வேண்டாம் தனி நாடு!புலிகள் ஆதரவு கட்சி அறிவிப்பு


கொழும்பு : "இந்தியா - இலங்கை இடையே மேற் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஒருங்கிணைந்த இலங்கைக் குள், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங் கப்பட வேண்டும்' என, விடுதலைப் புலிகள் ஆதரவு கட்சியாகக் கருதப்படும் தமிழ் தேசிய கூட்டணி, தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம், பிரிவினை கொள்கையை அந்த கட்சி கைவிட்டுள்ளது.

இலங்கையில் அடுத்த மாதம் 8ம் தேதி பார்லிமென்ட் தேர்தல் நடக்கவுள்ளது. இதில், தமிழ் தேசிய கூட்டணி கட்சியும் போட்டியிடுகிறது. இந்த கட்சி, விடுதலைப் புலிகள் ஆதரவு கட்சியாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஒருங்கிணைந்த இலங்கைக்குள், இந்தியா - இலங்கை இடையே கடந்த 1987ல் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.இந்த ஒப்பந்தத்தை மீறி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்காக தொடர்ந்து போராடுவோம். தமிழ் மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுவது கவலை அளிக்கிறது.ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை அரசு மீறி வருகிறது. தமிழ் மக்கள் விஷயத்தில் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ஆனால், இலங்கை அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.தங்களுக்கான தீர்வை எட்டுவதற்கும், அரசியல் இலக்கை எட்டுவதற்கும், சிறுபான்மை மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குறிப் பாக, முஸ்லிம் மக்களும், தமிழர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க, அரசு மறுக்கிறது. தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இலங்கை அரசின் இதுபோன்ற நிர்வாக நடவடிக்கை தொடருமானால், காந்திய வழியில் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டத்தை மேற்கொள்வோம். எந்தவித வன்முறையும் இன்றி இந்த போராட்டம் நடத்தப்படும். எங்கள் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் ஆதரவையும் நாடுவோம்.இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பரபரப்பு: இதுகுறித்து இலங்கை அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:ஒருங்கிணைந்த இலங்கைக்குள், அதிகார பகிர்வும், தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டணி வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம், பிரிவினை கொள் கையை அந்த கட்சி கைவிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்ட பின், தமிழ் தேசிய கூட்டணி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம், இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

1 Comments

  1. ஒன்று பட்ட இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைத்து தனி தமிழ் ஈழம் மாநிலம் அமைவது இன்றைய காலத்துக்கு பொருத்தமானது.

    ReplyDelete

premkumar.raja@gmail.com