நிதியாக 4 லட்சத்து 50 ஆயிரம் அளிக்கப்பட்டது. மொத்தம் 5 லட்சம் ரூபாயில், உப்பு நீரை நல்ல நீராக மாற்றும் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் தொட்டி அருகே அமைக்கப்பட்டது. போர்வெல் மூலம் கிடைக்கும் உப்பு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு நல்ல நீராக ( மினரல் வாட்டராக) மாற்றப்படுகிறது. இந்த நிலையத்தில், மக்கள் ஒரு ரூபாய் காயின் போட்டால் 10 லிட்டர் நல்ல தண்ணீர் கிடைக்கும்.






இந்த சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் 500 லிட்டர் நல்ல தண்ணீர் பெற முடியும். இதன் மூலம் கிராம மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதன் மூலம், ஊராட்சிக்கும் வருமானம் கிடைக்கிறது. இந்த பணத்தில் ஊராட்சியின் சுகாதாரத்தையும் காக்க முடிகிறது. அனைத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தை எதிர்பார்க்காமல் இதுபோன்று அனைத்து கிராம ஊராட்சிகளும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பெறுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.




இந்த கிராமத்தைச் சேர்ந்த மங்கம்மாள்(62) கூறியதாவது: சுத்திகரிக்கப்படாத குடிநீரை குடித்த பலருக்கு கிட்னியில் கல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தோம். தற்போது நல்ல குடிநீர் கிடைத்தது எங்களுக்கு மகிழ்ச்சி.




ராதாகிருஷ்ணன்(52): தண்ணீர் தான் அனைத்து நோய்களுக்கும் காரணம். இதனால் கிராம மக்களாகிய நாங்களே முடிவு செய்து நல்ல தண்ணீர் பெற சுத்திகரிப்பு நிலையம் அமைத்தோம். இந்த தண்ணீரை குடிக்கும் போது காய்ச்சல், சளி, தலைவலி எதுவும் ஏற்படவில்லை. ஆரோக்கியமாக இருக்கிறது.




சுதா(32): டாக்டரிடம் சென்று பல ஆயிரக்கணக்கில் செலவழிப்பதற்கு பதிலாக ஒரு ரூபாய்க்கு நல்ல தண்ணீர் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.




ஊராட்சி தலைவர் கண்ணன்(எ) விஜயபானு கூறியதாவது: எங்கள் கிராமத்திற்கு மட்டுமல்லாமல் சுற்றியுள்ள தங்கச்சியம்மாபட்டி, புளியம்பட்டி, கோவிலூர், கதிரனம்பட்டி, உட்பட பல ஊர்களை சேர்ந்த மக்களும் இங்கு வந்து நீரை பிடித்து செல்கின்றனர். 20 ஆயிரம் லிட்டரில் தனி தொட்டியும் அமைக்கப்படுகிறது. நான் தலைவராக இருந்து நல்ல குடிநீர் வழங்குகிறோம் என்று எண்ணும் போது எனக்கு பெருமையாக உள்ளது என்றார்.

Post a Comment

0 Comments