பொறுப்புடன் செயல்பட மக்கள் பிரதிநிதிகளுக்கு ஸ்டாலின் அறிவுரை


பட்டாபிராம் : மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து, மக்கள் தங்களுக்கு பதவி தரவில்லை, பொறுப்பு தந்திருக்கிறார்கள் என்று நினைத்து பணியாற்ற வேண்டும் என பட்டாபிராமில் நடந்த விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.



திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்ட பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட ஐந்து மேம்பாலங்கள் திறப்பு விழா, வண்டலூர் - நெமிலிச்சேரி வரை 1,082 கோடி செலவில் ஆறுவழி வெளிவட்டச் சாலை, போரூர் சிக்னல், முகப்பேர் கூவம் ஆறு, சடையங்குப்பம் பக்கிங்காம் கால்வாய் ஆகிய இடங்களில் மேம்பாலம் ஆகிய புதிய திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை அடுத்த பட்டாபிராமில் நேற்று நடந்தது.



துணை முதல்வர் ஸ்டாலின் பாலங்களை திறந்து வைத்து, புதிய திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்து பேசியதாவது: சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசு திட்டமிட்ட வண்டலூர் முதல் நெமிலிச்சேரி வரை வெளிவட்டச் சாலைக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளன. இத்திட்டத்திற்கான மூலக்காரணம் 1967ம் ஆண்டு அன்றைய முதல்வர் அண்ணாதுரை அமைச்சரவையில் இன்றைய முதல்வர் கருணாநிதி, பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த போது ஏற்பட்டது.அப்போதே, சென்னையில் இணைப்புச்சாலை இல்லாததால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்தார். தற்போது வண்டலூர் - நெமிலிச்சேரி வரை 1,082 கோடி செலவில் ஆறுவழி வெளிவட்டச் சாலைக்கான முதல் கட்ட பணிக்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதுஇந்த அரசு தேர்தல் சமயத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் பல்வேறு திட்டங்களை தொலை நோக்கு திட்டங்களோடு நிறைவேற்றி கொண்டு இருக்கிறது. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து, மக்கள் தங்களுக்கு பதவி தரவில்லை பொறுப்பு தந்திருக்கிறார்கள் என்று நினைத்து பணியாற்ற வேண்டும் என்றார்.



மேலும் இவ்விழாவில் அமைச்சர்கள் சாமிநாதன், சாமி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments