சேது சமுத்திர திட்டத்தை தீவிரமாக கண்காணிக்கும் இலங்கை கடற்படை : சீனாவின் அடுத்த 'ஸ்டெப்'


ராமநாதபுரம் : சேது சமுத்திர திட்டத்தின் மாற்று பாதை ஆய்வை, இலங்கை கடற்படையினர் தீவிரமாக கண்காணிக்க துவங்கி உள்ளனர். இந்திய கடல்வழி போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக சேது சமுத்திரம் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவின் கடல்வழி போக்குவரத்து மேம்பாடு, வளர்ந்த நாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. குறிப்பாக சீனாவுக்கு இத்திட்டம் நிறைவேறுவதில் பல்வேறு சிக்கல் எழுந்தன. இலங்கையுடன் உள்ள நட்புறவை பயன்படுத்தி திட்டத்தின் பாதகங்களை அறியும் முயற்சிக்கு தயாரானது.

இதற்கிடையில், "வழித்தடத்தில் ராமர் பாலம் வருவதாக,' சர்ச்சை எழுந்து,கோர்ட்டு விசாரணைக்கு சென்றது. "மாற்று பாதையில் திட்டத்தை நிறைவேற்றும் சாரம்சங்களை கண்டறியுமாறு,' மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. அதன்படி, மாற்று பாதை ஆய்வுகள் தற்போது மன்னார் வளைகுடாவில் நடந்து வருகிறது. தேசிய கடல்ஆராய்ச்சி மையத்தினர் இதற்கான பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஆராய்ச்சிக்கான பிரத்யோக மிதவைகள் கடலில் பல இடங்களில் நிறுவப்பட்டு, அதை கண்காணிக்கும் பணியில் மீனவர்கள் சிலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போதைய மாற்று பாதையில் நல்ல ஆழமான சூழல் இருப்பதால், பெரிய அளவிலான கப்பல்கள் வந்து செல்ல வசதியாக இருக்கும் என கூறப்படுகிறது. இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து, சேது சமுத்திரம் திட்டத்தின் மாற்று பாதை ஆய்வுகளை கவனிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு தங்கள் வசமுள்ள இலங்கை கடற்படையின் பிரத்யோக உதவி, அந்நாட்டுக்கு கைகொடுத்துள்ளது. இதனால், சமீப காலமாக இலங்கை கடற்படை இந்திய எல்லையில் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய கடற்படைக்கும் இத்தகவல் கசியத் தொடங்கி யிருப்பதால், அவர்களும் உஷார் நிலையில் உள்ளனர்.

இது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அதனாலேயே, தனுஷ்கோடி ஐந்தாம் மணல் திட்டில் இந்திய எல்லை பலகை வைக்க உள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. கச்சத்தீவை தொடர்ந்து சேது சமுத்திரம் திட்டத்திலும் சீனா தலையிடுவது, மாற்று பாதை ஆய்வில் இன்னும் பல பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

Post a Comment

0 Comments