இலங்கைக்கு வெளியுறவுச் செயலர் நிருபமா இன்று பயணம் : தமிழர் பகுதிகளில் ஆய்வு


புதுடில்லி : இலங்கைத் தமிழர் பகுதியில் நடக்கும் மறு வாழ்வு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், இன்று இலங்கை செல்கிறார். வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொள்கிறார்.



இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர், கடந்தாண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து, முகாம்களில் வசித்து வந்த தமிழர்களை, அவர்களது சொந்த ஊர்களில் மறு குடியமர்த்தும் பணியையும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடக்கும் புனரமைப்புப் பணிகளை தீவிரப்படுத்தும்படியும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கையை வலியுறுத்தின.இதைத் தொடர்ந்து, முகாம்களில் வசித்து வரும் தமிழர்கள் படிப்படியாக அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, மறு குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இலங்கைத் தமிழர்களின் மறு வாழ்வு பணிகளுக்காக இந்திய அரசு சார்பிலும் பெருமளவில் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும், மத்திய அரசு உறுதி அளித்தது.இந்நிலையில், மறு குடியமர்த்தும் பணிகளையும், புனரமைப்புப் பணிகளையும் தீவிரப்படுத்தும்படி இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும் என, தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. பார்லிமென்டிலும், சமீபத்தில் இதுறித்து தமிழக எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.



இதையடுத்து, மத்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகம் வந்து, முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார். பின்னர் அவர், "இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து ஆய்வு செய்வதற்காக, விரைவில் இந்தியா சார்பில் சிறப்பு அதிகாரி ஒருவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்' என்றார். வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும், இதுகுறித்து ராஜ்யசபாவில் உறுதி அளித்தார்.



இந்நிலையில், வெளியுறவு செயலர் நிருபமா ராவ், மூன்று நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார். யாழ்ப்பாணம், திரிகோணமலை, வவுனியா உள்ளிட்ட தமிழர் பகுதிகளுக்கு செல்லும் அவர், அங்கு நடக்கும் புனரமைப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார். இலங்கையின் மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களையும் அவர் சந்தித்து பேசவுள்ளார். அப்போது அவர், தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வை விரைவில் செயல்படுத்தும்படியும், புனரமைப்புப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளும்படியும் வலியுறுத்துவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும் விரைவில் இலங்கை செல்லவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் நிருபமா ராவ், இலங்கை அதிகாரிகளுடன் விவாதிக்கவுள்ளார்.



இரு நாட்டு உறவை மேலும் பலப்படுத்துவதற்கான விஷயங்கள் குறித்தும் அவர் பேசுவார் என்றும் இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் ஹம்பன்தெடாவில் மிகப் பெரிய அளவிலான துறைமுகத்தை அமைத்துக் கொடுக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் குறித்து நன்கறிந்த நிருபமாவின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவின் இலங்கை பயணம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

Post a Comment

0 Comments