ரூ.4,500 கோடி முதலீட்டில் சர்வதேச நிதி நகரம் : அடுத்த மாதம் டெண்டர் விடப்படுகிறது


சென்னை : சென்னை அருகே அமையவுள்ள நிதி நகரத்துக்கு, மார்ச் மாதம், சர்வதேச டெண்டர் விடப்படுகிறது. நான்கு கோடி சதுர அடியில் அமைக்கப்படும் இந்த நிதி நகரம், 4,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும். கடந்த ஆண்டு பட்ஜெட் மீது நடந்த விவாதத்தின் போது, சென்னை அருகே நிதி நகரம், மீடியா மற்றும் கேளிக்கை பூங்கா அமைக்கப்படுமென, நிதியமைச்சர் அன்பழகன் அறிவித்தார்.
நிதி நகரம் என்பது, வர்த்தக வங்கிகளின் செயல்பாடுகள், முதலீட்டு வங்கிகள், சொத்து மேலாண்மை நிறுவனங்கள், பரஸ்பர நிதிகள், கரன்சி பரிமாற்ற சேவைகள், இன்சூரன்ஸ் கம்பெனிகள் போன்றவற்றின் செயல்பாடுகள் கொண்டதாக இருக்கும். இதுதவிர, நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்யும் தகவல் தொழில்நுட்ப பொருட் கள் மற்றும் தீர்வை கம்பெனிகள், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிர்வாகம் போன்றவற்றையும் கொண்டிருக்கும்.
மேலும், நிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பயிற்சி மையங்கள், பணியாளர் பயிற்சி கல்லூரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கும் இடம் அளிக்கப்படும். மீடியா மற்றும் கேளிக்கை பூங்காவும் இதனுடன் அமைக் கப்படும். வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரானிக் மீடியா, சினிமா மற்றும் அவை தொடர்பான செயல்பாடுகளுக்கு இது பயன்படும். இதை அமைக்கும் பொறுப்பு, தமிழக அரசின், "டிட்கோ' வசம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை அருகே மேடவாக்கம் - பெரும்பாக்கம் சாலையில் இதை அமைக்க 187 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் 25 ஏக்கர் நிலம், மீடியா மற்றும் கேளிக்கை பூங்காவுக்கு பயன்படுத்த முடிவு செய்யப் பட்டது. இது தொடர்பாக பல்வேறு ஆலோசகர்களிடம் விவாதிக்கப் பட்டது. முதலில் இத்திட்டத்தை மேம்படுத்த, அனுபவம் வாய்ந்த குறிப்பிட்ட நிறுவனத்தை தேர்வு செய்து, 25 ஏக்கர் நிலத்தில் முதல்கட்டமாக வசதிகளை மேம்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான சர்வதேச டெண்டரை வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது. 300 பக்கங்கள் கொண்ட இந்த டெண்டர், வரும் மார்ச் மாதம் வெளியிடப்பட உள்ளது.
இதுதொடர்பாக, தொழில் துறை செயலர் ராஜிவ் ரஞ்சன் கூறியதாவது: உலக வங்கி உட்பட பல சர்வதேச நிதி அமைப்புகள், சென்னையில் இருந்து உலகளவில் நிதிச் சேவையை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் அறிவுசார்ந்த மனித சக்தி அதிகம் உள்ளதால், இங்கு நிதி நகரம் அமைப்பது பெருமளவில் பயனளிக்கும்.
முதலில் இத்திட்டத்தை மேம்படுத்த, திறமை வாய்ந்த நிறுவனம் தேர்வு செய்யப்படும். திட்டத்தை செயல்படுத்த ஆலோசகர்கள் நியமிக்கப்படுவர். இத்துடன், இத்திட்டத்துக்கான முழு அளவிலான மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும்.
முதலில் விடப்படும் சர்வதேச டெண்டரில், எந்தளவு நிறுவனங்கள் முன்வருகின்றன, எவ்வளவு ஆர்வம் உள்ளது போன்றவை தெரியவரும். இத்திட்டம் ஆரம்பத்தில் 25 ஏக்கரில் துவக்கப்பட்டாலும், இதற்கு உள்ள வரவேற்பை பொறுத்து நீட்டிக்கப்படும்.
திட்டப்படி முழுமையான நிதி நகரம் ஏற்பட ஐந்து முதல் 10 ஆண்டுகளாகும். ஆண்டு வாரியாக இந்த நகரை முன்னேற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்நகரம் 4,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து அமைக்கப்படும். நான்கு கோடி சதுர அடியில் கட்டடங்கள் அமையும். இவ்வாறு ராஜிவ் ரஞ்சன் கூறினார்.

Post a Comment

0 Comments