பொன்சேகா கைது: அமெரிக்கா கவலை


வாஷிங்டன் : "பொன்சேகா கைது தொடர்பான நடவடிக்கைகள், இலங்கையின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்' என, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் பொது விவகாரங்களுக்கான துணை அமைச்சர் கிரவுலி கூறியதாவது: இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட விவகாரம், கவலை அளிக்கிறது. அவரது கைது தொடர்பான நடவடிக்கைகள், இலங்கையின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு, தேர்தல் பிரசாரத்துக்காக அமெரிக்கா நிதி உதவி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. இது தொடர்பாக, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் கடும் மறுப்பு தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வாறு கிரவுலி கூறினார்.
இதற்கிடையே, அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் ஜலியா விக்கிரமசூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொன்சேகா கைது விவகாரத்தில் அரசியல் பின்னணி எதுவும் இல்லை. அவர், ராணுவ தலைமை பதவியில் இருந்த போது செய்த விதிமுறை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ஷே மகன் போட்டி ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள இலங்கை பார்லிமென்ட் தேர்தலில், ஆளும் கட்சி சார்பில் அதிபர் ராஜபக்ஷேயின் மூத்த மகன் நமல் ராஜபக்ஷே, ஹம்பன்தொடா மாவட்டத்தில் இருந்து போட்டியிடுகிறார். நமல் ராஜபக்ஷேயை அரசியலுக்கு அறிமுகப்படுத்தும் விழா, தங்கெல்லி நகரத்தில் நடந்தது. இதில், அதிபர் ராஜபக்ஷே, அவரது மனைவி மற்றும் மகன்கள் கலந்து கொண்டனர்.
அப்போது நமல் பேசுகையில், "நான் கல்வி கற்பதற்கு என் தாய் முக்கிய காரணமாக இருந்தார். அதேபோல், அரசியல் பாடத்தை என் தந்தையிடம் கற்றுக் கொண்டேன்' என்றார். பின்னர், தனது பெற்றோரின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கினார். விழாவில் அதிபர் ராஜபக்ஷே பேசுகையில், "அரசியல் என்பது வன்முறையையோ, பழி வாங்கும் போக்கையோ அடிப்படையாகக் கொண்டதல்ல. கடந்த அதிபர் தேர்தலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது' என்றார்.

Post a Comment

0 Comments