புதிய சட்டசபை கட்டிடத்தை பிரதமர் திறந்துவைப்பு


சென்னை: சென்னையில் புதிய சட்டசபைக் கட்டிடத்தை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் சனிக்கிழமை திறந்துவைத்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் முதலமைச்சர் கருணாநிதிக்கு அவர் புகழாரம் சூட்டினார்.

தமிழகப் புதிய சட்டசபை தலைமைச் செயலகக் கட்டிடம்,சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் சட்டமன்றம்,தலைமைச் செயலகம் என இரு பிரிவுகளாக இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் சட்டமன்ற வளாகம் பசுமைக் கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது. ரூ.500 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலகக் கட்டிட வளாகத் திறப்புவிழா சட்டமன்ற வளாகம் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சனிக்கிழமை மாலை கோலாகலமாக நடைபெற்றது.

திறப்பு விழாவையொட்டி 8 ஆயிரம் பேர் அமரும் வகையில் பெரிய பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தனி விமானம் மூலம் சென்னை வந்தனர். மாலை 5 மணிக்கு சோனியா காந்தியும் அவரைத் தொடர்ந்து மன்மோகன் சிங்கும் புதிய சட்டசபை வளாகத்திற்கு வந்தனர். அவர்களை முதலமைச்சர் கருணாநிதி வரவேற்றார். பின்னர் புதிய சட்டசபைக் கட்டிடத்தைப் பலத்த கரவொலிகளுக்கிடையே பிரதமர் மன்மோகன் சிங் நாடா வெட்டி திறந்துவைத்தார்.

Post a Comment

0 Comments