'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை


சென்னை : ""நான் ஆன்மிகவாதி மட்டுமல்ல; சமூக சேவகன், எழுத்தாளன், பேச்சாளன், ஆராய்ச்சியாளன். என் மீது அவதூறு பரப்பப்பட்டிருந்தாலும், என் ஆன்மிக பணி தொடரும்,'' என, சாமியார் நித்யானந்தா கூறியுள்ளார்.

நடிகை ரஞ்சிதாவுடன், நித்யானந்தா படுக்கையில் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியானது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து நித்யானந்தா, சமீபத்தில், "சிடி' மூலம் அளித்துள்ள பேட்டி: இந்த வீடியோ டேப் வெளியிடும் முன், என் கருத்தைக் கேட்கவில்லை. வீடியோ டேப், வெளியான ஒரு மணி நேரத்திற்குள் என் ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. என் பக்தர்களுக்கு, இடையூறுகள் நிகழ்த்தப்பட்டன. என் ஆசிரமத்தில் யாரும் கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஆசிரமத்திற்கு வரலாம்; செல்லலாம். ஒரு வதந்தியை, திரும்பத் திரும்ப சொல்வதால், அது உண்மையாகி விடும் என்ற ரீதியில் என் மீது அவதூறு பரப்பப்படுகிறது.

நான், சட்டத்திற்கு புறம்பாக எந்த ஒரு தவறும் செய்யவில்லை. இது குறித்து, யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. எனக்கு நேர்ந்த நிலை, என் எதிரிக்கு கூட நிகழ வேண்டாம். நான் யாரையும் எதிரியாக கருதவில்லை. பெரும்பாலான என் பக்தர்கள், என் பக்கம் இருக்கின்றனர். அவர்கள் என் பேச்சைக் கேட்டு அமைதியாக இருக்கின்றனர். என் 33 ஆண்டு வாழ்வில் புகழின் உச்சியையும், இகழ்ச்சியின் உச்சியையும் பார்த்து விட்டேன். நான் யாருக்கும் எதிராக செயல்பட விரும்பவில்லை. அமைதியாக இருக்கவே விரும்புகிறேன்.

நான், தற்போது கும்பமேளாவில் இருக்கிறேன். கும்பமேளா முடிந்த பின், பெங்களூரு ஆசிரமத்துக்கு திரும்புவேன். நிருபர்கள், பொதுமக்களை சந்தித்து அனைத்து கேள்விகளுக்கும் விடையளிப்பேன். என் மீதான சட்டப்படியான விசாரணை அனைத்திற்கும் ஒத்துழைப்பேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் ஆன்மிக பணியை மட்டும் செய்யவில்லை. கல்வி, எழுத்து, பேச்சு, மருத்துவம், யோகா என பல பணிகளை செய்கிறேன். நான், என் ஜீவன் முக்த அனுபவத்தை, எல்லாருக்கும் கொடுக்கும் ஒரு சாதாரண ஆன்மிக ஆராய்ச்சியாளன். பாலியல் தொடர்பான பிரச்னைகளுக்கும் ஆராய்ந்து தீர்வு அளித்து வருகிறேன். என் ஆன்மிக பணி தொடரும் இவ்வாறு நித்யானந்தா கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments