வெளிநாட்டு பல்கலைகளுக்கு நிபந்தனைகளுடன் அரசு அனுமதி


புதுடில்லி : இந்தியாவில், கல்வி மையங்களை அமைக்க விரும்பும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி வழங்கும் மசோதாவிற்கு, சில நிபந்தனைகளுடன் கேபினட் ஒப்புதல் வழங்கி உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலான இழுபறிக்கு பின், இந்தியாவில் கல்வி மையங்கள் அமைக்க விரும்பும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி வழங்கும், "வெளிநாட்டு கல்வி மையம் (நுழைவு மற்றும் செயல்பாட்டிற்கான விதிமுறைகள்) மசோதா 2010'க்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இது, இந்த மசோதாவை பார்லிமென்டில் அறிமுகப்படுத்த வழி வகுத்துள்ளது. ஆனால், இந்த மசோதாவில், "இந்தியாவில் செயல்பட அனுமதி வழங்கப்படும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள், 50 கோடி ரூபாய் தொகுப்பு நிதி டிபாசிட் செய்ய வேண்டும். ஒவ்வொரு கல்வி மையமும், பல்கலைக் கழக மானியக் குழு அல்லது அவர்கள் பதிவு செய்யும் போது இருக்கும் ஒழுங்கு முறை ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். தேசிய பாதுகாப்பில் பாதிப்பு உண்டாகும் என கருதினால், அந்த பல்கலைக் கழகத்தின் விண்ணப்பத்தை அரசு நிராகரிக்கலாம்' என, பல்வேறு நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், "பல்வேறு வாய்ப்புகள், போட்டிகள் மற்றும் தரத்தை அதிகரிக்கும் வகையில், இந்த மசோதா ஒரு மைல்கல்லாக அமையும்' என்றார்.

Post a Comment

0 Comments