எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புக்கு வெற்றி : அமெரிக்க ஆதரவு மசோதா அமல் நிறுத்தம்


அணுமின் நிலைய விபத்து நஷ்ட ஈடு மசோதாவை லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்ய, மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, மசோதாவை தாக்கல் செய்வது நிறுத்தப்பட்டது. அடுத்த மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்டத்தில், இது தாக்கல் செய்யப்பட உள்ளது.

கடந்த ஆட்சியில் பெரும் போராட்டத்திற்கு பின், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதனால், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டனர். நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த போது, முலாயம் சிங் கட்சி ஆதரவு அளித்ததால், மத்திய அரசு தப்பியது. இந்நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான, அதாவது அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதுகுறித்த நஷ்ட ஈட்டை முடிவு செய்வது தொடர்பான மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்ய, மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஏற்கனவே பெண்கள் மசோதா நிறைவேற்றம் காரணமாக பெரும் எதிர்ப்பையும், போராட்டத் தையும் சந்தித்து முடித்திருந்த நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மசோதாவை அரசு கையில் எடுத்திருந்ததால், இதை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எதிர்க்க முடிவு செய்திருந்தன.

இந்தியாவில் உள்ள அணுசக்தி நிலையங்களில் விபத்து ஏற்பட நேரிட்டால், அந்த அணுசக்தி நிலையத்துடன் இணைந்து செயல்படும் வெளிநாட்டு நிறுவனம் அளிக்க வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகை 300 கோடி ரூபாய் அதிகபட்ச வரம்பு என்று இம்மசோதா தெரிவிக்கிறது. இந்தத் தொகை நியாயமானதாக இல்லை என்றும், இது வெளிநாடுகளுக்கு சாதகமாக உள்ளது என்றும், இவ்வளவு தொகை போதும் என்று ஏன் இந்தியாவே வலிந்து நிர்ணயம் செய்திட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

இந்நிலையில், நேற்று காலையில் லோக்சபா கூடியதும், சபையின் அன்றாட அலுவல்கள் குறித்த கையேட்டில், இந்த மசோதா தாக்கல் செய்யப்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இதை ஏற்க முடியாது என்று கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கின. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., எம்.பி.,க்களும், அணுசக்தி ஒப்பந்தத்தை ஆரம்பம் முதலே முழுவீச்சுடன் எதிர்த்து வரும் இடதுசாரி எம்.பி.,க்களும் மசோதாவை மேற்கோள்காட்டி சபையில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மீரா குமார், "அணு உலை விபத்து நஷ்ட ஈடு மசோதாவை இன்று தாக்கல் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் ஏதும் இல்லை' என தெரிவித்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ""இந்த மசோதா தாக்கல் செய்யப்போவதாக நாட்குறிப்பில் தகவல் இடம் பெற்றுள்ளது. மசோதா தாக்கல் இல்லை என்றால் அதுகுறித்து தீர்மானம் கொண்டு வந்து, அதன் பின்னரே முடிவை அறிவிக்க வேண்டும்,'' என்றார்.

சபாநாயகர் பதில்: அதற்கு சபாநாயகர் மீரா குமார், ""சம்பந்தப்பட்ட மசோதா சபையில் தாக்கலே செய்யப்படவில்லையெனில், தனியாக தீர்மானம் கொண்டு வரத் தேவையில்லை,'' என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணி செயல் தலைவர் அத்வானி பேசுகையில், ""தாக்கல் செய்யப்போவதாக தெரிவிக்கப்பட்ட மசோதா, பின்னர் ஏன் வாபஸ் பெறப்பட்டது என்ற காரணத்தை சபைக்கு அரசு விவரிக்க வேண்டும்' என்றார். இந்த நஷ்ட ஈடு மசோதாவில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்தும், அமெரிக்காவுடன் இந்தியா போட்டுள்ள ஒன் டூ த்ரீ அணுசக்தி ஒப்பந்தத்தை அடுத்தகட்டமாக நிறைவேற்ற தேவைப்படுகிறது. இந்த நஷ்ட ஈடு வழங்கும் மசோதாவுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அவ்வாறு பார்லிமென்டில் ஒப்புதல் பெறப்பட்டு மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டால், அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனங்கள் எவையுமே இந்தியாவுக்கு அணுமின் நிலைய உபகரணங்கள் வழங்க முன்வராத நிலை ஏற்படும். இதன் காரணமாகவே, இந்த மசோதாவை நிறைவேற்றும் தீவிரத்தில் மத்திய அரசு உள்ளது. இது மட்டுமல்லாது, அடுத்த மாதம் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது, இந்தியா - அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அதிபர் ஒபாமாவும், மன்மோகன் சிங்கும் பேச வேண்டியது வரும். இதன் காரணமாகவும் சர்ச்சைக்குரிய இந்த மசோதாவையும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றும் தீவிரத்தில் மத்திய அரசு உள்ளது.

"அணுமின் நிலைய விபத்து நஷ்ட ஈடு மசோதாவை தாக்கல் செய்யாமல், மத்திய அரசு தள்ளி வைத்தது எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குரு தாஸ் தாஸ் குப்தா கூறியுள்ளார்.

அத்துடன் இந்த மசோதாவை பார்லிமென்டின் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டுமென, இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பிருதிவிராஜ் சவான், ""மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்புவது சபையின் உரிமை. அணு மின் நிலையங்களில் தற்போது விபத்து நடந்தால், அதற்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தற்போது எந்த சட்டமும் இல்லை,'' என்றார்.

Post a Comment

0 Comments