கோஹினூர் வைரத்தை தர முடியாது: பிரிட்டன் பிரதமர் உறுதி


லண்டன்:உலகப் புகழ் வாய்ந்த கோஹினூர் வைரம் இந்தியாவுக்குத் திரும்ப வருமா என்ற சர்ச்சைக்கு, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். "கோஹினூர் வைரம் இந்தியாவுக்கு வந்துவிட்டால், பிரிட்டன் அருங்காட்சியகம் வெறுமையாகி விடும். அதனால், அது அங்கேயே தான் இருக்கும்' என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.

பிரிட்டன் ராணி பெருமையுடன் சூடிக் கொள்ளும் மணிமுடியின் உச்சியில், இந்தியாவுக்குச் சொந்தமான 105 காரட் எடை கொண்ட கோஹினூர் வைரம் திகழ்கிறது. ஆந்திராவின் கொல்லூர் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த வைரம் தான், ஒரு காலத்தில் உலகின் மிகப் பெரிய வைரமாக இருந்தது.விலை மதிப்பிட முடியாத இதன் வயது என்ன என்று சரியாகத் தெரியவில்லை. எனினும், இது பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பு, முகலாய மன்னர் பாபரிடம் இருந்து துவங்குகிறது. கி.பி., 1526லேயே அவர், இந்த வைரம் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவிலுள்ள மன்னர் பரம்பரைகளின் கைகளில் மாறி மாறிச் சென்று வந்த இவ்வைரம், கடைசியாக, சீக்கிய மன்னர் துலீப் சிங்கிடம் வந்து சேர்ந்தது. கி.பி., 1850ல் அவர் இதை அப்போதைய பிரிட்டன் அரசி விக்டோரியாவிடம் அளித்தார். அன்றிலிருந்து இன்று வரை பிரிட்டன் மணி மகுடத்தில் இவ்வைரம் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.இந்த வைரம், பிரிட்டனுக்கு வந்து சேர்ந்ததிலிருந்து இன்று வரை, "கோஹினூர்' என்ற பெயரில் 54 ரெஸ்டாரன்டுகள் உள்ளன.பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், இந்தியாவுக்கு மூன்று நாள் சுற்றுப் பயணமாக வரும் முன், இந்திய வம்சாவளியினரும், தொழிற்கட்சி எம்.பி.,யுமான கெய்த் வாஸ், பிரிட்டன் தன் காலனி ஆதிக்கத்தில் இந்தியாவை அடிமைப்படுத்தியதற்கு பரிகாரமாக, கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திரும்ப அளிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது என்று வேண்டுகோள் விடுத்தார்.இதற்கு முன், பாகிஸ்தான் பிரதமராக இருந்த ஜுல்பிகர் அலி புட்டோ, வைரம் பாகிஸ்தானுக்குச் சொந்தமானது என்பதால் அதை தங்களிடம் அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்தியா வந்திருந்த டேவிட் கேமரூன், ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இது பற்றி கூறும்போது,"கோஹினூர் வைரத்தைத் திருப்பி அளிக்க வேண்டும் என்று பல வேண்டுகோள்கள் வந்துவிட்டன. அதற்கு சரி என்று சொல்லிவிட்டால், அதன் பின் பிரிட்டன் அருங்காட்சியகம் வெறுமை அடைந்து விடும். சொல்வதற்கு தயக்கமாக இருந்தாலும், உங்களுக்கு அது திருப்தியளிக்காவிட்டாலும் வேறு வழியில்லை; அந்த வைரம் பிரிட்டனிலேயே தான் இருக்கும்' என்று கூறினார்.

Post a Comment

0 Comments