நமது விடுதலைப் பத்திரிகை, இன்று 01.05.1941-முதல் சென்னையிலிருந்து வெளிவருகிறது

நமது விடுதலைப் பத்திரிகை, இன்று 01.05.1941-முதல் சென்னையிலிருந்து வெளிவருகிறது. செட்டிநாட்டுக்குக் குமாரராஜா அவர்கள் நமது பத்திரிகையின் ஆரம்ப விழாவை இன்று நடத்தி வைத்தார். இந்த நாளை உள்ளூரிலும் வெளியூரிலும் உள்ள நம் தோழர்கள் பலர் பலநாளாக ஆவலுடன் எதிர்பார்த்து நின்றனர். அவர்களுடைய ஆவலும் இன்று நிறைவேறுகிறது.

தமிழ்நாட்டில் இப்பொழுது, நமது பத்திரிகையைத் தவிர இன்னும் நான்கு தமிழ்த் தினசரிகள் நடைபெறுகின்றன. அவற்றுள் மூன்று பத்திரிகைகள் ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவே நடைபெறுகின்றன; அவை ஆரியர்களாலேயே நடத்தவும்படுகின்றன. ஒன்று முஸ்லீம்களின் முன்னேற்றத்தைக் கருதி முஸ்லீம் தோழர்களால் நடத்தப்படுகின்றது.

தமிழ்நாட்டில் 2-கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களுடைய சமுதாய முன்னேற்றத்துக்காக நடைபெறும் தினசரிப் பத்திரிகை "விடுதலை" ஒன்றேயாகும்.

இந்தத் தமிழ்நாடே இங்குள்ள தமிழர்களுடைய தாயகமாகும். தமிழர்கள் தமிழ்நாட்டுப் பழங்குடிகளின் வழித்தோன்றல்கள், பழம் பெருவீரர்களாகவும், வள்ளல்களாகவும் விளங்கிய தமிழ் மன்னர் பரம்பரையினர்.

தமிழ் மக்கள் பண்டைக்காலத்தில், ஜாதி சமயப் பிணக்கின்றி வாழ்ந்தார்கள்; எல்லோரும் உடன் பிறப்பினராக ஒற்றுமையுடன் இன்புற்றிருந்தனர். தமிழ்நாடு எக்குறையும் இல்லாமல் இருந்தது; மக்களுடைய வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாச் செல்வங்களையும் பெற்றிருந்தது. இக்காரணங்களால் தமிழர்கள் வீரர்களாக விளங்கினர்; உரிமையுடையவர்களாக வாழ்ந்தனர்; இந்தப் பழம் பெருமையை இன்று, பழம் புராணப் பண்டிதர்களும் பாராட்டிப் பேசி மகிழ்கின்றனர். புதிய சரித்திர ஆசிரியர்களும், எழுதியும் பேசியும் இன்புறுகின்றனர்.

இத்தகைய தமிழ்நாடு இன்று எந்த நிலையில் இருக்கின்றது? தமிழ் மக்கள் எந்த நிலையில் இருக்கின்றனர்?

தமிழன் தமிழ்நாட்டிலேயே "நாலாஞ் ஜாதியானாகக் கருதப்படுகிறான்; அய்ந்தாம் ஜாதியாகக் கருதப்படுகிறான்; தீண்டத் தகாதவனாகவும், நெருங்கத் தகாதவனாகவும், பார்க்கத் தகாதவனாகவும் அவமானப்படுத்தப்படுகிறான். சுருக்கமாகச் சொன்னால், மனிதன் மனிதனாகக் கருதப்படாமல் நாயினும், பன்றியினும், மலத்தினுங்கூடக் கீழானவனாகக் கருதப்படுகிறான்.

தமிழன் இந்த இழிந்த நிலையில் இன்னும் எத்தனை நாள் வாழ்வது? இந்த மானங்கெட்ட வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முயலவேண்டாமா? என்று ஒவ்வொரு தமிழனும் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டி காலம் இன்னும் வரவில்லையா? ஆம்! இத்தகைய காலம் இப்பொழுது வந்துவிட்டது என்றே நாம் கருதுகின்றோம்.

தமிழன் தன்னுடைய மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள, அவனுக்கு அவனுடைய மதம் உதவி செய்யவில்லை; அவன் வணங்கும் கடவுள்களான முப்பத்து முக்கோடி தேவர்களும் உதவி செய்யவில்லை. அவன் தலைமீது சுமத்தப்பட்டிருக்கும் வருணாசிரம தருமமும் உதவி செய்யவில்லை. அந்த வருணாசிரம தர்மத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட சடங்குகளும் உதவி செய்யவில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் பிச்சை வாங்கிப் பிழைப்பதற்காக வந்த ஆரியர்களுடைய நிலையோ ஒரு குறைவுக்கும் இடமில்லாமல் இருக்கிறது. சமுதாயத்தில் தலைவர்களாக விளங்குகின்றனர்; சமயத்தில் குருமார்களாக வாழ்கின்றனர்; அரசியலில் அதிகாரம் பெற்று வாழ்கின்றனர். சுருங்கச் சொன்னால் உடல் நோகாத வேலைகளில் எல்லாம் ஆரியர் புகுந்து ஆட்சி செலுத்தி வருகின்றனர்.

100-க்கு மூன்று பேராயுள்ள சமூகம் - இந்த நாட்டுக்குக் குடியேறி வந்த சமூகம் இன்று "ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுகிறது" என்ற பழமொழிக்கு இலக்காக வாழ்கின்றது.

தமிழர் சமுதாயம் 100-க்கு 90-பேராயிருந்தும் 10-பேர் கூடக் கல்வி கற்கவில்லை. 100-க்கு 90-பேர் இழிவாக மதிக்கப்படும் தொழில்களையே செய்கின்றனர். உடம்பிலுள்ள இரத்தத்தை வேர்வையாகச் சிந்தும் கடினமான வேலைகளையே செய்கின்றனர். இவ்வாறு வேலை செய்யும் மக்களிலும் 100-க்கு 90-பேருக்கு இருக்க இடமில்லை; உடுத்த பிறந்த மக்கள் இந்த நிலையில் இருக்கின்றனர். ஆனால் வெளிநாட்டிலிருந்து இந்த நாட்டுக்கு வந்த அந்நியர்கள் இந்த தகுதியற்றவர்களான ஆரியர்கள் மற்றும் பல வகுப்பாளர்கள் உயர்ந்த நிலையில் வாழ்கின்றனர். மாடமாளிகைகளைக் கட்டிக் கொண்டு பசி என்றால் என்னவென்று அறியாமலும், உழைப்பு என்றால் என்னவென்று தெரியாமலும், நிலத்தில் கால்படாமலும், நகத்தில் அழுக்குப் படாமலும் வாழ்கிறார்கள்.

தமிழர் இம்மாதிரி இழிந்த நிலையில் வாழவும் அந்நியர்கள் உயர்ந்த நிலையில் வாழவும் காரணம் என்ன என்பதை ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும். மனிதனுக்கு எது இருந்தாலும் மான உணர்ச்சி ஒன்று இருந்தால் போதும், மானமுள்ளவன் அடிமை வாழ்வை விரும்பமாட்டான். தன்னை மற்றவன் அவமானப்படுத்துவதைச் சகித்துக் கொண்டிருக்க மாட்டான், தன் தலை மீது உட்கார்ந்து கொண்டு எழும்ப முடியாமல் அழுத்துவதைப் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டான். ஆதலால் தமிழனுக்குச் சுயமரியாதையே உயிர் என்று சொல்லுகின்றோம்.

இன்று தமிழனுடைய மானம் எவ்வாறு இருக்கிறதென்பதைச் சிறிது நினைத்துப் பாருங்கள். காப்பிக் கிளப்புகளில் இழிந்த சாதியானாக ஒதுக்கப்படுகின்றான்; கோயில்களில் தாழ்ந்த சாதியான உயர்ந்த சாதியானுடைய பின்புறத்தில் நிறுத்தப்படுகின்றான்; இன்னும் மாணவர்களுக்காக நடத்தப்படும் விடுதிகளிலும், தருமத்திற்காகக் கட்டப்பட்டுள்ள சத்திரங்களிலும், தேசியம் பேசும் பார்ப்பனர்களால் நடத்தப்படும் விருந்துகளிலும் கூட தமிழன் இழிந்த சாதியாகக் கருதி ஒதுக்கப்படுகிறான்.

இந்தச் சுயமரியாதையற்ற தன்மையை முதலில் விலக்கிக் கொள்ள வேண்டியதுதான் இன்று தமிழனுடைய வேலையாகும். இந்த நிலை ஒழிந்தால் அரசியலில் முன்னேற்றமடைவது என்பது அரிதான காரியமல்ல. ஏனென்றால், நம்முடைய அரசியல் உரிமையைப் பெறவேண்டுமானால் நாம் ஒரே எதிரியுடன் போராட வேண்டும். ஆனால் சமூதாய உரிமையைப் பெறவேண்டுமானால் நாம் பல எதிரிகளுடன் போராட வேண்டியிருக்கிறது.

வருணாசிரம தருமிகள், சீர்திருத்தம் பேசும் மதக்காரர்கள், மதத்தின் பேரால் கோடிக்கணக்கான செல்வமும் செல்வாக்கும் பெற்றிருக்கும் மடாதிபதிகள், மதத்தின் பெயரால் புத்தகமெழுதி விற்றுக் கொள்ளையடிக்கும் வியாபாரிகள், மதத்தின் பெயரால் பாமர மக்களை ஏமாற்றி உயிர் வாழும் படிப்பாளிகள் என்று சொல்லிக் கொள்ளும் பண்டிதர்கள் ஆகிய இன்னும் பலருடன் நாம் போராடியே தீரவேண்டும். நாம் அவர்களுடன் போராட விரும்பாவிட்டாலும் அவர்கள் நம்மைவிடமாட்டார்கள். வலுச்சண்டைக் கிழுப்பார்கள். நாம் வந்த சண்டையை விட்டுவிடும் கோழைகளல்ல.

சுருக்கமாகச் சொன்னால் நம்முடைய போராட்டத்திற்கு ஆதரவாளர்கள் சிலர்; எதிரிகள் பலர்; இந்த நிலையில் நம்முடைய போராட்டத்திற்குச் சிறந்த ஆயுதம் பத்திரிகை அதற்காகத் தினசரிப் பத்திரிகையாக விடுதலை ஒன்றுதான் உள்ளது.

நமது சமுதாய உரிமைப் போராட்டந்தான் நாம் செய்யும் புரட்சி. இந்தப் புரட்சியை, ஆயுதந் தாங்கியோ அல்லது அகிம்சையென்று சொல்லும் கோழைத்தனத்தின் மூலமோ செய்து முடிக்க நாம் தீர்மானிக்கவில்லை. தமிழர்களுக்கு உணர்ச்சி உண்டாக்குவதன் மூலம் - தமிழர்களுடைய தற்கால மானக்கேடான நிலையை அவர்களுக்கு எடுத்துக்காட்டுவதன் மூலம் அவர்களை ஒன்று சேர்க்க விரும்புகின்றோம். ஒன்று சேர்த்துச் சமுதாய இழிவு நீக்கப் புரட்சியைச் செய்ய விரும்புகின்றோம். அந்தப் புரட்சி உணர்ச்சியை உண்டாக்கவே நமது விடுதலை ஓயாமற் பாடுபடும். இதற்காகவே இன்று முதல் சென்னையிலிருந்து நமது விடுதலை வெளிவருகிறது. தோழர்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டுகிறோம்.

('விடுதலை' தலையங்கம் 01-05-1941)

Courtesy http://tamizachiyin-periyar.com/index.php?article=2196

Post a Comment

0 Comments