தமிழில் பெயர் பலகை: ஆளுநரிடம் மனு

புதுச்சேரி, ஜூலை 30: புதுச்சேரியில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்ற அரசு உத்தரவை செயல்படுத்த துணை நிலை ஆளுநர் டாக்டர் இக்பால்சிங்கிடம் தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

அனைத்து தமிழ் இலக்கிய கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்: தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று 1977-ல் வெளியிடப்பட்ட உத்தரவை செயல்படுத்தப்பட வேண்டும் என்று முதல்வர் வி.வைத்திலிங்கத்திடம் 2 முறை அண்மையில் மனு அளித்தோம். இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

பெயர்ப் பலகைகள் தமிழில் பெரிதாக எழுதி வைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை உடனே செயற்படுத்த ஆவண செய்யவேண்டும். பெரும்பாலான பெயர்ப் பலகைகள் ஒப்புக்காக மிகச்சிறிய அளவில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. அவையும் சரியான தமிழில் எழுதப்படவில்லை. பல நிறுவனங்கள் ஆங்கிலத்தில் மட்டும் பெரிதாகப் பெயர்ப் பலகைகளை வைத்துள்ளன. தமிழைப் புறக்கணித்துள்ளன.

அரசு உத்தரவையும் மாநில மக்களின் மொழி உரிமையையும் இழிவுபடுத்தும் இத்தவறான போக்கை நீக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்கிலத்தை மட்டும் மதிப்பது மக்களாட்சியை இழிவுபடுத்துவதாகும். ஆங்கில ஆட்சியை அகற்றிய பின்னரும் நம் தாய்மொழியை மதிக்காமல் அயலார் மொழியைப் பெரிதாக மதிப்பது தாய்நாட்டுப் பற்றில்லாதவர் செயலாகும்.

எனவே, மேற்குறித்த உத்தரவைச் செயற்படுத்துவதன் வாயிலாகத் தாய்மொழி உரிமையையும் அரசின் மதிப்பையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை கூட்டமைப்பைச் சேர்ந்த க.தமிழமல்லன் தலைமையில், பெ.பராங்குசம், கோ.சுகுமாரன், ப.திருநாவுக்கரசு, மு.பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.

1977 முதல் அரசு உத்தரவு சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை கூறியதும் ஆளுநர் வியப்படைந்து, தாம் அதைக் கவனிப்பதாகவும் கூறினார். அதைத் தொடர்ந்து சில நாள்களில் ஆளுநரின் தனிச்செயலர் இதுபற்றி தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தமிழ்க் கூட்டமைப்பினரின் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments