தினமணியின் தலையங்கம் : காற்றில் பறக்கவிடவா பட்டம்?

தமிழகக் காவல்துறையில் காலியாக உள்ள 1,095 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்துக்கு சனிக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தேர்வில் பங்கேற்க காவல்துறையில் பணிபுரியும் 10,000-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்களில் பத்தாவது வகுப்பைப் பள்ளியில் படித்த பிறகு வேலைக்குச் சேர்ந்து, திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி 197 பேரை வெளியேற்றியிருக்கின்றனர்.

இப்பதவிக்கான ஆள்தேர்வு விளம்பரத்திலேயே, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை முதுநிலை பட்டம் பெற்றவர்கள் மெட்ரிகுலேஷன் அல்லது பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது உண்மையே. அதையும் மீறி கலந்துகொண்டவர்களை வெளியேற்றினோம் என்று காவல்துறை சொல்வது நியாயமாக இருக்கலாம்.

ஆனால், பத்தாவது படித்துவிட்டு ஒரு இளநிலை பட்டம் பெறுவதற்கும், பிளஸ்-2 முடித்த பிறகு தொலைநிலை கல்வியில் இளநிலை பட்டம் பெறுவதற்கும் என்ன வேறுபாடு? இருவருக்கும் பாடத்திட்டம் வேறுவேறானதா?

பயனுறு அறிவியல் தொடர்பான பாடங்களில் இளநிலை பட்டம் பெறுவதில் மட்டுமே தொலைநிலைக் கல்வி, அல்லது கல்லூரியில் படித்து பட்டம் பெறுவது இரண்டுக்கும் தகுதி வேறுபாடு காணப்பட்டது. இப்போது எல்லா படிப்புக்கும் அத்தகைய வேறுபாடு காண்பது சரியானதாக இருக்க முடியுமா?

திறந்த நிலைப் பல்கலைக்கழகப் பட்டம் என்றால் அது தகுதிக் குறைவானது என்று அதிகாரிகள் கருதுவதையே இச் செயல் காட்டுகிறது. திறந்தநிலைப் பல்கலைக்கழகம், அஞ்சல்வழிக் கல்வி எல்லாமே உயர் படிப்பைத் தொடரும் ஆர்வம் இருந்தும் பொருளாதாரச் சூழல் காரணமாகவும் வேறு காரணங்களினாலும் படிப்பைத் தொடர முடியாதவர்கள் படித்து பட்டம் பெறுவதற்காகவே ஏற்பட்டவை என்பதை மறுக்க முடியாது.

தினந்தோறும் வகுப்புகள் நடைபெறும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் கற்றுத்தரும் பாடங்களைப் படிக்கும் மாணவர்களோடு ஒப்பிடும்போது இந்த மாணவர்களின் திறன் குறைவாகவே இருக்கக்கூடும் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

ஆனால் இத்தகைய பல்கலைக்கழகங்களையும் அஞ்சல்வழி படிப்புகளையும் அனுமதித்துவிட்டு, அவ்வப்போது அதில் படிப்பவர்களின் பட்டங்களை அங்கீகரிக்க மறுப்பதும், தேர்வு எழுதத் தகுதியில்லை என்று கடைசி நிமிஷத்தில் வெளியேற்றுவதும் சரியா என்பதை மத்திய, மாநில அரசுகளில் கல்வித்துறைக்குப் பொறுப்பானவர்கள் அனைவருமே சிந்திப்பது நலம்.

பெரும்பாலான ஊரக அரசுக் கல்லூரிகள், சில பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் மாணவர் அமைதியின்மையும், ஆசிரியர் பற்றாக்குறையும், அடித்தளக் கட்டமைப்பு வசதிக்குறைவால் மாணவர்களுக்குக் கற்பதில் இருக்கும் ஆர்வக் குறைவும் நிரந்தரமான அம்சங்கள். அத்தகைய கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களும் கிட்டத்தட்ட திறந்தநிலை பல்கலைக்கழக மாணவர்களின் தரத்திலேயே இருக்கின்றனர் என்பது ஆய்வுகளிலிருந்து தெரியவரும்.

""கல்வித்துறை'' என்று அழைத்தால் அது பத்தாம்பசலித்தனமாக இருக்கிறது என்று கருதி அதற்கு ""மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை'' என்று பெயர் வைத்து ஏதோ மிகப்பெரிய புரட்சியைச் செய்துவிட்டதைப்போல மத்திய ஆட்சியாளர்கள் பாவனை காட்டியபோது எரிச்சலாகத்தான் இருந்தது. என்ன செய்வது, மக்களவையில் பெரும்பான்மை இருந்தால் அவர்கள் எடுக்கும் எந்த முடிவும் தீர்மானமும் ""தெய்வீகத்தன்மை'' பெற்று புனிதம் அடைந்துவிடுகிறது. எனவே யாரும் கேள்வி கேட்க முடியாமல் இருக்கிறது. அப்படி மனித ஆற்றலை வளர்க்கத்தானே இந்த திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களையும் தொலைநிலைக் கல்வி நிலையங்களையும் கொண்டுவந்தனர்?

தகுதிக் குறைவான படிப்புகள்தான் இந்த திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் கற்றுத்தரப்படுகின்றன என்றால் இவற்றை எதற்காக அனுமதிக்கின்றனர்? இதில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்புக்கு இது உதவும் என்ற நம்பிக்கையில்தானே சேர்கின்றனர்? இந்த அடிப்படையையே நிராகரிக்கும் முடிவைத் தமிழகக் காவல்துறை அதிகாரிகள் எப்படி எடுத்தனர்?

பல்கலைக்கழகப் பட்டங்களைத் தரம் பிரித்து முத்திரை குத்தி, தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் திறன் தமிழகக் காவல்துறையில் உயர் அதிகாரிகளுக்கு உண்டா, அல்லது எதையும் சந்தேகிப்பது என்ற காவல்துறையின் அடிப்படைக் கோட்பாட்டின்படியே எடுத்த முடிவா?

இந்தியாவில் உயர் கல்விப்புரட்சிக்கு வித்திடும் நாற்றங்கால்கள் என்றல்லவோ இந்த திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களையும் தொலைநிலைக் கல்விக்கழகங்களையும் மக்கள் நினைக்கின்றனர்? இவையெல்லாம் இரண்டாம்தர கல்வி நிலையங்கள்தானா?

மத்திய, மாநில அரசு அமைப்புகளே இத்தகைய பட்டங்களை நிராகரித்தால் வெளிநாடுகளில் இவற்றுக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்?

வெறும் ஆத்ம திருப்திக்காகவோ, திருமண அழைப்பிதழில் பட்டதாரி என்று போட்டுக்கொள்ளவோதான் இந்த படிப்புகள் உரியவையா?

பத்தாவது வகுப்பு வரை தேர்வே கிடையாது என்று மாநில கல்வித்துறையும், எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதி பட்டம் வாங்கிக் கொள்ளலாம் என்று பல்கலைக்கழகங்களும் இப்போது கடைப்பிடிக்கும் நடைமுறைகளால் கல்வித்தரம் கெடாமல் உயர்நிலையை எய்திவிடுமா?

கணிதமேதை ராமானுஜத்துக்கு கணிதத்தைத்தவிர மற்ற பாடங்கள் எல்லாம் வேம்பு. அவற்றில் அவர் தேர்ச்சி பெறவில்லை. அதற்காக அவருடைய மேதைமை பொய் என்று ஆகிவிடுமா? கல்வி குறித்து நம்முடைய கல்வியாளர்களின் மனப்போக்கும் ஆட்சியாளர்களின் மனப்போக்கும் மாற வேண்டும். 35 மதிப்பெண்ணுக்குக் குறைவாக வாங்கினால் முட்டாள், 36 வாங்கினால் மேதாவி என்ற எண்ணம் மறைய வேண்டும்.

தரமற்ற கல்வி நிலையம், தரம் குறைந்த பட்டம் என்று காவல்துறை இந்த திறந்த நிலைப் பல்கலைக்கழகப் பட்டங்களை கருதுவது ஏன்?

Post a Comment

0 Comments