கேரளாவில் படிக்கும் தமிழ் மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வை தமிழில் எழுதலாம்

பொள்ளாச்சி:கேரள மாநிலத்தில் படிக்கும் தமிழ் மாணவர்கள், பிளஸ் 2 பொதுத் தேர்வை தமிழில் எழுதலாம் என, அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.கேரளாவில் இடுக்கி, மூணாறு, தேவிக்குளம், பாலக்காடு, வயநாடு, திருவனந்தபுரம் பகுதியில் அதிகளவிலான மாணவர்கள் தமிழை பயின்று வருகின்றனர்.

இம்மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழில் எழுத அம்மாநில அரசு தடை விதித்ததால், ஆங்கிலத்தில் எழுதி வருகின்றனர். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவதால், ஆண்டுதோறும் தேர்ச்சி சதவீதம் குறைந்து வந்தது.

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள், தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என, தமிழ் அமைப்புகளும், மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர். 25 ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு, அம்மாநில கல்வித்துறை செவி சாய்க்காததால், பல மாணவர்கள் தமிழகத்திற்கு வந்து உயர்கல்வி பெற வேண்டிய நிலை இருந்தது.

இந்நிலையில், இடுக்கி மாவட்ட மூணாறு அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த தமிழ் மாணவர்களும், தமிழ் அமைப்புகளும், பொதுத்தேர்வை தாய் மொழியில் எழுத அனுமதி கோரி அரசை வலியுறுத்தியது. இதை ஏற்ற கேரள மாநில கல்வித்துறை, தமிழ் மாணவர்கள் தமிழிலேயே தேர்வு எழுதலாம் என அரசாணை வெளியிட்டுள்ளது.

கேரள மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணை:கேரளாவில், மேல்நிலை வகுப்புகள் படிக்கும் மாணவர்கள் மற்றும் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்கள் பிளஸ் 1, 2 பொதுத்தேர்வை தமிழிலேயே எழுதலாம். நடப்பாண்டு முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.

தொழிற்பிரிவில் மேல்நிலை கல்வி பயிலும் தமிழ் மாணவர்களும் தமிழ் மொழியிலேயே தேர்வு எழுதலாம். மற்ற மாணவர்கள் வழக்கம் போல் தேர்வு எழுதலாம்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.தமிழில் தேர்வு எழுத கேரள அரசு அனுமதித்துள்ளதால், தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.

கேரள மாநில தமிழ் வளர்ச்சி பணி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:கேரள மாநில கல்வித்துறை உத்தரவால் தமிழ் மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைப்பதோடு, தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கையும் மூன்று மடங்கு உயரும் வாய்ப்புள்ளது.

இதற்காக, கேரள அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கேரள மாநிலத்தில் இன்று முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்குகின்றன. இம்மாத இறுதி வரை தேர்வு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments