ம.தி.மு.க., - பா.ம.க.,வுக்கு மாநில கட்சி அங்கீகாரம் ரத்து

புதுடில்லி : புதுச்சேரியில் பா.ம.க.,வும், தமிழகத்தில் ம.தி.மு.க.,வும் மாநில கட்சி அந்தஸ்தை இழந்துள்ளன. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.

ஒரு கட்சியின் மாநில மற்றும் தேசிய கட்சி அந்தஸ்து தொடர வேண்டும் எனில், அந்தக் கட்சி முந்தைய லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத ஓட்டுகளைப் பெற்றிருக்க வேண்டும்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் ம.தி.மு.க.,வும், புதுச்சேரியில் பா.ம.க.,வும் 6 சதவீத ஓட்டுக்களைப் பெறவில்லை. அதனால், உங்களின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என, கேட்டு தேர்தல் கமிஷன் இந்த கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல, அருணாச்சல பிரதேசத்தில் அருணாச்சல் காங்கிரஸ், உத்தராஞ்சல் மற்றும் மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாடி, பீகார் மற்றும் ஜார்க்கண்டில் ஐக்கிய ஜனதா தளம் உட்பட ஏழு மாநில கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க திரிணமுல் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் கால அவகாசம் கோரியதால், அந்தக் கட்சிகளின் அங்கீகாரம் குறித்த முடிவு நேற்று வெளியாகவில்லை.

ம.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட ஐந்து கட்சிகள் அளித்த விளக்கத்தை பரிசீலித்த தேர்தல் கமிஷன், தமிழகத்தில் ம.தி.மு.க.,வுக்கும், புதுச்சேரியில் பா.ம.க.,வுக்கும் வழங்கப்பட்டிருந்த மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், பா.ம.க., தமிழகத்தில் மாநிலக் கட்சியாக தொடர்ந்து செயல்படும். இதேபோல, அருணாச்சல் காங்கிரஸ் (அருணாசல பிரதேசம்), சமாஜ்வாடி (உத்தராஞ்சல், மத்திய பிரதேசம்), ஐக்கிய ஜனதா தளம் (பீகார், ஜார்க்கண்ட்) கட்சிகளின் மாநிலக் கட்சி அங்கீகாரத்தையும் தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் ம.தி.மு.க.,வும்; புதுச்சேரியில் பா.ம.க.,வும் மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இழந்துள்ளன. குறைந்தது நான்கு மாநிலங்களில், மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ள கட்சிக்கு, தேசியக் கட்சி அங்கீகாரம் வழங்கப்படும்.

பீகார், ஜார்க்கண்ட், மணிப்பூர் மற்றும் நாகாலாந்தில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருந்த லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசியக் கட்சி அங்கீகாரத்தையும் தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது. ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் இக்கட்சிக்கு குறிப்பிட்ட சதவீத ஓட்டுகள் கிடைக்காததால், அதன் தேசியக் கட்சி அங்கீகாரம் ரத்தாகியுள்ளது. மாநில மற்றும் தேசிய கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டாலும், இந்தக் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட கட்சிகளே. அந்தக் கட்சிகள் தங்களின் சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், தேர்தல் நேரங்களில், தங்களின் பிரசாரத்திற்காக ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷனை பயன்படுத்திக் கொள்ள முடியாது. அந்த சலுகையை இழந்து விடுகின்றன. அத்துடன் வாக்காளர் பட்டியல் இலவச நகல்களும் இந்தக் கட்சிகளுக்கு வழங்கப்படாது. தேர்தல் கமிஷனால் நடத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கூட்டத்திலும் இந்தக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க முடியாது.

Post a Comment

0 Comments